ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!’

ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால், அ.ம.மு.க.,வை உடைக்கவும், அ.தி.மு.க.,வில் இணையவும் தயாராக இருப்பதாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் வாயிலாக, முதல்வர், இ.பி.எஸ்.,க்கு, அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்கதமிழ்செல்வன் துாது விட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க., சார்பில், அடுத்த மாதம், மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில், ஒன்று, பா.ம.க.,வுக்கு செல்கிறது. மீதமுள்ள இரண்டில் ஒன்றை, தமிழக பா.ஜ., தரப்பில் கேட்பதாக தெரிகிறது.

மூன்றாவது பதவிக்கு, கட்சியின் முன்னணி தலைவர்கள் மோதுகின்றனர். யாருக்கு ஒதுக்குவது என, மேலிடம் குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில், தனக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால், அ.தி.மு.க.,வில் இணைவதற்கு தயார்என, கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் வாயிலாக, தங்கதமிழ்செல்வன் துாது அனுப்பியுள்ள தகவல் கிடைத்துள்ளது.

ராஜ்யசபா எம்.பி., பதவி தரும்பட்சத்தில், அ.ம.மு.க.,வில் உள்ள, தன் ஆதரவாளர்களை, அ.தி.மு.க.,விற்கு அழைத்து வருவதாகவும், அவர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், ‘யார் விரும்பினாலும் போகலாம்; பத்து பேர் செல்வதால், அ.ம.மு.க.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. செந்தில்பாலாஜி, தி.மு.க.,வில் இணைந்தது, அவரது புத்திசாலித்தனம்’ என,கூறியிருக்கிறார்.

இதையடுத்து, ‘அ.ம.மு.க.,வினர், தங்கள் ஆதாயத்திற்காக, மாற்று கட்சிகளுக்கு செல்வது புத்திசாலித்தனம் என்றால், தங்கதமிழ்செல்வன் எடுக்கிற முடிவும் புத்திசாலித்தனம் தானே’ என, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

%d bloggers like this: