கணக்கு பலித்தது… குஷியில் எடப்பாடி!

இரண்டு மாதங்கள்கூட நீடிக்காது இந்த ஆட்சி” என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது எதிர்க்கட்சிகள் கொக்கரித்தன. ஆனால், இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது இடைத்தேர்தல் களத்திலும் ஆட்சியைக் கரைசேர்த்து தன்னையும் நிரூபித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். நாடாளுமன்றத் தேர்தலோடு, இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்தினால் அது எடப்பாடி பழனிசாமிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பலரும் கணக்குப் போட்டனர். எடப்பாடி பழனிசாமியோ வேறு கணக்கைப்போட ஆரம்பித்தார். தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்று முதலில் கணக்கிட்டார். தற்போது இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை சபாநாயகருடன் சேர்த்து 114 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இன்னும் நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலே பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம். ஆனால், தினகரன் பக்கம் மூன்று பேர், தன்னிச்சையாகச் செயல்படும் இரண்டு பேர் என்று எடப்பாடிக்கு இடையூறாக ஐந்து பேர் இருந்தார்கள். எனவே, ஒன்பது சீட்டை கைப்பற்றிவிட்டால், எந்தப் பிரச்னையும் இல்லை என்கிற கணக்குக்கு எடப்பாடி வந்த பிறகே, தேர்தல் வியூகத்தைக் கட்டமைத்தார்.

இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியாக இருந்தது தினகரன் தரப்பு. முதலில் அதை ஈடுகட்டவே பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளை அ.தி.மு.க பக்கம் கொண்டுவந்துவிடவேண்டும் என்று திட்டமிட்டு காய்களை நகர்த்தினார். இந்த காய் நகர்த்தல்களைப் பார்த்து பி.ஜே.பி-யே கொஞ்சம் அசந்துதான் போனது. ‘பரவாயில்லையே, நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி வெற்றிக்காக அதிவேகமாக செயல்படுகிறது அ.தி.மு.க’ என்று நினைத்தது. ஆரம்பத்தில் அவர்களுக்குத் தெரியவில்லை, ‘எடப்பாடி வேகம் காட்டுவது நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக அல்ல; சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக’ என்று. இப்போது அதை நிரூபித்துவிட்டார் எடப்பாடி.
அ.தி.மு.க அமைத்த கூட்டணியால், தினகரன் பிரிக்கும் அ.தி.மு.க வாக்குகளைச் சரிக்கட்ட முடியும் என்று எடப்பாடி கணக்குப் போட்டது ஓரளவு கை கொடுத்துள்ளது. குறிப்பாக சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சூலூர் போன்ற தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை பெற கூட்டணிக் கட்சிகளின் பலம் நன்றாகவே கைகொடுத்தது. அதேபோல் மானாமதுரை, நிலக்கோட்டை, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்த தொகுதிகள் என்பதால், அங்கு இரட்டை இலையைக் கொண்டு போய் சேர்ப்பதில் பெரிய பிரச்னை இல்லை. இந்தக் கணக்குகளை எல்லாம் கச்சிதமாகப் போட்டுத்தான் புன்சிரிப்புடன் கூலாக வலம் வந்தார் எடப்பாடி.
இந்தக் கணக்குகளால் தொடக்கத்திலிருந்தே சட்டமன்ற இடைத் தேர்தலில் மட்டும் அ.தி.மு.க முழு கவனத்தையும் செலுத்தியது. ஆட்சியைத் தக்கவைப்பது மட்டுமே எடப்பாடி அண்ட் கோவின் வியூகமாக இருந்தது. அந்தந்த மாவட்ட அமைச்சர்களைத் தொகுதிப் பொறுப்பாளர்களாக்கினார்கள். வைட்டமின் ‘ப’வும் தாராளமாகப் பாய்ச்சினார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுக்கு ஆயிரம் தொடங்கி ஐந்தாயிரம் வரை அள்ளிவீசினார்கள். அமைச்சர் களையும் மாவட்டச் செயலாளர்களையும் ‘இந்த ஆட்சி நீடித்தால்தான் நீங்கள் பந்தா வாக வலம் வரமுடியும். இல்லை என்றால் உங்கள் நிலையை எண்ணிக்கொள்ளுங்கள்’ என்று எடப்பாடி கொளுத்திப்போட்ட தீ நன்றாக ஒர்க் அவுட் ஆனது.

இன்னொரு பக்கம் மாநில உளவுத் துறையைத் தேர்தல் களத்தில் முழுமை யாகப் பயன்படுத்தினார் எடப்பாடி. இதற்காகவே அ.தி.மு.க ஆட்சியில் ஓரம்கட்டப்பட்டிருந்த ஜாபர் சேட்டை மீண்டும் களத்துக்குக் கொண்டுவந்து சில தேர்தல் வியூகங்களை வகுத்ததாகவும் கூறப்படுகிறது. தி.மு.க-வின் பலம், பலவீனம் ஆகியவை ஜாபர் சேட் மூலம் பெறப்பட்டன. அ.தி.மு.க வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பதை முதலில் பட்டியலிட்டனர். 13 தொகுதி களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலை வைத்துக்கொண்டு, அந்த 13 தொகுதிகளிலும் தனிக் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, முக்கிய அமைச்சர்களிடம் அந்த 13 தொகுதிகளுக்கான பொறுப்பு கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்குக் காட்டும் முக்கியத்துவத்தைவிட இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது. அதேநேரம், தென் மாவட்டங்களில் கணிசமான அளவில் தினகரன், வாக்குகளைப் பிரிக்கக்கூடும் என்பதால், அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை வளைக்கும் வேலையும் சத்தமில்லாமல் நடைபெற்றது. மறுபுறம் பி.ஜே.பி போட்டியிட்ட ஐந்து இடங்களிலுமே அ.தி.மு.க-வினரை நம்பியே அந்தக் கட்சி களம் இறங்கியது. ஆனால், அ.தி.மு.க அவர்களை அம்போவென விட்டுவிட்டது. அதைப் புகாராகவே தமிழக பி.ஜே.பி-யினர் டெல்லிக்குச் சொல்லிவிட்டார்கள். இறுதியில் எடப்பாடி பழனிசாமி போட்ட கணக்கே வென்றிருக்கிறது.
எட்டு சீட்டைவிட குறைவான எண்ணிக்கையில் அ.தி.மு.க வெற்றிபெற்றால், ஆட்சியைத் தக்க வைக்க மற்றொரு வியூகத்தையும் கையில் வைத்திருக்கிறார் எடப்பாடி. தினகரன் பக்கம் உள்ள மூவரை தன் பக்கம் கொண்டுவருவதுடன், தி.மு.க தரப்புக்கு செக் வைக்கும் திட்டமும் அவரிடம் உள்ளது. காரணம், இந்த முறை நூறு சட்டமன்ற உறுப்பினர்களைத் தாண்டி பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக தி.மு.க உருவாகியிருப்பதால், அந்தக் கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுக்க ஜெயலலிதா பாணியைக் கையில் எடுக்க உள்ளார். குட்கா விவகாரத்தில் 21 சட்டமன்ற உறுப்பினர்களை முதலில் சஸ்பெண்ட் செய்யும் திட்டமும் உள்ளது. தென் மாவட்டங்களில் நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ஓட்டுகள் குறைந்ததால், கட்சியிலும் ஆட்சியிலும்  நாடார் சமூகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார். மத்தியில் மீண்டும் பி.ஜே.பி அரசே அசுர பலத்தோடு ஆட்சிக்கு வந்திருப்பதால், பெரும்பான்மையை அடையாவிட்டாலும் எடப்பாடி இனி கவலைப்படப் போவதில்லை. மொத்தத்தில் சொல்வதானால், எடப்பாடி அரசியல் வித்தகர் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துவருகிறார். சிக்கலான… கடும் இக்கட்டான சூழல்களிலும்கூட கூலாகச் செயல்பட்டு, தூள் பறக்கும் வெற்றியைத் தொட்டிருக்கிறார் அவர்!

%d bloggers like this: