நான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன?

திருப்பரங்குன்றம் – ஜொலிக்குது சூரியன்!
தி
ருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வில் முனியாண்டி, தி.மு.க-வில் டாக்டர் சரவணன், அ.ம.மு.க-வில் மகேந்திரன் போட்டியிடுகின்றனர். இங்கே பிரசாரத்தைச் சரியாக முடித்தார்களோ இல்லையோ… பணப் பட்டுவாடாவை கச்சிதமாக முடித்துவிட்டன அரசியல் கட்சிகள். பண விநியோகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பறக்கும் படையினர், திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாமி கும்பிட வந்தவர்களின் வாகனங்களைச் சோதனை செய்து ஃபிலிம் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாக மே 15-ம் தேதி வில்லாபுரத்தில் பண விநியோகம் செய்த அ.தி.மு.க-வினர் நான்கு பேரை பணத்துடன் பிடித்துக் கைதுசெய்தனர்.

தி.மு.க-வுக்கு அவர்களின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க-வில், கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் பிரசாரம் செய்ய அழைக்கவில்லை. வான்டடாக பிரசாரம் செய்யவந்த ஹெச்.ராஜாவை, அ.தி.மு.க-வினர் எந்தத் தகவலும் சொல்லாமல் திருப்பி அனுப்பினார்கள். ‘பிரசாரம் எல்லாம் தேவை இல்லை; பணத்தைச் சரியாக விநியோகித்தாலே வெற்றி கிடைத்துவிடும்’ என்று காதுபடவே நிர்வாகிகள் பேசுவதைக் கேட்க முடிகிறது. அ.தி.மு.க தரப்பில், நான்காயிரமும் தி.மு.க தரப்பில், இரண்டாயிரமும் அ.ம.மு.க தரப்பில் ஆயிரமும் தரப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இன்றையச் சூழலில், சூரியன் ஜொலிக்கிறது. கிட்டத்தட்ட ஒட்டி ஓடிவருகிறது இலை.


அரவக்குறிச்சி – ‘ஆக… ஆக… ஆக!’
ணப் பட்டுவாடா, வேட்பாளர்களின் கலர் கலரான வாக்குறுதிகள் என்று பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது அரவக்குறிச்சி தொகுதி. அ.தி.மு.க-வின் செந்தில் நாதனும், தி.மு.க-வின் செந்தில் பாலாஜியும் தொகுதியில் மெஜாரிட்டியாக உள்ள கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், அந்த ஓட்டுகளைப் பிரிப்பதால், தொகுதியில் இருக்கும் சுமார் அறுபதாயிரம் இஸ்லாமியர் ஓட்டுகளே வெற்றியை முடிவு செய்யும் இடத்தில் இருக்கின்றன.

அ.ம.மு.க வேட்பாளர் பி.ஹெச்.ஷாகுல் ஹமீது, அந்த வாக்குகளைச் சிதறடிப்பார் என்றாலும் ‘மொத்தமுள்ள பள்ளபட்டி இஸ்லாமியர் வாக்குகளில், சுமார் 18,000 வாக்குகள் வரை பதிவாகும். அதில், சுமார் 12,000 வாக்குகள் வரை செந்தில் பாலாஜிக்கு விழும்’ என்கிறார்கள். அ.தி.மு.க தரப்பில், ஓட்டுக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்களாம். தி.மு.க தரப்பில் இரண்டு கிராம் தங்க நாணயம், ஸ்மார்ட் போன் தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். அ.ம.மு.க தரப்பில், இரண்டாயிரம் ரூபாய் தருகிறார்களாம். இப்போதைக்கு கடுமையான போட்டி நிலவினாலும், இறுதியில் பணமே வெற்றியை நிர்ணயிக்கும் என்கிறார்கள். ஸ்டாலின் பாணியில் சொல்ல வேண்டுமானால், ‘ஆக, உதயசூரியன் பிரகாசிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன.’


ஓட்டப்பிடாரம் (தனி) – துளிர்க்குது இலை!

ங்கு அ.தி.மு.க-வில் மோகன், தி.மு.க-வில் சண்முகையா, அ.ம.மு.க-வில் சுந்தர்ராஜ் போட்டியிடுகின்றனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், நான்கு முறை வெற்றிபெற்ற அ.தி.மு.க, இந்த முறையும் தொகுதியைத் தக்கவைக்கக் கடுமையாகப் போராடுகிறது. அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டு ஜெ. அணி, ஜா. அணி எனத் தேர்தலைச் சந்தித்தபோது, இந்தத் தொகுதியில், தி.மு.க ஒருமுறை வெற்றிபெற்றது. தற்போதும் அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிரிவினையால், அ.ம.மு.க தனித்துக் களம் காணும் சூழலில், கோட்டையில் விழுந்த ஓட்டையாக அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள தி.மு.க முனைப்புக் காட்டிவருகிறது. இதைச் சமாளிக்கும் வகையில், தொகுதிக்குள் முகாமிட்டிருக்கிறார்கள் அமைச்சர்கள்.

பட்டியலின மக்களின் வாக்குகளைக் கவருவதில், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தீவிரம் காட்டிவருகின்றன. அ.ம.மு.க வேட்பாளரான சுந்தர்ராஜ், முக்குலத்தோர் மற்றும் பிற சமூக ஓட்டுகளைக் குறிவைத்து பிரசாரம் செய்வதற்கு ஓரளவு பலன் கிடைக்கும் போலிருக்கிறது. மும்முனைப் போட்டியில் சிக்கித் திணறும் ஓட்டப்பிடாரம் தொகுதியில், மூன்று கட்சிகளுமே ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பணத்தை அள்ளி வீசுகின்றன. அ.தி.மு.க, புதிய தமிழகம் கட்சிகளுக்கு நிலையான வாக்குவங்கி உள்ளது. தற்போதைய இடைத்தேர்தலில், இரு கட்சிகளும் கூட்டணியில் இருப்பதால், கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது. அ.தி.மு.க-வின் பணபலம் மற்றும் படைபலம் ஆகியவை அக்கட்சியின் வேட்பாளரான மோகனை தற்போதைய சூழலில் முன்னோக்கி நகர்த்துகின்றன.


சூலூர் – சூரியச் சூலூர்!

ங்கு மூன்று விஷயங்கள் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு  உற்சாகத்தைக் கொடுத்திருக்கின்றன. 1) அ.தி.மு.க-வில் செ.ம.வேலுசாமி வேட்பாளராகக் களமிறக்கப்படவில்லை. 2) சூலூரில் காங்கிரஸுக்குக் கணிசமான வாக்குகள் இருக்கின்றன. 3) தொகுதிக்குள் பெருவாரியாக இருக்கும் கவுண்டர் சமுதாய வாக்குகள் கொங்கு ஈஸ்வரன் மூலமும், அருந்ததி இன மக்கள் வாக்குகள் அதியமான் மூலமும் வந்துவிடும் என்கிற நம்பிக்கை.

இரண்டு விஷயங்களில் தெம்பாக இருக்கிறார் அ.தி.மு.க வேட்பாளர் கந்தசாமி. 1) ஆட்சியும் அதிகாரமும் தங்கள் கைகளில் இருக்கிறது. 2) மரணம் அடைந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜின் மீது இருக்கும் அனுதாபம் ஓட்டுகளாக மாறும் என்ற நம்பிக்கை.
இன்னொரு முனையில் தேவர் சமூக ஓட்டுகளைக் குறிவைத்து காய் நகர்த்திக்கொண்டிருக்கும் அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாருக்கு, செ.ம.வேலுசாமியின் மறைமுக ஆதரவும்  கிடைத்திருக்கிறது என்கிறார்கள். இந்த முக்கோண மோதலில், வெற்றிக்கான துருப்புச் சீட்டாக அனைவரும் நம்பியிருப்பது பணத்தை மட்டுமே. அதில், அ.தி.மு.க-வே முன்னிலை வகிக்கிறது. இரண்டாயிரத்திலிருந்து நாலாயிரம் ரூபாய் வரை அ.தி.மு.க-வும், ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை தி.மு.க-வும் நிர்ணயித்துள்ளன. அ.ம.மு.க-வினரும் இரண்டாயிரம் ரூபாய் வரை கொடுக்கிறார்கள். இறுதிக்கட்ட நிலவரத்தில், அ.தி.மு.க கோட்டையான சூலூரை டி.டி.வி.தினகரன் தகர்த்தால், இங்கு உதயசூரியன் உதிக்க வாய்ப்புகள் பிரகாசம்.

%d bloggers like this: