மிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்!

காரம்’ என்ற சொல் உச்சரிக்கப்பட்டதும் அனைவரது நினைவிலும் சட்டென துளிர்ப்பது `மிளகாய்’. சமீப காலமாக மற்ற அஞ்சறைப் பெட்டி பொருள்களைவிட அதிக அளவில் பயன்படுவது இதுதான்.

உலகப்புகழ் பெற்ற கோங்குரா, மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களின் விறுவிறு விற்பனைக்கு, சுறுசுறுவென வெம்மை தரும் மிளகாயின் தனித்துவமும் முக்கியக் காரணம். உண்ணும் நாக்கையே தீயாக எரியச் செய்தாலும், கண்களிலிருந்து கண்ணீரைத் தாரை தாரையாக வெளியேற்றினாலும் மிளகாய் மீதான நமது பாசம் எள்ளளவும் குறைவதில்லை.

ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குட மிளகாய், காட்டு மிளகாய் எனப் பல்வேறு வகையில் நாவுக்கு காரத்தின் உணர்வைத் தெரிவிக்கின்றன மிளகாய்கள். உலகம் முழுவதும் 3,000 வகை மிளகாய்கள் இருக்கின்றன. மிளகாயின் அளவு குறையக் குறைய, அதன் சிவப்பு நிறம் கூடக் கூட, அதன் காரத்தன்மை அதிகரிக்கும்.

மணமும் காரமும் மிக்க `மணாலி’ மிளகாயை லேசாக வறுத்து, நன்றாகப் பொடியாக்கி, லடாக் பகுதியின் வீடுதோறும் பயன்படுத்துகின்றனர். சிவப்பு நிறம் ஏறாமல் பச்சை நிறத்தில் ஊறுகாய் தயாரிக்க `கொள்ளப்படு’ ரக மிளகாயைப் பயன்படுத்துகின்றனர், ஆந்திர மாநில மக்கள். சிறிய உருண்டை வடிவமுடைய சிக்கிம் மிளகாய்களை, அம்மாநில மக்கள் பச்சையாகவோ, காரம் நிறைந்த சட்னியாகவோ அரைத்துச் சாப்பிடுகிறார்கள்.

`ஏழைகளின் மிளகு’ என்றழைக்கப்படும் மிளகாயைக் கண்டு பிடித்தது கொலம்பஸ் என்கிற குறிப்பு இருக்கிறது. அதாவது, மிளகின் இருப்பிடத்தைத் தேடி கொலம்பஸ் பயணிக்கும்போது, எதிர்பாராதவிதமாக, அமெரிக்காவில் மிளகாயைக் கண்டுபிடித்தாராம். இந்தியாவில்

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்புதான் போர்ச்சுக்கீசியர் களால் ‘கோவா’ பகுதியில் மிளகாய் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு மிளகும் திப்பிலியுமே நமது பிரதான காரமூட்டிகள். முகலாய ஆட்சியின் கடைசிக் கட்டத்தில்தான் நாடு முழுவதும் மிளகாயின் பரவல் தொடங்கியிருக்கிறது.

இந்தியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் கரீபிய சமையலில் முக்கிய அங்கம் வகிக்கிறது மிளகாய். மெக்ஸிகோவின் `சல்ஸா’ (Salsa), மலேசியாவின் ‘சம்பல்’ (sambal), கொரியாவின் `கிம்சி’ (kimchi) எனப் பல்வேறு உணவுகளுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பது மிளகாயே. இதன் வியர்வை பெருக்கும் செய்கைக்காகவே கரீபிய மக்கள், மிளகாய் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

மிளகாயை அளவாகப் பயன்படுத்தினால் உடல் உறுப்புகள் புத்துணர்ச்சியுடன் செயல்படும். மிளகாயில் உள்ள `கேப்சைசின்’ (Capsaicin) எனும் ஆல்கலாய்டு, அதன் காரத்துக்கும் மருத்துவ குணத்துக்கும் காரணகர்த்தா. குறிப்பாக, விதைகளிலும் விதைகளைத் தாங்கியிருக்கும் ஜவ்வு போன்ற அமைப்பிலும் அதன் இருப்பு அதிகம். வண்ண வண்ண குட மிளகாய்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள்கள் மிகவும் அதிகம். குழம்பு அல்லது பொரியலாகச் செய்து அதன் பலன்களைப் பெறலாம். பச்சை மிளகாயில் நலம் பயக்கும் ‘ரூடின்’ (Rutin) எனும் ஃபிளேவனாய்டு நிறைந்துள்ளது.

செரிமானத்தை விரைவுபடுத்துவதுடன், நுரையீரல் பாதையில் சிறைபட்டிருக்கும் சளிப்படலத்தையும் முறையாக வெளியேற்றும் சக்தி மிளகாய்க்கு உண்டு. அதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, உற்சாகத்துடன் செயல்படவைக்கும். இதிலுள்ள `கேப்சைசன்’ சிறந்த வலி நிவாரணியும்கூட என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள். ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதை மிளகாய் தடுப்பதாக, தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு தெரிவிக்கிறது.

மனச்சோர்வுப் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கவும் மிளகாய் பயன்படுகிறது. மிளகாய், வெங்காயம், பூண்டு, சீரகம் போன்ற நறுமணமூட்டிகள் கூட்டாகச் சேரும்போது, உணவுகளில் பாக்டீரியாக்களின் தாக்கம் அவ்வளவு சீக்கிரமாக ஏற்படாதாம்.

‘மந்தம் அரோசிகுன்மம் வாய்வும் பொருமலும் போம்…’ எனும் அகத்தியர் குணவாகடப் பாடல், மிளகாயின் பயன்களைப் பட்டியலிடுகிறது. ‘பசித்தூண்டி, ஆண்மைபெருக்கி போன்ற செய்கைகளும் மிளகாய்க்கு உண்டு. மிளகாய்ச்செடியுடன் லவங்கப்பட்டை மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சிய குடிநீரைக் குடித்தால், குடியின் மீதான விருப்பம் குறையும் என்கிறது சித்த மருத்துவம்.

நீளமான மிளகாய்களை உப்புத் தண்ணீரில் ஊறவைத்து, உலரச் செய்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து உணவுடன் சாப்பிடும் வழக்கம் கர்நாடகாவில் தொடர்கிறது. பச்சை மிளகாய், கீரை ரகங்களைக் கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து, ஊட்டமும் காரமும் நிறைந்த `மிஸ்ஸி ரொட்டி’யைத் தயாரித்து உறவுகளுக்குப் பரிமாறலாம்.

பஜ்ஜி செய்வதற்குப் பயன்படும் மிளகாயின் உள்ளே இறைச்சித் துண்டுகளைத் திணித்து, சுவைமிக்க சிற்றுண்டி தயாரிக்கலாம். கத்திரிக்காய் சமைப்பதைப் போலவே, பஜ்ஜி மிளகாயையும் உணவுகளில் செய்து பார்க்கலாம். மஞ்சள் மிளகாயுடன் தயிர் மற்றும் கடலை மாவு சேர்த்து அரைத்து மீன் மற்றும் இறைச்சி வகைகளுக்கு முலாம் பூசி சமைக்கும் வழக்கம் பழைய டெல்லி பகுதியில் பின்பற்றப்படுகிறது. காரம் அதிகமுள்ள மிளகாய் வடை பற்றிய குறிப்பு குஜராத்திய நூலில் காணப்படுகிறது.

காய்ந்த மிளகாயை எண்ணெயில் வதக்கித் தாளித்து, அப்படியே சாம்பார், குழம்பு, சட்னி ரகங்களில் பதமாகச் சேர்க்கும் சூட்சுமத்தில்தான், உணவின் ருசி அமைகிறது. கம்பங்கூழுக்கும் கேழ்வரகு கூழுக்கும் தொடு பொருளாக வழங்கப்படும் உப்பு சேர்த்த உலர்ந்த மிளகாய், நாவில் முறையான சுவையைப் பொருத்தக்கூடியது. பசியை அதிகரிக்க காய்கள் சேர்ந்த சாலட்டுகளில் மிளகாய் சீவல்களைத் தூவலாம்.

மிளகாயின் பயன்பாடு அதிகமானால், வயிற்றுப் புண், பேதி, மூலம், ஆசனவாய் எரிச்சல் போன்ற பிரச்னைகள் செலவில்லாமலே கிடைக்கும். பித்த தேகம் உடையவர்கள் மிளகாயின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது அவசியம். `அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதற்கு மிளகாய் சிறந்த உதாரணம், கவனம்!

உலர்ந்த மிளகாய்களை உணவுகளில் சேர்க்கும்போது ஏற்படும் சுவை மற்றும் மணத்துக்கும், பச்சை மிளகாய்களைப் பயன்படுத்தும்போது உண்டாகும் சுவை மற்றும் மணத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. தனி மிளகாய்த் தூள் தயாரிக்க மெல்லிய தோல் கொண்ட மிளகாய்கள் சிறந்தவை. மசாலாப் பொடி கலவையில், கனத்த தோலுடைய மிளகாய்களைத் தேர்வுசெய்யலாம்.

காய்ந்த மிளகாய்களை நேரடியாக வாங்கி, வெயிலில் நன்றாக உலரச்செய்து அரைத்து வைத்துக்கொள்வது நல்லது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் செக்கச் செவேல் மிளகாய்ப் பொடிகளில், பாதிப்புகளை உண்டாக்கும் செயற்கை நிறமிகள் இருக்கக் கூடும். மிளகாயை வாங்கும்போது, அது திடமாக இருக்கிறதா என்றும், அதன் தோல் பளபளப்புடன் இருக்கிறதா என்றும் பரிசோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். சுருக்கம் இருந்தால், அது உலரத் தொடங்கிவிட்டது என்று பொருள்.

காய்ந்த மிளகாய்களை வாங்கும்போது அதன் நிறம் மங்காமல் இருப்பது முக்கியம். மிளகாய்களை மெல்லிய துணியில் முடிந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில வாரங்களுக்குப் பாதுகாக்கலாம்.

மிளகாய்… அஞ்சறைப் பெட்டியின் உற்சாகம் மற்றும் உடலுக்கான கார மருந்து!


காரப் பிரியர்களே!

மிளகாய் சப்ஜி: ஒரு கடாயில் ஒரு கிராம் சீரகம், கால் டீஸ்பூன் பெருங்காயம், ஒரு டீஸ்பூன் மஞ்சள், நறுக்கிய மிளகாய்த் துண்டுகள் (8-10) சேர்த்து எண்ணெய்விட்டு லேசாக வதக்கவும். பிறகு, அரை கப் கடலை மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுத்ததாக உப்பு, ஒரு டீஸ்பூன் துருவிய தேங்காய், அரை கப் அரைத்த நிலக்கடலை, சிறிது மசாலாப் பொடி சேர்த்து நன்றாகக் கிளறவும். கடைசியாகத் தண்ணீர் சேர்த்து, சிறு தீயில் எரித்து, மிளகாய் நன்றாக வெந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலைகளை அதன் மேலே தூவி பரிமாறலாம். ராஜஸ்தானியர்களின் சுவைமொட்டுகளில் காரத்தை உணர்த்தும் உணவு ரகம் இது. 

மிளகாய் ஊறுகாய்: மிளகாயின் உள்ளே பல்வேறு நறுமணமூட்டிகளைத் திணித்து, எண்ணெயில் ஊறவைத்துத் தயாரிக்கப்படும் மிளகாய் ஊறுகாயை ரொட்டி ரகங்களுக்கு தொட்டுச் சாப்பிட வடநாட்டு மக்கள் பிரியப்படுகிறார்கள்.

மெக்ஸிகன் சில்லி டிலைட்: கால் கப் மிளகாய்த்தூள், அரை கப் வினிகர், மூன்று பூண்டுப் பற்கள், இரண்டு டீஸ்பூன் புதினா, தேவைக்கேற்ப உப்பு, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு, தலா அரை டீஸ்பூன் பொடித்த கிராம்பு மற்றும் லவங்கப்பட்டை போன்றவற்றை பசைபோல அம்மியில் அரைத்துக் கொள்ளுங்கள். அசைவத் துண்டுகளின் மீது இந்த பசையைத் தடவி `கிரில்’ ரகத்தில் சுட்டு சுவைக்கலாம். மெக்ஸிகோ நாட்டில் அசைவ ரகங்களுக்கு காரச் சுவையைக் கொடுக்க, மேலேசொன்ன நறுமணமூட்டிகளின் பசையைப் பயன்படுத்துகின்றனர்.

சிச்சுவான் சிக்கன்: இறைச்சித் துண்டுகளை சிவப்பு மிளகாய்ப் பசையில் ஊறவைத்து, எண்ணெயில் வறுத்துத் தயாரிக்கப்படும் காரம் வழிந்தோடும் சிற்றுண்டி, சீனாவின் சில   பகுதிகளில் ஸ்பெஷல்.

மிளகாய்த் தைலம்: மிளகாயை ஆமணக்கு எண்ணெயில் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, வீக்கத்துடன் வலி உள்ள மூட்டுகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

மிளகாய்ப் பசை: மிளகாய், பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து, நல்லெண்ணெயில் குழைத்து வீக்கங்களுக்குப் பற்று போடலாம்.

%d bloggers like this: