Advertisements

மீண்டும் மோடி! – தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அப்போது காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, எல்லா எதிர்க் கட்சிகளுக்கும் அறிவுரை சொல்வது மாதிரி ஒரு ட்வீட் போட்டிருந்தார். ‘நிலைமை இப்படியே போனால், நாம் 2019 நாடாளுமன்றத் தேர்தலை மறந்துவிட வேண்டியதுதான். 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே திட்டமிட்டு நம்பிக்கையுடன் வேலை பார்க்கலாம்.’ உமர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை இப்போது தேர்தல் முடிவுகள் மூலம் நரேந்திர மோடி உணர்த்தியிருக்கிறார்.

ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகும், ஆட்சிக்கு எதிராகப் பெரிதாக அதிருப்தி அலை இல்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்களில் பி.ஜே.பி தோற்றது. அந்த மூன்று தேர்தல் முடிவுகளுமே, அந்தந்த மாநில பி.ஜே.பி அரசுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு என்பதும் இப்போது உறுதியாகி இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலுமே பி.ஜே.பி இப்போது பெற்றிருக்கும் வெற்றி, மோடியின் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது. இங்கெல்லாம் பல தொகுதிகளில், பி.ஜே.பி வேட்பாளர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, பழைய தேர்தல் முடிவுகளைப் பார்த்து கணக்குப்போடும் பலரையும் தலைச் சுற்ற வைத்திருக்கும். ஒவ்வொரு தேர்தலின் முடிவும் சில கணக்குகளால் தீர்மானிக்கப் படுகின்றன. பெரும்பாலான கணக்குகளைச் சரியாகப் போடும் கட்சி ஜெயிக்கும். தப்புக் கணக்கு போடும் கட்சிகள் தோற்கும். எதிர்க் கட்சிகள் எவ்வளவு மோசமாகத் தப்புக்கணக்குப் போட்டன என்பதை இந்தத் தேர்தல் முடிவு அவர்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே, தேசிய அளவில் பி.ஜே.பி-க்கு எதிராக இயங்கிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முயற்சி செய்தார். ஆனால், அந்த முயற்சி ஒரு கட்டத் துக்கு மேல் பலிக்கவில்லை. காங்கிரஸை நம்பி கூட்டணியில் இணைய சில கட்சிகள் சம்மதிக்க வில்லை; காங்கிரஸ் இல்லாத கூட்டணி ஒன்றை அமைக்க மற்ற கட்சிகளுக்கு விருப்பமில்லை. ஒரு சில மாநிலங்களில் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்குமே என்று தயங்கி காங்கிரஸும் இந்த முயற்சிக்கு அணை போட்டது. கடைசியில், ‘ஒவ்வொரு மாநிலத்திலும் தனித் தனியாகத் தேர்தல்களைச் சந்திப் போம். பி.ஜே.பி-க்கு எதிரான கூட்டணி பற்றி தேர்தலுக்குப் பிறகு பேசிக்கொள்வோம்’ என ராகுல் காந்தியும் சரத் பவாரும் முடிவெடுத்தார்கள். அது எவ்வளவு பெரிய தப்புக்கணக்கு என்பதை இப்போது புரிந்துகொண்டிருப் பார்கள்.
கடந்த 2017 டிசம்பரில் நடை பெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில், மோடிக்குப் பெரும் சவால் கொடுத்தார் ராகுல் காந்தி. தன் சொந்த மாநிலத்தில் பிரசாரத்தின்போது மோடி கண்ணீர்விட வேண்டியிருந்தது. அந்தத் தேர்தலில் பி.ஜே.பி பெரும் போராட்டத்துக்குப் பிறகே ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது. அதன் பிறகு சமீபத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பெற்ற வெற்றியை ‘மோடிக்கு எதிரான மனநிலை மாற்றம் தேசம் முழுக்கவே ஏற்பட்டுள்ளது’ என்பதாக காங்கிரஸ் புரிந்துகொண்டது. இங்குகூட, சத்தீஸ்கர் தவிர மற்ற இரண்டு மாநிலங்களில் அறுதிப் பெரும்பான்மையை காங்கிரஸ் தெளிவாகப் பெறவில்லை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் சில தொகுதிகளில் கம்யூனிஸ்ட்களும் பெற்ற வாக்குகளும் காங்கிரஸுக்கு பாதகமாக முடிந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் இவை ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் கவலைப்படவில்லை.

உத்தரப் பிரதேசத்தைத் தாண்டி பல மாநிலங்களில், ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. பாரம்பர்யமாக காங்கிரஸுக்கு விழுந்த வாக்குகளே, அங்கெல்லாம் மாயாவதி யின் வாக்கு வங்கியாக மாறியது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகியுடன் கூட்டணி அமைத்தது பகுஜன் சமாஜ் கட்சி. அந்தக் கூட்டணியை எளிதாக முறியடித்து காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது. எனவே, மாயாவதியுடன் தேசிய அளவில் ஒரு கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதை காங்கிரஸ் உணரவில்லை. உத்தரப் பிரதேசத்தில், மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இணைந்து அமைத்த மெகா கூட்டணியில், காங்கிரஸ் புறக்கணிக்கப் பட்டது. உடனே, மாயாவதியைத் தேசிய அளவில் புறக்கணித்தது காங்கிரஸ். இதில் மாயாவதிக்குப் பெரிய இழப்பு இல்லை. ஆனால், காங்கிரஸ் இழந்தது நிறைய.
ஆம் ஆத்மி கட்சியுடன் கடைசி நிமிடம் வரை கூட்டணிப் பேச்சு நடத்திக்கொண்டிருந்தது காங்கிரஸ். ‘‘இந்தக் கூட்டணி இல்லாமலே பஞ்சாப் பில் காங்கிரஸ் ஜெயிக்கும்’’ என்று அந்த மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தடை போட்டுவிட்டார். அதன்பின்பு, “டெல்லியிலும் ஹரியானாவிலும் மட்டும் கூட்டணி வைத்துக்கொள்ள லாம்” என்று அர்விந்த் கெஜ்ரிவால் முன்வந்தார். ஆனால், அந்த இரண்டு மாநில காங்கிரஸ் தலைவர்களும் சம்மதிக்காததால், அப்படி ஒரு கூட்டணி அமையவே இல்லை. இதனால் இரண்டு கட்சிகளுக்குமே இழப்பு.
மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்த இடைத் தேர்தல்களில் ஜெயித்துக் கொண்டிருந்ததால், மம்தா பானர்ஜி தப்புக்கணக்குப் போட்டார். உத்தரப் பிரதேசத்தில், தாங்கள் அமைத்த புதிய கூட்டணி இடைத் தேர்தல்களில் பெற்ற வெற்றி, மாயாவதியையும் அகிலேஷ் யாதவையும் தப்புக்கணக்குப் போட வைத்தது.
ஆனால், மோடியும் அமித் ஷாவும் பெரும்பாலான கணக்குகளைச் சரியாகவே போட்டார்கள். உத்தரப் பிரதேசத்தில் இழப்புகளைக் குறைப்பதற் காக, பழைய எம்.பி-க்கள் பலரைத் தொகுதி மாற்றி நிற்க வைத்தார்கள். இங்கு ஏற்படும் இழப்புகளைச் சரிக்கட்ட மேற்கு வங்காளத்தைக் குறி வைத்தார்கள். இந்தி பேசும் பகுதிகளில் பெரிய இழப்பு ஏற்படாது என நம்பி னார்கள். பஞ்சாப் தவிர எல்லா வட மாநிலங்களிலும் அவர்களின் கணக்கு சரியாகி இருக்கிறது.

மோடியின் பிரசார பலம், கட்சிக்கு இருக்கும் அமைப்புரீதியான கட்டமைப்பு, ஆளுங்கட்சிக்கு இருக்கும் சாதகங்கள் என எல்லாமும் சேர்ந்து பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் பாடம்; குறிப்பாக காங்கிரஸுக்கு! உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மூன்று பெரிய மாநிலங்களிலும் 162 எம்.பி தொகுதிகள் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலுமே காங்கிரஸ் அமைப்புரீதியாகச் செல்வாக்கை இழந்து பல ஆண்டுகள் ஆகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் காங்கிரஸ் தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றியைப் பெற்ற இரண்டு மாநிலங்கள் பஞ்சாப்பும், சத்தீஸ்கரும் மட்டும்தான். பஞ்சாப்பில் கிராமங்கள் வரை கட்சி அமைப்பு இருக்கிறது. சத்தீஸ்கரில் அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் ஒவ்வொரு வாக்குச்சாவடி வரை கட்சி அமைப்பை ஏற்படுத்தினார். அதுதான் இந்த அலையிலும் அங்கு காங்கிரஸை மோசமான தோல்வி யிலிருந்து காப்பாற்றியது. அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தாமல், வலுவான கூட்டணிகளுக்கோ, வெற்றி களுக்கோ காங்கிரஸ் ஆசைப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
காங்கிரஸை நிராகரித்த எதிர்க்கட்சித் தலைவர்களில் பலரும் பெரும் தோல்வி அடைந்திருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸை நாடி வரும் அளவுக்கு, காங்கிரஸ் கட்சியும் வெற்றிகளைப் பெறவில்லை. இனி அவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பொறுத்தே காங்கிரஸின் எதிர்காலமும் இருக்கிறது. இந்தத் தேர்தல் தோல்வியைத் தாண்டி கர்நாடகத்தில் இருக்கும் கூட்டணி ஆட்சியையும் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஆட்சியையும் இழக்கும் ஆபத்தில் காங்கிரஸ் இருக்கிறது. கேதார்நாத்தில், மோடி தியானம் செய்த குகைக்குச் சென்றாவது ராகுல் காந்தி தன் எதிர்கால அரசியல் குறித்து ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
கடந்த தேர்தலுக்குப் பிறகு ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழகத்தையும் மேற்கு வங்காளத்தையும் விநோதமாகப் பார்த்தது. மோடி அலையை நிராகரித்தது இந்த இரண்டு மாநிலங்கள்தான். இந்த முறை தமிழகம் மட்டுமே இந்தியாவில் விநோதமாகப் பார்க்கப்படும்!

Advertisements
%d bloggers like this: