ஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்! – சம்திங் சந்திப்புகள்

காயம் மேலே பாதாளம் கீழே…. ஆனந்த உலகம் நடுவினிலே” என்று பாடிக்கொண்டே உள்ளே நுழைந்த கழுகாரிடம், “செய்தியுடன் வருவீர் என்று பார்த்தால், பாடலுடன் வருகிறீரே” என்று கேட்டதும் ‘‘சொல்கிறேன்!’’ என்று புன்னகையுடன் நம் முன் அமர்ந்தார்.

‘‘ராவ் ரகசியங்கள் என்று கடந்த இதழில் நீர் சொன்னது போலவே சந்திப்பும் நடந்தேறிவிட்டதே?’’


‘‘சந்திப்பு பெரிய விஷயம் இல்லை… அதற்குப் பின்னால் சந்தடிசாக்கில் பல்வேறு அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்துள்ளன… அவைதான் இந்தச் சந்திப்பின் ஹைலைட்ஸ்!’’

‘‘கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக்கூடாதா?’’

‘‘சந்திரசேகர ராவை பி.ஜே.பி–யின் ‘பி’ டீமாகவே அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பார்க்கிறார்கள். அதற்கு ஒரு காரணமும் உண்டு. தெலங்கானாவின் சட்டமன்றத் தேர்தல், ஆந்திர மாநிலத் தேர்தலுடன் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு, நான்கு மாநிலத் தேர்தல்களுடன் தெலங்கானாவுக்கும் தேர்தல் நடத்துவதற்கு மறைமுகமாக பி.ஜே.பி–யிடம் உதவி பெற்றார் சந்திரசேகர ராவ். அதற்குப் பிரதிபலனாக நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி–க்கு உதவி செய்வதாகச் சொல்லியிருந்தார் ராவ். அதைப் பற்றித்தான் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். ஆனால், இப்போது காங்கிரஸ் கை ஓங்கிவிடும் என்று சந்திரசேகர ராவ் நம்புகிறார்!’’

‘‘எப்படிச் சொல்கிறீர்?’’

‘‘சந்திரசேகர ராவ், கர்நாடக முதல்வர் குமாரசாமியைத் தொடர்புகொண்டு காங்கிரஸ் பக்கம் சாயும் தனது ஆசையை வெளிப்படுத்தி யிருக்கிறார். அதற்கு அவர், ‘நான் ராகுல் காந்தியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்று சொன்னாராம். ராகுல் காந்தி தரப்பிடம், சந்திரசேகர ராவ் விஷயம் பற்றி குமாரசாமி பேச, ‘அவரை நம்ப முடியாது. அவர் யாருக்கும் விசுவாசமாக இருக்கமாட்டார். தேர்தல் முடிவுகள் வரும்வரை அவரிடம் எந்த உறுதியும் கொடுக்க வேண்டாம்’ என்று தகவல் சொல்லப்பட்டதாம். தொடர்ந்து, ‘தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று ராகுல் காந்தி நினைப்பதாக பாலிஷாகச் சொல்லி ஒதுங்கிக்கொண்டார் குமாரசாமி. அதன்பிறகே ஸ்டாலின் சந்திப்பை முடிவுசெய்தார் ராவ்.’’

 

‘‘ஒரு வாரத்துக்கு முன்பே சந்திப்புக்கு நேரம் கேட்டவரை திங்கள் அன்றுதானே ஸ்டாலின் சந்தித்திருக்கிறார்?’’

‘‘காங்கிரஸ் தரப்பு ஏதும் நினைத்துக்கொள்ளும் என்று ஒரு காரணம் சொல்லப்பட்டாலும், அதையும் தாண்டி மருமகன் சபரீசனின் முடிவுக்காக ஸ்டாலின் காத்திருந்திருக்கிறார் என்கிறார்கள். ஸ்டாலின் தரப்பு தாமதம் செய்ததால், தமிழகத்தில் ஐந்து நாள்கள் ஆன்மிக சுற்றுலாவுக்குச் சென்றுவிட்டார் சந்திரசேகர ராவ். ஆனாலும் எப்படியும் ஸ்டாலினுடன் சந்திப்பை நடத்திவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார் ராவ்.’’

‘‘ம்!’’

‘‘சபரீசன் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுவிட்டு மே 13-ம் தேதி அதிகாலையில்தான் சென்னை திரும்பும் திட்டத்தில் இருந்துள்ளார். ஆனாலும் நாடு திரும்பும் தேதி மட்டும் உறுதியாகவில்லையாம். எனவே, அதுவரை சந்திரசேகர ராவின் சந்திப்பைத் தள்ளிப்போட்டிருக்கிறார்கள். கடைசியில், மருமகன் நாடு திரும்பும் தேதி முடிவாகி, ராவ் சந்திப்புக்கு ஓ.கே சொல்லிய பிறகே சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், சந்திப்பில் துரைமுருகன் மற்றும் டி.ஆர். பாலு ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்றார்களாம். அந்தச் சமயத்தில் வீட்டிலிருந்தாலும் சபரீசன் இதில் பங்கேற்கவில்லையாம்.’’

‘‘இந்தச் சந்திப்புக்கு காங்கிரஸ் கட்சியின் ரியாக்‌ஷன் என்னவோ?’’

‘‘வேறென்ன… பலரும் கடுப்பில் இருக்கிறார்களாம். தி.மு.க தரப்பிடம் இதுபற்றி பேச கட்சித் தலைமை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியைப் பணித்துள்ளது. அவரும் தி.மு.க தரப்பில் பேசி, அவர்கள் சொன்ன ‘மரியாதை நிமித்தமான’ விவரங்களை டெல்லிக்கு பாஸ் செய்துள்ளார்.’’

‘‘நிஜமாகவே இந்தச் சந்திப்பால் தி.மு.க அணி மாறும் நிலை இருக்கிறதா?’’

‘‘அப்படியெல்லாம் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு ‘துண்டு’ போட்டு வைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், சந்திரசேகர ராவ் அணி மாற ஆசைப்படுவதற்காகவே இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது என்று அடித்துச் சொல்கிறார்கள் சிலர். அதாவது, தன்னை முந்திக்கொண்டு சந்திரபாபு நாயுடு சுழல ஆரம்பித்துவிட்டார். ஒருவேளை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும் பட்சத்தில் நாயுடுவின் கை ஓங்க ஆரம்பித்துவிடும். அதனால், அந்தப் பக்கமும் ஒரு துண்டு போடும் வகையில்தான் ராவ் இப்படி களத்தில் சுழல்கிறாராம். எப்படியும் நாயுடுவுக்குப் போதுமான எம்.பி-க்கள் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், தனக்கு 17 எம்.பி-க்கள் நிச்சயம் என்று நம்பும் ராவ், துணைப் பிரதமர் பதவியைப் பெற்றுவிடலாம் என்றும் கணக்குப் போடுகிறாராம்.’’

‘‘அடேங்கப்பா… மாயாவதி, அகிலேஷை யெல்லாம் மிஞ்சிவிடுவார் போலிருக்கிறதே!’’

‘‘அதேதான். காங்கிரஸ் தயவிருந்தால் அதைச் சாதித்துவிடலாம் என்றுதான் ஸ்டாலின் மூலம் தன் ஆசையை ராகுலுக்குத் தெரியவைக்க இந்தச் சந்திப்பாம். ‘நான் காங்கிரஸ் அணிக்கு வந்தால், போனஸாக ஜெகன்மோகன் ரெட்டியும் என் பின்னால் வந்துவிடுவார். ஆந்திரத்தின் அடுத்த முதல்வர் அவர்தான். அவருடைய கட்சிக்கு நான்தான் தேர்தல் செலவு செய்திருக்கிறேன்’ என்றும்கூட சொன்னாராம் ராவ். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ‘பார்க்கலாம்’ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம் ஸ்டாலின்!’’

‘‘ஒருவேளை பி.ஜே.பி முன்னிலை பெற்றுவிட்டால்?’’

‘‘திடீர் என்று சந்தித்து அதைப் பற்றி பேசுவதற்குத் தயக்கமாக இருக்கும். இப்போதே சந்தித்துவிட்டதால், அதற்கும்கூட இதே சந்திப்பு கைகொடுத்துவிடும்தானே? ஏற்கெனவே ஜெகன் மோகன் ரெட்டியும் சந்திரசேகர ராவும் பி.ஜே.பி-யுடன் நெருக்கம்தானே! நாளைக்கு ஒரே ஒரு போன் கால்… பிளேட்டைத் திருப்பிப் போட்டால் வேலை முடிந்துவிடும்.’’

 

‘‘ஆழ்வார்பேட்டை சந்திப்பு சரி. ஆகாயத்தில் ஒரு சந்திப்பு நடந்ததாமே?’’

‘‘ஓ… அந்தச் சந்திப்பும் முக்கியமானதுதான். கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையிலிருந்து மதுரை செல்ல விமானத்தில் டிக்கெட் புக் செய்யப்பட்டது. முதல்வருக்கு ஒதுக்கப்பட்ட சீட் எண் 1 D. ஆனால், அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமராமல், அதற்கு அடுத்த சீட்டான 1 F-ல் அவர் அமர்ந்திருக்கிறார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பின்னால் இருந்த ஒரு வி.ஐ.பி, முதல்வரின் அருகில் காலியாக இருந்த சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டார்… மணல் அதிபர் சேகர் ரெட்டிதான் அவர். அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட் எண் 3 A. ஆனால், முதல்வர் அருகில் வந்து அமர்ந்தவர், அரைமணி நேரம் முதல்வருடன் சீரியஸாகப் பேசிக்கொண்டே வந்திருக்கிறார்!’’

‘‘கழுகுப் பார்வையில் பார்த்தீரோ?’’

‘‘திட்டமிட்ட சந்திப்பாகவே ஆகாயத்தில் நடைபெற்றுள்ளது. மதுரையில் விமானம் இறங்கும் முன்பு, ரெட்டி சத்தமில்லாமல் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்குச் சென்று அமர்ந்துவிட்டார். ரெட்டி, ஒருகாலத்தில் பன்னீரின் நண்பராகவே பார்க்கப்பட்டார். ஆனால், பன்னீரை ஓரம்கட்டும் வேலையில் தீவிரமாக இருக்கும் எடப்பாடி, இப்போது பன்னீருக்கு நெருக்கமான ரெட்டியை வளைக்கத் திட்டமிடுகிறார் என்கிறார்கள்’’ என்ற கழுகார், தன் மொபைல் போன் அலறலுக்குக் காது கொடுத்தார். எதிர்முனைக்குத் தொடர்ந்து ‘உம்’ கொட்டியவர்,

‘‘மூன்றாவதாக ஒரு சந்திப்பும் நடந்துள்ளது. கோவை லாட்டரி மார்ட்டின் விஷயத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சிக்கியுள்ளன. அதில் குறிப்பிட்ட ஒரு கட்சி தொடர்பான ஆவணங்கள் டெல்லி பி.ஜே.பி தலைமை வரை போய்விட்டது. பதறிப்போன அந்தக் கட்சியின் முக்கியப்புள்ளி, தன் சார்பாகக் குடும்ப உறுப்பினர் ஒருவரை குஜராத்துக்கு அனுப்பியிருக்கிறார். வடநாட்டு விஷயங்களை எல்லாம் பேசி முடிப்பதில் வல்லவரான அந்தக் குடும்ப உறுப்பினர், குஜராத்தில் முக்கியமான ஒரு பிரமுகரின் மால் ஒன்றில் வைத்து பி.ஜே.பி-யின் அசகாய சூரரான அந்தத் தலைவரைச் சந்தித்து டீல் பேசி முடித்துவிட்டாராம்.’’

‘‘பலே பலே.’’

‘‘இறுதியாக ஒரு தகவல்… கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழக வி.வி.ஐ.பி ஒருவர் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். இந்த வி.வி.ஐ.பி-தான் எடப்பாடிக்கும் டெல்லி பி.ஜே.பி தலைமைக்கும் முன்பு ரூட் போட்டவர். அவரை, ‘தமிழக ராஜகுரு’ தனியே சந்தித்தாராம். இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்த சந்திப்பின் ரியாக்‌ஷன், மே 23-க்குப் பிறகு தெரியும்’’ என்று சொல்லிவிட்டுச் சிறகு விரித்தார் கழுகார்.


மடத்துக்குள் ஆடிட்டர் ஆட்சி!

காஞ்சி மடத்தில் விஜயேந்திரர் நிலை குறித்தும், ஆடிட்டர் ஒருவரின் மறைமுக நெருக்கடி குறித்தும் கடந்த ‘மிஸ்டர் கழுகு’ பகுதியில் செய்தி வெளியான பிறகு மடத்தின் நிர்வாகி ஒருவர், சம்பந்தப்பட்ட ஆடிட்டரைச் சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பேசியிருக்கிறார். மடத்தின் கணக்கு வழக்கு குறித்தும், கல்வி நிறுவனங்களில் உள்ள சிக்கல்கள் பற்றியும் அப்போது பேச்சு எழுந்திருக்கிறது. நிர்வாகி சந்திப்பு நடைபெற்ற மறுநாள் மடத்தின் தலைமைத் தரப்பிலிருந்து ஆடிட்டரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு 45 நிமிடங்கள் பேசப்பட்டிருக்கிறது. மடத்தின் விவகாரம் வெளியே கசிந்தது குறித்து இரு தரப்பும் பேசியதாகத் தகவல். ‘இனிதான் காஞ்சி மடத்தின் கறைகள் ஒவ்வொன்றாக வெளியே வரப்போகிறது’ என்று கண் சிமிட்டுகிறார்கள் மடத்தின் உள் விவரங்கள் அறிந்தவர்கள்!

%d bloggers like this: