சுழற்சி முறையில் அமைச்சரவை! – தொடங்கியது பங்காளிச் சண்டை

பி.எம் மோடி… பி.எம் மோடி’’ என்று நம் காதில் விழும்படி முணுமுணுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘ஓ… இன்றைக்கு வெயிலின் தாக்கம் ரொம்ப அதிகமோ?’’ என்றோம்.
‘‘வெயிலின் தாக்கமல்ல, மோடியின் தாக்கம் அதிகம். தேர்தலின்போது திரைக்கு வராமல் தடைசெய்யப்பட்டிருந்த மோடியின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ‘பி.எம். மோடி’ ரிலீஸ் ஆகிவிட்டது. ரயில்வே நிலையத்தில் டீ விற்கும் சிறுவனாக வாழ்க்கையைத் தொடங்கும்போதே, சௌக்கிதார்களுடன்தான்

தொடங்கியிருக்கிறார் மோடி. அநேகமாக அப்போதே அச்சாரம் போட்டுவிட்டார்போல. ஒருவேளை தேர்தலுக்கு முன் படம் ரிலீஸ் ஆகியிருந் தால், இன்னும் கூடுதலான தொகுதிகளைக் கூட அள்ளியிருப்பார் போல.’’
‘‘ஏது ஏது ஒரேயடியாகப் புராணம் பாடுகிறீரே!’’

‘‘புராணம் இல்லை… வரலாறு. அவருடைய வாழ்க்கை வரலாற்றைத்தான் படமாக்கியுள்ளனர். கொஞ்சம்போல கூடுதல் குறைச்சல் இருக்கலாம். மற்றபடி கதையில் வரும் அனைவருமே நிஜத்திலும் நடமாடிக்கொண்டுதான் உள்ளனர். எனவே, நானும் உள்ளதை மாற்றியெல் லாம் சொல்லமுடியாது. ஒரு படமாக அழகாக வந்திருக்கிறது. சில நெருடல்களும் இருக்கத்தான் செய்கின்றன. படத்தைப் பார்த்து நீரே தெரிந்துகொள்ளும்.’’
“சரி. நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு அ.தி.மு.க தரப்பில் என்ன ரியாக்‌ஷன்?” என்றோம்.
“அமைச்சர்கள், பொறுப்பாளர்களை அழைத்து காரணம் கேட்டுள்ளார் எடப்பாடி. இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் பண விநியோகத்தை முறையாகச் செய்தவர்கள், நாடாளுமன்றத் தொகுதிகளில் அதை முறையாகச் செய்யவில்லையாம். முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே பணப்பதுக்கல் நடந்திருக்கிறது என்றால், பிற மாவட்டங்களின் நிலையை நினைத்துப் பாரும்.”

“அதனால்தான், முதல்வர் ஊரிலேயே கூடுதல் வாக்குகளை தி.மு.க அள்ளியதோ?”
“சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திலேயே அ.தி.மு.க குறைந்த ஓட்டுகள்தான் வாங்கியதால், எடப்பாடி செம அப்செட். பொறுப்பாளர்களை அழைத்து கடும் டோஸ் விட்டாராம்.”
“அது சரி… மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க முகாமில் யாருக்காவது அதிர்ஷ்டம் இருக்கிறதா?”
“பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்துக்கு இணை மந்திரி பதவி அளிக்கப்படலாம் என்கிறார் கள். ஆனால், ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கும் வைத்தியலிங்கமும் மந்திரி பதவி வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம். ‘நாம் கேட்க முடியாது. கொடுப்பதை மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும்’ என்று சொல்லிவிட்டாராம் முதல்வர்.
“ஓஹோ…”
“வரும் ஜூன் மாதம் அ.தி.மு.க-வில் மூன்று ராஜ்ய சபா உறுப்பினர்கள் இடம் காலியாகப் போகிறது. அதில் ஒன்று அன்புமணிக்குச் சென்றாலும் இரண்டு இடங்களுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. கிருஷ்ணகிரியில் நாடாளுமன்றத் தொகுதியில் தோற்றுப்போன கே.பி.முனுசாமி, தனக்கு ஒன்று வேண்டும் என்று இப்போதே துண்டு போட்டுவிட்டாராம். தம்பிதுரை யும் கேட்கிறார். பி.ஜே.பி லாபியை வைத்து மைத்ரேயன் திரும்பவும் அழுத்தம் கொடுக்கிறார். கே.பி.முனுசாமி ராஜ்யசபாவுக்குத் தேர்வானால், அவருக்கும் அமைச்சர் பதவியை அ.தி.மு.க கேட்கும் என்று சொல்கிறார்கள்.”
“தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
“அறிவாலயத்தில் நீண்ட ஆலோசனை நடைபெற்றிருக்கிறது. அப்போது, ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-கை, ராஜ்யசபா எம்.பி ஆக்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. இதற்காகத் தி.மு.க-விடமும் தூதுவிடத் திட்டமிட்டிருக்கிறது’ என்பது பற்றி யெல்லாம் அந்த ஆலோசனையில் அலசப்பட்டுள் ளது. ‘ஏற்கெனவே பத்து சீட் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. இருக்கிற ஒன்றிரண்டையும் தூக்கித் தரவேண்டுமா?’ என்று கொதித்த முக்கிய தலைவர் ஒருவர், ‘அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம்; நம்முடைய கட்சியின் ராஜ்யசபா பட்டியலை முன்கூட்டியே அறிவித்துவிடுவோம்’ என்று சொல்லியிருக்கிறார்.’’
‘‘பலே பலே.’’

‘‘மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் பெயரும் பட்டியலில் இடம்பெறக்கூடும் என்கிற பேச்சிருந்தது. ஆனால், வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டார் களாம். சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்.முத்துராமலிங் கம், முகமது ஷகி, பொங்கலூர் பழனிசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், என்.ஆர்.இளங்கோ, தொழிற்சங்கத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. வைகோவுக்கு சீட் கன்ஃபார்ம் என்கிறார்கள். அதேநேரம், ‘தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தலில், சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக விழுந்தது. நாடாளுமன்றத் தேர்தலில்தான் இஸ்லாமியர்களுக்கு சீட்டு வழங்கவில்லை. ராஜ்ய சபாவிலாவது வாய்ப்பு கொடுக்கலாமே’ என்று இஸ்லாமிய உடன்பிறப்புகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.’’
“தி.மு.க-வின் வெற்றிக்குப் பிறகு உதயநிதிக்கு மவுசு கூடியுள்ளதாமே?’’
“ஆமாம்! இவர் பிரசாரம் செய்ய ஆரம்பித்தபோது அது பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், போகப்போக மக்களிடம் நன்றாக எடுபட்டிருப்பதாக ரிப்போர்ட் கிடைத்துள்ளதாம். அன்பு மணிக்கு எதிராக செந்தில்குமாரை சிபாரிசு செய்ததும் அன்புமணியை வீழ்த்த தனித்திட்டம் போட்டுக் கொடுத்ததும் உதயநிதி டீம்தானாம். இதனால் இவருக்குப் பாராட்டுகள் குவிகிறதாம்!”
“அது சரி… ஆளும் கட்சியில் அமைச்சர்கள் மாற்றம் இருக்கும் என்று சொல்லி யிருந்தீரே?”
“கண்டிப்பாக வாய்ப்பு உண்டு. ‘ஏழு வருடங்கள் ஆண்டு அனுபவித்தது போதாதா?’ என்று ஆளும் முகாமில் எம்.எல்.ஏ-க்கள் பலரும் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அங்கு பங்காளிச் சண்டை ஆரம்பித்து விட்டது என்றே சொல்கிறார்கள். சமீபத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், முதல்வருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரிடம் சென்று, ‘மாவட்டச் செயலாளர் பதவி கேட்டேன். அதுவும் தரலை… அமைச்சர் பதவியும் தரமாட்டீங்க. நானும் செந்தில்பாலாஜி பாலிசியைக் கையில் எடுக்க வேண்டியது தான். மூணு வருசம் அமைச்சரா இருந்த வங்க… ரெண்டு வருஷம் விட்டுக்கொடுத்தா என்ன?’ என்று கேட்க மூத்த அமைச்சருக்கு பொறி தட்டியுள்ளது.”
“என்ன பொறியாம்?”
“இந்தக் கருத்தை அவர் அப்படியே முதல்வரிடம் பாஸ் செய்துள்ளார். ‘மோடி பதவியேற்பு விழா முடிந்தவுடன், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்த உள்ளேன். அப்போது இந்தக் கருத்தை அங்கே சொல்லச் சொல்லுங்கள். அதற்கு ஆதரவாக மேலும் சிலரும் பேசுவார்கள். அப்போதுதான் என்னால் இதுகுறித்து முடிவு எடுக்கமுடியும். சுழற்சி முறையில் அமைச்சரவை என்கிற திட்டத்தை அந்தக் கூட்டத்தில் வைத்தே முடிவு எடுத்துவிடலாம்’ என்று முதல்வர் தரப்பு சொன்னதாம். இப்போது 32 அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதல்வருக்கு ராசியான எண் ‘ஐந்து’ என்பதால், இந்த உள்ளே வெளியே ஆட்டத்தை ஆடிப் பார்க்க நினைக்கிறதாம் எடப்பாடி தரப்பு.”
“அமைச்சரவை மாற்றத்தில் எதற்கு இவ்வளவு தயக்கம் காட்டுகிறார் எடப்பாடி?”
“இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால், அமைச்சரவை மாற்றத்தைத் தெம்பாக செய்திருப்பார். ஆனால், ஒன்பது இடங்களில் வெற்றிபெற்றதால் யோசிக் கிறார் என்கிறார்கள். ‘தி.மு.க தரப்பு ஆட்சி யைக் கவிழ்க்கச் சதி செய்யும் வாய்ப்புள்ளது’ என்றும் தகவல்கள் வருவதால், தேவை யில்லாமல் அமைச்சரவை மாற்றம் என்று இறங்கிக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று யோசிக்கிறார். அதற்குப் பதிலாக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலே குழப்பத்தை ஏற்படுத்தினால் அதன் மூலம் சுழற்சி முறையில் அமைச்சரவை மாற்றம் என்கிற திட்டத்தைக் கொண்டுவந்து தனக்கு வேண்டியவர்களையும் அமைச் சரவைக்குள் கொண்டுவந்துவிட எண்ணுகிறார் முதல்வர்”
“அடேங்கப்பா!”
“இன்னொரு தகவலையும் சொல்கிறேன். டெல்லியில் பி.ஜே.பி அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்த உற்சாகத்தில் இருக்க… தமிழக பி.ஜே.பி-யினரோ ‘அமைச்சர் பதவி போய்விட்டதே’ என்று புலம்பிவருகிறார்களாம். கடந்த சில நாள்களுக்கு முன்பு சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகிய மூவரும் டெல்லி பி.ஜே.பி அலுவலகத்தில் முகாமிட்டு, அமைச்சர் பதவிக்குக் காய் நகர்த்தி வருகிறார்களாம்!”
“எவ்வளவு பெரிய தோல்வி அடைந்திருக் கிறார்கள்… இதன் பின்பும் வாய்ப்பு இருக்கிறதா என்ன?”
“பொறுமையாகக் கேளும்… ‘அ.தி.மு.க-விடம் இருக்கும் ராஜ்ய சபா எம்.பி பதவியை வாங்கித் தாருங்கள்… அதன் மூலம் அமைச்சராகிவிடுகிறோம்’ என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களின் கோரிக்கையைக் கேட்ட சில பி.ஜே.பி தலைவர்களே ஜெர்க் அடைந்துவிட்டார்களாம். ‘கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல், இப்போது அடுத்த வாய்ப்பை கேட்டு வருகிறார்களா?’ என்று கொந்தளித்துள்ளார் ஒரு தலைவர்.”
“மத்திய அமைச்சரவை பட்டியல் தயாராகிவிட்டதா?”
“படு ரகசியமாக வேலைகள் நடக்கின்றன. அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களுக்குக்கூட யார் அமைச்சராகப் போகிறார்கள் என்கிற விவரம் தெரியவில்லை. மோடி, அமித் ஷா இருவரும் சேர்ந்து ஒரு பட்டியல் தயாரித்திருக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளிடம், ‘யாருக்கு அமைச்சர் பதவி வேண்டும்?’ என்று மட்டும் கேட்க உள்ளார்கள். துறையைக்கூட இவர்கள் மட்டுமே முடிவு செய்வார்களாம். கடந்த முறை ஆர்.எஸ்.எஸ் ஒப்புதலுடன் அமைச்சரவை முடிவானது. இந்த முறை இவர்கள் முடிவு செய்த பிறகே, சம்பிரதாயத்துக்கு ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு அனுப்ப உள்ளார்களாம். ஒரு தகவல் மட்டும் உறுதியாகச் சொல்கிறார்கள். அமித் ஷா இந்த அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்கப் போகிறார். கடந்த முறை அமைச்சரவையில் இருந்த சில மூத்த அமைச்சர்கள் கழற்றிவிடப்படப் போகிறார்கள்.”

“தினகரன் மீது சசிகலா கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”
“அ.தி.மு.க-வுக்கு மாற்று என்று சொன்ன தினகரன் கட்சிக்குப் பல இடங்களில் டெபாசிட் போய்விட்டது. இடைத்தேர்தலில் ஓர் இடத்தில்கூட வெல்லவில்லை. தஞ்சாவூர் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வோம் என்று அவர் நம்பியிருந்தார். அங்கும் பலத்த அடி. பெரம்பூரில் அந்தக் கட்சியின் தளபதியான வெற்றிவேலுக்கு ஐந்தாவது இடம். இதனால் ‘நம் கட்சியினரே நமக்கு ஓட்டுப் போடவில்லையா?’ என்கிற கேள்விதான் தினகரனைக் குடைகிறது.”
“சசிகலா என்ன நினைக்கிறாராம்?”
“கடும் அப்செட்டில் இருக்கிறாராம் சசிகலா. ‘அ.ம.மு.க கணிசமான வாக்குகள் வாங்கியிருந்தால், அதைக் காரணமாக வைத்தே அ.தி.மு.க-வை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்… தினகரன் சொதப்பிவிட்டார்’ என்று இளவரசியிடம் சொன்னாராம்” என்று சொன்ன கழுகார், “ஒரு விஷயம் சொல்கிறேன்… நீரே யூகித்துக்கொள்ளும். தமிழகத்தில் ஒரு கட்சியின் தலைவரிடம், ‘கட்சியைக் கலைத்துவிட்டு, தாமரை வாசத்தில் ஐக்கியமாகிவிடுங்கள். சௌக்கியமாகப் பார்த்துக்கொள்கிறோம்’ என்று பேச்சுவார்த்தை நடக்கிறது. முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறாராம் அந்தத் தலைவர்!” என்று சொன்ன கழுகார் சிறகுகளை விரித்துப் பறந்தார்!

%d bloggers like this: