வித்தை காட்டிய மோடி… ரஜினியுடன் போடுவாரா ஜோடி?

ரஜினியைப் பொறுத்தவரை, அவர் ஏற்கெனவே ஆன்மிக அரசியல் என்று சொல்லியிருக்கிறார். பி.ஜே.பி-யின் இந்துத்துவக் கொள்கையுடன் ரஜினியின் கொள்கையும் ஒன்றாக இருக்கும் என்பதால், அதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

“சிங்கம் சிங்கிளாதான் வரும்; பன்னிங்கதான் கூட்டமா வரும்” – நடிகர் ரஜினியின் பிரபலமான வசனம் இது. இந்த வசனம், இப்போது பி.ஜே.பி பெற்ற தனிப்பெரும் வெற்றிக்குப் பொருந்தியிருப்பதாக மார்தட்டுகிறார்கள் தமிழக பி.ஜே.பி தொண்டர்கள்.

 

ஆனால், தமிழகத்தில் பி.ஜே.பி இடம்பெற்ற கூட்டணிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய தோல்வி, அவர்களின் கொண்டாட்டத்துக்குத் தடை போட்டுவிட்டது. மிகவும் பலம்வாய்ந்த கூட்டணி என்று நினைத்து, அ.தி.மு.க கூட்டணியில் ஐந்து சீட்கள் போதுமென்று பி.ஜே.பி கரம்கோத்தும் கடைசியில் மொத்தமாய்ப் பலத்த அடி கிடைத்திருக்கிறது. இத்தகைய தோல்விக்குக் காரணங்கள் என்னவென்று வீதிக்கு வீதி பட்டிமன்றங்கள் நடக்கின்றன. 

ரஜினி, மோடி

குறிப்பாக, `அ.தி.மு.க அரசின் மீதான அதிருப்திதான்’ என்று ஒரு தரப்பும், `தமிழகத்தை பி.ஜே.பி அரசு புறக்கணித்த காரணத்தால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடுதான்’ என்று இன்னொருதரப்பும் வாதிடுகின்றன. ஆனால் பெரும்பான்மை இல்லாத அ.தி.மு.க அரசையும், அதன் ஊழல் அமைச்சர்களையும் காப்பாற்றியதாலும்தான் பி.ஜே.பி-க்குப் படுதோல்வி கிடைத்திருக்கிறது என்று படித்த வாக்காளர்கள் பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி-யின் அணுகுமுறை மட்டுமன்றி, அக்கட்சி கூட்டணி சேரவேண்டிய கட்சியும் மாறவேண்டுமென்ற எதிர்பார்ப்பு பல தரப்பிலும் இருப்பதையும் உணர முடிகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் பலமுனைப் போட்டி இருந்தபோதும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க இல்லாத கூட்டணியில் இரண்டு இடங்களை பி.ஜே.பி கைப்பற்றியது நினைவுகூரவேண்டியது. பி.ஜே.பி-யைவிடவும், தமிழகத்தில் அந்தக் கட்சியுடன் கூட்டணிவைத்த பா.ம.க மற்றும் தே.மு.தி.க போன்றவற்றின் நிலை படுபரிதாபமாகவுள்ளது. அதனால், தமிழகத்தில் புதிய ஜோடியைத் தேடவேண்டிய கட்டாயத்தில் பிரதமர் மோடி இருக்கிறார். அப்படி பி.ஜே.பி-க்கு ஜோடி போடுவதற்குத் தகுதியான கட்சி என்று பலரும் கைகாட்டுவது நடிகர் ரஜினியைத்தான். 

அதற்கேற்றாற்போல் ரஜினியும் பலதடவை, பி.ஜே.பி-க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார். ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு போன்ற மத்திய பி.ஜே.பி. அரசின் பல திட்டங்களைக் கடந்த ஐந்தாண்டுகளில் பாராட்டியுள்ளார், ரஜினி. அனைத்துக்கும் மேலாக மத்திய – மாநில அரசுகளின் அப்பட்டமான தாக்குதல் நடவடிக்கையாக அமைந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிப் பேசிய ரஜினி, `எல்லாவற்றுக்கும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகிவிடும்’ என அவர் பேசிய பேச்சு பல்வேறு விமர்சனங்களைக் கொண்டுவந்தது. 

இந்தச் சூழலில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் மத்தியில் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சியமைக்கும் அளவுக்கு முன்னணி நிலவரங்கள் வெளியானவுடன், முதல் ஆளாய் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துச் சொல்லி, தன்னுடைய பி.ஜே.பி. ஆதரவு மனப்பான்மையை வெளிப்படுத்தியிருந்தார் ரஜினி.

 

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பி.ஜே.பி எடுக்கவேண்டிய நிலைப்பாடு எப்படி அமையவேண்டும் என்பது பற்றி, அரசியல் நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம்.

“ரஜினியைப் பொறுத்தவரை, நதிநீர் இணைப்புக்கு எப்போதுமே ஆதரவாகப் பேசுவார். அந்தவகையில், முடிந்த மக்களவைத் தேர்தலில் அந்த அறிவிப்பை வெளியிட்ட பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையை அவர் பாராட்டியிருந்தார். தவிர, பி.ஜே.பி அரசின் பண மதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களையும் ரஜினி ஆதரித்துள்ளார். மேலும் மோடிக்கு எதிரான ஹேஷ்டேக் பற்றிக் கூறுகையில், `10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால், அவர்தானே பலசாலி’ என்று தெரிவித்ததும் மோடிக்கு ஆதரவான நடவடிக்கையே. `பி.ஜே.பி. ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் கூறவேண்டும்’ என்றும் ரஜினி கூறினார்.

பி.ஜே.பி-யின் செயல்பாடுகளுக்கு ரஜினி தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதோடு, பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவிலும் அவர் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2014-ம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை வந்த மோடி நேராக ரஜினியை அவருடைய போயஸ்கார்டன் வீட்டிற்கே சென்று சந்தித்ததையும் நாம் நினைவுகூர வேண்டும். அப்படிப் பார்க்கையில், ஏற்கெனவே அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும், அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கும் ரஜினி, பிரதமர் மோடியின் ஆதரவோடு புதியக் கட்சியை விரைவில் தொடங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.

அப்படி, ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியுடன் மோடி தலைமையிலான பி.ஜே.பி-யும், வேறு சில கட்சிகளும் கூட்டணி சேருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அந்தக் கூட்டணியில் அ.தி.மு.க-வும்கூட இடம்பெறலாம். ரஜினியைப் பொறுத்தவரை, அவர் ஏற்கெனவே ஆன்மிக அரசியல் என்று சொல்லியிருக்கிறார். பி.ஜே.பி-யின் இந்துத்துவக் கொள்கையுடன் ரஜினியின் கொள்கையும் ஒன்றாக இருக்கும் என்பதால், அதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

ஆக, பி.ஜே.பி தமிழகத்தில் தனது கணக்கைத் தொடங்குவதற்கும், ரஜினிக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கை ஏற்படுத்தவும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பயனடையும் வகையில் மோடி – ரஜினி ஜோடி சேர்ந்து, வரவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வித்தையில் இறங்குவார்கள் என்றே தெரிகிறது” என்கின்றனர்.

ஆனால், மோடி – ரஜினி இருவரின் வித்தை, தமிழக மக்களிடம் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

%d bloggers like this: