Advertisements

கேடின்றி வாழவைப்பார் கேது பகவான்!

ருவரது குலம் செழித்தோங்கி திகழவேண்டும் எனில், அவருக்கு,  கேதுவின் திருவருள் பரிபூரணமாக வேண்டும். ஆமாம், குலம் செழிக்கவைக்கும் கிரக மூர்த்தி கேதுபகவான். கேதுவை ஞானகாரகன் எனப் போற்றுகிறது ஜோதிடம்.

கேது, காலன், எண்ணுபவன், மஹா கேது, ருத்ர பிரியர், தூம்ர கேது, விவர்ணகன்,  நறுமணம் ஏற்பவர், வைக்கோல் புகையின் வண்ணம் கொண்டவர் என்றெல்லாம் கேதுவைச் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள், கேது பகவானை வழிபடுவதால் சகல பீடை களும் விலகும்; செல்வம், தான்யம், பசுக்கள் ஆகிய போகங்கள் பெருகும் என்றும் அறிவுறுத்துகின்றன அந்த நூல்கள்  (கேது: கால: கலயிதா தூம்ரகேதுர்விவர்ணக:).

ஒருவரது ஜாதகத்தில் ஞானகாரகனான கேது பகவான், ஆன்ம காரகனான சூரியனுடன் இணைந்தால், அந்த ஜாதகரின் வாழ்வைப் பிரகாசமாக விளங்கவைப்பார்.

சந்திரனுடன் இணைந்தால், பிரகாச கிரகத்துடன் இணையும் பலனைத் தரும்; வாழ்வின் இருள் அகலும். அதாவது, வளர்பிறையின் இணைப்பில் நல்லது நிகழும். கேது இணைவது  தேய்பிறை சந்திரனுடன் எனில், இருள் அதனை விழுங்கி விடும் எனும் கோணத்தில், தேய்பிறை இணைப்பில் கெடுதலும் நிகழும்.

செவ்வாயுடன் இணைந்தால் ‘குஜவத்கேது’ எனும் கோட்பாட்டின்படி… செவ்வாயால் கிடைக்கும் நல்லது அல்லது கெட்டது என்கிற பலன் இருமடங்காகப் பெருகிவிடும். வலுவான செவ்வாயாக இருந்தால், சுலபமான முயற்சியில் கிடைக்க வேண்டியதை அளவு கடந்த முயற்சிக்குப் பின் கிடைக்கச் செய்வான்!

புதனுடன் இணைந்தால் ஆராயும் திறன் அடிபட்டுவிடும் அல்லது திறமை இருந்தும் மெத்தனமாகச் செயல்படத் தூண்டும். வலுவான புதனுடன் இணைந்தால், உரிய தருணத்தில் செயல்படச் செய்து, துயரத்தை அடைவதிலிருந்து நிவாரணத்தைத் தருவார்.

குருவுடன் இணைந்தால், அறிவுப்பூர்வமாகச் செயல்பட்டாலும் ஆதாயம் இல்லாத நிலையைத் தருவார். வலுவான குருவுடன் இணைந்தால், எதையும் இழக்கச் செய்யாமல், விழிப்பு உணர்வுடன் இருக்கச் செய்வார். செயலின் தரத்தை உயர்த்தி, புகழுடன் திகழச்செய்வார்.

சுக்கிரனுடன் இணைந்தால் பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்பட்டு கலங்கடிப்பார். வலுவான சுக்கிரன் என்றால், உலக சுகத்தைத் தந்து, பொருளாதாரம் மற்றும் மகிழ்ச்சியிலும் உயர்த்துவார்.

சனியுடன் இணைந்தால் உழைப்பையும் சிந்தனை யையும் வீணாக்குவார்; விரக்தியைத் தருவார். வலுவான சனியானால், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடச் செய்யவும் வாய்ப்பு உண்டு.

ராகுவுடன் இணைய இயலாது. கேந்திரத்தில் அதிலும் ஏழாவது கேந்திரத்தில்தான் அவருடைய தொடர்பு இருக்கும்.

கேது நிழல் கிரகம்தான். எனினும், நாம் எதிர்கொள்ள வேண்டிய துயரங்களை எல்லாம் வலுவிழக்கச் செய்து, வளமான வாழ்வை நிஜமாக்குபவர்.

சித்தர்களின் திருவருள் கைகூடும்: லக்னம் அல்லது ராசியில் கேது பகவான் இருந்தால், அந்த ஜாதகருக்கான முன்னேற்றங்களில் சிற்சில தடைகள் உண்டு. உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என்று அவ்வப்போது கவலையும் ஏக்கமும் எழும். எனினும் சித்தர்கள், மகான்கள் ஆகியோரின் சந்திப்பு, அவர்களது ஆசீர்வாதம் கிடைக்கும் பாக்கியம் உண்டு.  மேலும் அனுபவ அறிவால் சாதிக்கும் அன்பர்க ளாகத் திகழ்வார்கள். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது, புனிதத் தலங்களை தரிசிப்பது ஆகியவற்றில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

சத்தியத்தால் சாதிக்கச் செய்யும் கேது: இரண்டில் கேது அமையப்பெற்ற ஜாதகர்கள் உண்மையையே பேசுவார்கள். சத்தியமே நித்தியம் என்ற கொள்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் பல பிரச்னைகளையும் இவர்கள் சந்திக்க நேரிடும். எனினும், மனச்சாட்சிப்படி நடந்துகொண்டதற்காகப் பெருமிதம் அடையும் பண்பாளர்களாக விளங்குவார்கள். பெற்றோர் விருப்பப்படி ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்து படித்தாலும், சுய விருப்பத்துக்கு ஏற்ப ஒரு பிரிவையும் படித்து, அதன் மூலமாக அதீத முன்னேற்றம் காணும் யோகம் உண்டு இவர்களுக்கு.

மூன்றில் கேது முடிசூட வைப்பார்: 3-ஆம் இட கேதுவைப் பற்றி இப்படியொரு சொல்வழக்கு உண்டு. மூன்றில் கேது உள்ள ஜாதகர்கள், ஆளுமைத் திறனில் கெட்டிக்காரர்களாக விளங்குவர். நிர்வாகத் திறன், மற்றவர்களை மிகச் சரியாக வேலைவாங்குதல், செயல்களைத் திறம்பட முடித்தல் ஆகியன இவர்களது பிளஸ் பாயிண்டுகள். நீண்ட ஆயுளும், செல்வச்சேர்க்கையும் உண்டு. சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் இவர்களுக்கு நன்மைகளே செய்ய, அதை அனுபவிக்கும் பாக்கியசாலிகளாகத் திகழ்வார்கள் இந்த ஜாதகக்காரர்கள்.

மருத்துவராகும் யோகம் : ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது நடத்தை ஸ்தானம் ஆகும். ஒருவரது நடத்தையை- செயல்பாடுகளை விவரிக்கும் இடம் இது. இதில் கேது பகவான் இருக்கும் ஜாதகர்கள் சில தருணங்களில் சித்தம் போக்கு சிவம் போக்காகக் காணப்படுவார்கள். இந்த அன்பர்களில் சிலருக்கு மருத்துவராகும் யோகம் கிட்டும். இவர்களில் சிலர், படிப்பின் நிமித்தம் தாயாரைப் பிரிய நேரிடும். கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, உருவாக்குதல் ஆகியவற்றில் திறம்பட சாதிப்பார்கள். எதையும் மிகைப்படுத்தாமல், யதார்த்தவாதிகளாகத் திகழ்வார்கள். 

முக்காலத்தையும் அறியும் ஆற்றல்: ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது புத்தி ஸ்தானமாகும். இதில் ஞானகாரகனான கேது பகவான் இருந்தால், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் தொடர்பும், அவர்களால் முன்னேற்றமும் உண்டு. சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை எளிதில் உணர்ந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். பூர்விக இடத்தைவிட்டு, வாழ வந்த இடத்தில் மிகச் சிறப்பான உயர்வை அடைவார்கள். கேது பகவான் 5-ல் இருக்கப் பிறந்த ஜாதகர்களில் சிலருக்கு முக்காலமும் உணரும் வல்லமையும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடன் இல்லாத செல்வச் செழிப்பு: ஆறாம் இடத்தில் கேது இருக்கப் பிறந்த அன்பர்களுக்கு எதிரிகள் எவரும் இல்லாத நிலை உருவாகும். அப்படியே பகைவர்கள் உருவானாலும், வெகு சீக்கிரம் இவர்களுக்கு நண்பர்களாகிவிடுவார்கள். இவர்கள் எதைச் செய்தாலும் வெற்றிதான்; தொட்டது துலங்கும் பாக்கியம் உண்டு. கடன் இல்லாத வாழ்க்கை இவர்களுக்கு வரப்பிரசாதம். இவர்களில் சிலருக்கு, வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிக்கும் யோகமும் கிடைக்கும். ஷேர், லாட்டரி போன்ற விஷயங்களால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் இவர்களுக்கு உண்டு.

கிரகங்களின் இயல்பை வைத்து மூன்று வகையாகப் பிரிப்பார்கள். சூரியனும் சந்திரனும் பிரகாச கிரகங்கள்; ஒளியை உமிழும் தகுதி கொண்டவை. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை தாரா கிரகங்கள்; அதாவது, நட்சத்திர வகையானவை. ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள்; நிழல் கிரகங்கள் என்கிறது ஜோதிடம். நிழலின் ஆரம்பம் ராகு; அதன் எல்லை கேது!

நிழல் நமக்குப் பிடிக்காது. நிஜம்தான் பிடிக்கும். நம் குழந்தையின் நிழல், நாம் பார்க்கிற புத்தகத்தை மறைத்தாலும் எழுத்துக்களைப் பார்க்க முடியாதுதானே?! ‘என் குழந்தைதான்’ என்றாலும் அந்த இடையூறு இருக்கத்தானே செய்யும்!

கேது எங்கு இருந்தாலும், நிழல் பட்ட இடம் போல் மங்கிவிட வாய்ப்பு உண்டு. 6, 8, 12 போன்ற இடங்களில் நிழல் படிந்தால்,  இடையூறை மறைப்பதால்…  நிழலும் பலனையே அளிக்கும். கடும் வெயிலில் நடப்பவனுக்கு, தென்னை மர நிழல்கூட ஆறுதல் தரும். கேது, நம்மை நோக்கி வரும் துயரத்தை மறைத்து, வலுவிழக்கச் செய்வதால் அவரது ஆராதனை மிகவும் தேவை!

‘கேதும் க்ருண்வன்…’ என்கிற வேதப்பகுதியை ஓதினால், அவர் நம் மனதில் தோன்றுவார் என்கிறது வேதம்.  வேத காலத்திலிருந்து கேது வழிபாடு தொடர்கிறது. குலம் செழிக்க, கேதுவின் அருள் அவசியம். உலகில் நம்மை முதலில் அடையாளம் காட்டுவது குலம். மற்ற தகுதிகள் அதையடுத்து வந்தவை. அது பரம்பரைச் சொத்து. அதைக் காப்பாற்றும் திறன் கேதுவிடம் உண்டு என்கிறது சாஸ்திரம்.

பிறப்பில் விளைந்த தகுதியே பண்புக்கு ஆதாரம். பிற்பாடு வந்து ஒட்டிக்கொண்டவை அனைத்துமே நம்மை அறியாமலே மறைந்துவிடும்! `கேம் கேதவேநம: ’ என்று சொல்லி, 16 பணிவிடைகளை கேது பகவானுக்குச் செய்யலாம்.

‘சூர்யாஸ்யம் தூம்ரவஸனம் வரதம் கதினம் ததா. சித்ரகுப்தாதி தைவத்யம் பிரம்மப்ரத் யதிதைவதம்’ என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, மலர்கள் தூவி வழிபடலாம்.

எண்ணிக்கையில் ஒன்பது என்பது எல்லை. அந்த எல்லையை வரையறுக்கும்விதமாக, கடைசியில் கேதுவைக் குறிப்பிடுவது உண்டு. குறையை நிறைவு செய்யும் வகையில் ஒன்பதாவதாகக் குறிப்பிடும் கிரகம் என்பதால், கேது வழிபாடு நவகிரக வழிபாட்டின் நிறைவை அளிக்கிறது.

Advertisements
%d bloggers like this: