மருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்

பெயருக்கு ஏற்றாற்போல, அதீத புளிப்புச் சுவையைக்கொண்டது புளிச்சகீரை. தமிழகத்தைவிட, ஆந்திராவில் இதன் பயன்பாடு அதிகம். அங்கே ‘கோங்குரா’ என அழைக்கப்படுகிறது. கோங்குரா பச்சடி, கோங்குரா சட்னி… என புளிச்சகீரையைப்  பயன்படுத்தி பல ரெசிப்பிகள் செய்யப்படுகின்றன. புளிச்சகீரையில் செய்யப்படும் மற்றொரு சுவையான ரெசிபி கோங்குரா மசியல்.

பலன்கள்:

* நீர் கோத்தல் பிரச்னை உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, புளிச்சகீரை மசியல் சிறந்த உணவு.

* புளிச்சகீரையில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

* வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், சருமப் பாதுகாப்புக்கு நல்லது.

* ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

* உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

* முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.

* மலச்சிக்கலைத் தடுக்கும்.

* உடல் வலிமைக்கு உதவும் என்பதால், குழந்தைகளுக்கு ஏற்றது.  

* எலும்புகள் வலுப்பெறும்.

 

நன்மைகள் பல இருந்தாலும், அளவுக்கு மீறி இந்த மசியலைச் சாப்பிட்டால், வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். சரும ஒவ்வாமை, சிறுநீரகக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாரத்துக்கு ஓரிரு முறை மட்டுமே இதைச் சாப்பிடலாம். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள், இதைத் தவிர்ப்பது நல்லது.

தேவையானவை:

புளிச்சகீரை    : ஒரு கட்டு

பெரிய வெங்காயம் : 2

பச்சை மிளகாய் : 4

காய்ந்த மிளகாய் : 2

நல்லெண்ணெய் : ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு :
தேவையான அளவு

உளுத்தம்பருப்பு, கடுகு    : தலா ஒரு டீஸ்பூன்

பூண்டு : 4 பற்கள்

மஞ்சள்தூள் : ஒரு டீஸ்பூன்

வெந்தயத்தூள் : அரை டீஸ்பூன்

குறிப்பு: பெரிய வெங்காயத்தை, பொடியாக நறுக்கிப் பயன்படுத்தவும். புளிச்சகீரையைத் தண்ணீரில் அலசி, வடிகட்ட வேண்டும்.

 

செய்முறை: வாணலியில் சிறிது நீர்விட்டு புளிச்சகீரை, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து,  சில நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். நன்றாகக் கொதித்து நீர் வற்றியதும், மூன்றையும் மசித்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும். இன்னொரு வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்க வேண்டும். பிறகு வெங்காயம், மஞ்சள்தூள் சேர்க்க வேண்டும். இப்போது, தயாராக உள்ள புளிச்சகீரை மசியலை சேர்த்துக் கிளற வேண்டும். நன்றாகக் கொதித்துவரும்போது, வெந்தயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அசத்தலான புளிச்சகீரை மசியல் ரெடி!

இந்த மசியலை சாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்துச் சாப்பிடலாம். எண்ணெய் அதிகமாகச் சேர்த்தால், மூன்று நாள்கள்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

%d bloggers like this: