அதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்

தமிழக லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளைப் பார்த்தால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பை அமமுக பெருமளவில் காலி உணர முடிகிறது,

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கைப்பற்றியது சசிகலா குடும்பம். ஆனால் தக்க சமயம் பார்த்து ஓபிஎஸ் வெளியேற, அதிமுக உடைந்தது. அதன் பிறகு அதிரடித் திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. சசிகலா சிறைக்குப் போனார். சசிகலா குடும்பத்தினரை பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கினர். ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

வெளியேற்றப்பட்ட தினகரன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பின்னர் அமமுகவைத் தொடங்கினார். அதிமுகவைக் கைப்பற்ற நடந்த முயற்சிகள் தற்போது சசிகலா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிளவுபட்ட அதிமுக லோக்சபா தேர்தலை சந்தித்தது.

அதிமுக வாய்ப்பு

நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வட இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சில தமிழ் ஊடகங்களும் தமிழகத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை வெளியிட்டன. அதில் திமுக அதிக இடங்களை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளவால் லாபமடையும் திமுக

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் கட்சிக்கு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ள வாக்கு சதவீதத்தைப் பார்த்தால் அதிமுக பிளவுபட்டதால்தான் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது போல தெரிகிறது.

பிரியும் வாக்குகள்

அதிமுகவின் வாக்குகள் இரண்டாக பிரிந்துள்ளன. அதில் அதிமுக 2வது இடத்தைப் பிடிக்கிறது என்றால், 3வது இடத்தை அமமுக பிடிக்கிறது. முதலிடத்தைப் பிடித்துள்ள திமுக, அதிமுகவின் இந்த பிளவுக்கு நடுவே புகுந்து வெற்றிக் கொடி நாட்டுகிறது

நாம் தமிழர் – மநீம

அதேபோல மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் கணிசமாக வாக்குகளைப் பிரிக்கின்றன. எனவே அதிமுகவின் வாக்குகள் பெருமளவிலி சரிந்துள்ளதை உணர முடிகிறது.

அதிமுக அமமுக இணைந்தால்

அதேசமயம், அதிமுக, அமமுக வாக்குகளை இணைத்துப் பார்த்தால் அது, திமுகவை விட அதிகம் வருகிறது. எனவே அதிமுகவும், அமமுகவும் இணைந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கல் என்றே உணர முடிகிறது. மேலும் ஜெயலலிதா மறைவால் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. மாறாக வாக்குகள் பிரிவதால்தான் திமுக உள்ளே நுழைகிறது என்று ஊகிக்க முடிகிறது.

23ல் தெரியும்

இப்போது வெளியாகியுள்ளது ஊக கணிப்புகள்தான். எனவே இறுதி முடிவுகள் வெளியாகும்போதுதான் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை அமமுக பறித்ததா என்பது தெரிய வரும். அதேசமயம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக – அமமுக இணைப்புக்கான முயற்சிகள் வேகம் பிடிக்க வாய்ப்புள்ளது. இருவரும் இணைந்து, மத்தியிலும் பாஜக ஆட்சி அமைந்து விட்டால், வருகிற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மிகுந்த போராட்டத்தை சந்திக்க நேரிடலாம்.

பார்க்கலாம், இறுதித் தீர்ப்பு எப்படி வருகிறது என்று.

%d bloggers like this: