திருடனுக்கு தேள் கொட்டிய கதை’ – அவஸ்தையில் எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தொகுதிக்குப் பொறுப்பாளர்களான அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களிடம் ‘ஏன் தோற்றோம்?’ எனக் கேள்வி எழுப்ப முடியாமல் எடப்பாடி பழனிசாமி பரிதவிக்கிறாராம்.

நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க, தேனி தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியை வெற்றியடையவைக்காத மாவட்டச் செயலாளர்களும் தொகுதிக்குப் பொறுப்பான அமைச்சர்களும் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக எதுவும் செய்ய முடியாமல் பரிதவிக்கிறாராம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. சீனியர்கள் சிலர், “அ.தி.மு.க போட்டியிட்ட தொகுதிகளிலேயே மிக அதிகமாக கரூரில் 4.20 லட்சம் வாக்குகள், மிகக் குறைவாக சிதம்பரத்தில் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘நம்ம வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை என்றால், கட்சி கடுமையாக நடவடிக்கை எடுக்கும். அப்பறம் என்னைய கோவிச்சுக்காதீங்க’ என்றார். இன்று, அவர் பொறுப்பேற்ற சேலம், கள்ளக்குறிச்சி இரண்டு தொகுதிகளுமே தோல்வியடைந்துள்ளன.

சேலத்தில் 1.46 லட்சம் வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 3.99 லட்சம் வாக்குகளும் அதிகம் பெற்று தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதனால், மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க ஏன் தோல்வியைத் தழுவியது?  என கேள்வி எழுப்ப முடியாத நிலைக்கு எடப்பாடி தள்ளப்பட்டுள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரத்துக்கு மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்களின் பதவியெல்லாம் பறந்திருக்கும். அதுபோல எடப்பாடியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.  ஏற்கெனவே, சில அமைச்சர்கள் முதல்வரை மதிப்பதில்லை. ‘கட்சி ஏன் தோற்றது?’ என முதல்வர் கேள்வி எழுப்பினாலே, ‘சேலத்துல ஏன் தோற்றது? அதற்கு நீங்க பொறுப்பேற்றுக்கொள்கிறீர்களா…’ என சலங்கைகட்டி ஆட ஆரம்பித்துவிடுவார்கள். இதற்குப் பயந்துகொண்டே எடப்பாடி அமைதியாக இருக்கிறார்” என்றனர்.

 

சேலம், கள்ளக்குறிச்சி தோல்வியைத் தழுவிய சோகம் ஒருபுறமிருந்தாலும், தேனியில் அ.தி.மு.க வெற்றிபெற்றது எடப்பாடியார் மனத்தை வெகுவாகப் பாதித்துவிட்டதாம். அத்தொகுதியில் தன் மகனை வெற்றிபெற வைத்து, ஓ.பி.எஸ் தன் செல்வாக்கை நிரூபித்துவிட்டார். தன்னால் சொந்தத் தொகுதியான சேலத்தில்கூட அ.தி.மு.க-வை ஜெயிக்கவைக்க முடியவில்லையே என மிகவும் வருந்துகிறாராம். இரண்டு நாள்களாக முதல்வரின் முகம் மிகவும் சோர்ந்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.

%d bloggers like this: