ஜூன் டார்கெட்… விழுமா விக்கெட்? – விரட்டும் தி.மு.க… மிரட்டும் உளவுத்துறை!

ருணாநிதி இல்லாத முதல் பிறந்தநாள் விழா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. அதை கவர் செய்துவிட்டு உம்முன் ஆஜராகிறேன்” என்று வாட்ஸ் அப் செய்தி அனுப்பிய கழுகார் அடுத்த அரைமணி நேரத்தில், கையில் குறிப்புகளுடன் நம்முன் ஆஜரானார்.
‘‘அறிவாலயத்திலிருந்து வருகிறீர்… தி.மு.க செய்திகள்தானே அதிகமிருக் கும்?’’
‘‘தி.மு.க முகாம்தான் பரபரப்பாக இருக்கிறது. அங்கிருந்துதானே செய்தி களை அள்ளிவர முடியும்? தி.மு.க-வில் சில அதிரடி மாற்றங்கள் இந்த வாரத்தில் நடக்கப்போகின்றன. முதல் மாற்றம்… ஸ்டாலினுக்கு மிகவும் விருப்பமான இளைஞர் அணிச் செயலாளர் பதவி விரைவில் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினுக்குத் தரப்பட உள்ளது. இப்போது இளைஞர் அணிச் செயலாளராக இருக்கும் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வேறு ஒரு பதவியைக்

கொடுத்துவிட்டு அந்தப் பதவியை உதயநிதிக்குக் கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறாராம். அதற்கான வேலைகள் தொடங்கி விட்டன. இந்தத் தேர்தலில் உதயநிதியின் பிரசாரத்துக்கு மக்களிடம் இருந்த வரவேற்பையும் இதற்கு ஆதாரமாக்கப் போகிறார்கள்!’’
‘‘கருணாநிதி குடும்பத்திலிருந்து மூன்றாம் தலைமுறை என்று சொல்லும்?’’
‘‘உமக்கு நக்கல்தான். இந்த மாற்றத்துக்கு கருணாநிதி குடும்பத்தின் ரியாக்‌ஷன் என்னவாம்?’’
‘‘கனிமொழி மட்டும் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார். அது கருணாநிதி பிறந்த நாள் அன்று வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது. கருணாநிதி உருவப்படத்துக்கு ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி மரியாதைசெய்த நிகழ்வில், கனிமொழி கலந்துகொள்ளவில்லை. தனியாக வந்து மாலையிட்டார். அப்போதே இதுகுறித்த முணுமுணுப்பு ஆரம்பித்துவிட்டது.’’
‘‘ஏன், அண்ணன் – தங்கை பாசம் நன்றாகத்தானே இருந்தது?’’
‘‘தேர்தல் முடிவுவரை எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், தி.மு.க எம்.பி-க்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டதும் கனிமொழி அப்செட்டாம். ‘டி.ஆர்.பாலுவுக்கு முதன்மைச் செயலாளர் பதவி ஏற்கெனவே இருக்கிறது. என்னிடமிருந்த நாடாளு மன்றக்குழுத் தலைவர் பதவியைப் பறித்துக் கொடுக்க வேண்டுமா?’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் குமுறியிருக்கிறார் கனிமொழி. அவரிடம் இதற்கான தூபத்தைப் போட்டது வட மாவட்டத்தைச் சேர்ந்த சில எம்.பி-க்கள் தானாம். தங்கள் சமூகத்துக்கு ஒரு வாய்ப்புகூட கிடைக்கவில்லை என்று கனிமொழியை வைத்து இந்தக் கருத்தைத் தலைமைக்குத் திணிக்கப் பார்க்கிறார்கள்!’’

‘‘தி.மு.க எம்.பி-க்கள் கதையை விடும்… எம்.எல்.ஏ-க்கள் கதை என்ன?’’
‘‘ஆட்சியைப் பிடிக்க தி.மு.க வளைக்கத் திட்டமிட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் கதையைக் கேட்கிறீரா… இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றும் தி.மு.க-வினால் எந்தப் பதவியையும் பிடிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் ஸ்டாலினிடம் நிறையவே இருக்கிறது. ‘‘மத்தியில்தான் இனி வாய்ப்பில்லை. மாநிலத்தில் நாம் கொஞ்சம் முயன்றால் மாற்றத்தை ஏற்படுத்தலாம்’’ என்று தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் கொடுத்த நெருக்கடிக்கு இப்போதுதான் ஸ்டாலின் இறங்கிவந்துள்ளார். ‘பி.ஜே.பி பாணியைக் கையில் எடுப்போம்’ என்று தி.மு.க நிர்வாகிகளிடம் ஸ்டாலின் சொல்ல, அவர்கள் ஆச்சர்யப்பட்டுள் ளனர்.’’
‘‘அதென்ன பி.ஜே.பி பாணி?’’
‘‘பி.ஜே.பி, குஜராத் உட்பட பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்ததற்குத் தேர்தல் வெற்றி மட்டும் காரணமல்ல. ஆளும்கட்சியை வளைத்தது மற்றொரு யுக்தி. அதிக பெரும்பான்மை இருந்தால் அங்கு ஒன்றும் செய்யமாட்டார்கள். ஒற்றை இலக்கத்தில் பெரும்பான்மை இருந்தால், பி.ஜே.பி தரப்பு ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களை முதலில் வளைத்து விடும். தேவையான எண்ணிக்கை வந்தவுடன் அவர்களை ஒரே நேரத்தில் ராஜிநாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்க வைப்பார்கள். ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியான தொகுதி களாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங் களில் தேர்தல் நடைபெறும். அப்போது ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ-க்களே பி.ஜே.பி வேட்பாளராகக் களத்தில் இறங்கி வெற்றியைப் பெறவைத்து ஆட்சி மாற்றத்தைச் சத்தமில்லாமல் நடத்திவிடுவார்கள். இந்த யுக்தியை இப்போது தி.மு.க கையில் எடுத்திருக் கிறது. ஜூன் இறுதிக்குள் இதை நிகழ்த்திவிட நினைக்கிறார்கள்… அதுதான் ஜூன் டார்கெட். இதற்கு அ.தி.மு.க தரப்பில் எத்தனை விக்கெட்டு கள் விழப்போகிறதோ தெரியவில்லை!’’
‘‘ஓ..! அணி மாறாமல் ஆட்சி மாற்றம்… சூப்பர்!’’
‘‘அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை செந்தில் பாலாஜி, அனிதா ராதா கிருஷ்ணன், சேகர் பாபு ஆகிய மூவர் அணியிடம் ஒப்படைத்திருக்கிறது தி.மு.க தலைமை. இந்த மூவரும் தங்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க புள்ளிகள் மூலம் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் லிஸ்ட்டை கையில் எடுத்திருக்கிறார் கள். அந்த லிஸ்ட்டிலிருந்து ஐந்து முதல் பத்துப் பேருக்கு வலைவிரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த மூவரையும் நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், வேலு, சக்கரபாணி ஆகியோர் வழி நடத்துகிறார் கள். இந்த டீம்ஒர்க் எந்த அளவுக்கு ஒர்க் அவுட்டாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.’’

‘‘இதுவரை வலையில் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்களாம்?’’
‘‘உறுதியாக மூவர் என்கிறார்கள். இழுபறியில் நால்வராம். தென்னகத்தைப் பெயராகக்கொண்ட தொகுதியின் எம்.எல்.ஏ, ஆட்டத்துக்குப் பேர் போன எம்.எல்.ஏ, சாமி பெயர் கொண்ட எம்.எல்.ஏ மூவரும் வழிக்கு வந்துவிட்டார்கள் என்கிறது தி.மு.க தரப்பு. ‘‘இன்னும் இந்த ஆட்சி இரண்டு ஆண்டுகள் இருக்கும். அதுவரை நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ, அதைவிட கூடுதலாக நாங்கள் செய்கிறோம். இடைத்தேர்தல் வரும்போது சீட் உறுதி. அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க வந்து நாங்கள் எம்.எல்.ஏ-வாகவில்லையா என்று இந்தப் பேச்சுவார்த்தையில் தூண்டில் போடுகிறார்கள்!’’
‘‘இதெல்லாம் எடப்பாடிக்குத் தெரியாமலா இருக்கும்… அவர் என்ன செய்கிறார்?’’
‘‘அவர் படு உஷ்ணமாக இருக்கிறார். தி.மு.க-வை முடக்க மத்திய அரசிடமும் உதவி கோரத் தயாராகிவிட்டார். கடந்த வாரமே உளவுத் துறையை வைத்து உளவு வேலையையும் ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.’’
‘‘எந்த மாதிரியான உளவு வேலை?’’
‘‘உளவுத்துறை டீம் ஒன்று தி.மு.க முக்கியப் புள்ளிகளின் போனை ஒட்டுக்கேட்பதைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பிட்ட சில தி.மு.க புள்ளிகளிடம் உளவுத்துறை அதிகாரிகளே நேரடி யாகப் பேசியிருக்கிறார்கள். ‘‘இந்த வேலையெல் லாம் உங்களுக்கு எதுக்குண்ணே… சென்ட்ரல்ல பி.ஜே.பி ஆட்சி நடக்குது… நீங்க எதுவுமே செய்யமுடியாது. உங்க பழைய கதையெல்லாம் தோண்ட ஆரம்பித்துவிடுவார்கள்” என்று நெளிவு சுளிவாக மிரட்டவும் செய்திருக்கிறார்கள்.’’
‘‘தி.மு.க-வினர் இதற்கெல்லாம் பயப்படுபவர் களா என்ன?’’
‘‘முக்கிய தி.மு.க பிரமுகர்கள் சிலர் இந்த போன்கால்களை எதிர்கொண்டு பேசியிருக்கிறார் கள். இதுபற்றி அறிவாலயத்திலும் தீவிரமாக விவாதம் நடந்திருக்கிறது. தி.மு.க-வில் யாரெல் லாம் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்குக் குறி வைக்கிறார் களோ அவர்களின் பழைய ஃபைல்களை நோண்டச் சொல்லிவிட்டாராம் எடப்பாடி. தி.மு.க ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களை விரட்டிப் பிடிக்கப் பார்த்தால், அ.தி.மு.க அவர்களை மிரட்டிப் பார்க்கிறது!’’
‘‘எப்படியாவது ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமே!’’
‘‘அதுமட்டுமா… 3-ம் தேதி அ.தி.மு.க சார்பில் இஃப்தார் விருந்து நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு அனைத்து எம்.எல்.ஏ-க்களும் வந்துவிட வேண்டும் என்று கறார் உத்தரவு போயிருக்கிறது. அந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்த எடப்பாடி, ‘தி.மு.க தரப்பிலிருந்து அழைப்பு வந்தால் துரத்திவிட்ருங்க… நம்ம ஆட்சிக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. அதுக்குள்ள உங்களுக்கு வேண்டியதைச் சாதிச்சுக்கோங்க’ என்று அன்பாக அதட்டி யிருக்கிறார்.’’

‘‘அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கிறது என்று சொல்லும்!’’
‘‘ஆமாம்… தி.மு.க-வுக்கு மத்திய அரசு தரப்பிலும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக 2 ஜி வழக்கின் மேல் முறையீட்டை வேகப்படுத்தியிருப்பது, கனிமொழி, ஆ.ராசாவுக்கு செக் வைக்கும் வேலையாகத் தெரிகிறது. மறுபுறம் கார்த்தி சிதம்பரத்தைக் குறிவைத்தும் சில வேலைகள் நடக்கின்றன. தயாநிதி மாறன் தொடர்பான மேக்ஸிஸ் வழக்கையும் கையில் எடுத்திருக்கிறார்கள். இந்த நான்கு எம்.பி-க்களும் விரைவில் பதவி இழப்பார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி கொளுத்திப்போட்டதிலும் தி.மு.க தரப்பு கொஞ்சம் பயந்துதான் இருக்கிறது!’’
‘‘மத்தியிலும் மாநிலத்திலும் தனது ஆளுமை இருக்க வேண்டும் என்று பி.ஜே.பி செயல் படுகிறதோ?’’
‘‘அதிலென்ன சந்தேகம்… மத்திய அரசின் கண்ணசைவில்தானே மாநிலஅரசு செயல்படுகிறது. ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்தி வைப்பதுபோல அதிகாரிகளைக் கட்டுப்படுத்தவே தலைமைச்செயலாளராகத் தங்களுக்கு வேண்டியவரை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது. இப்போது காவல்துறை தலைவராகவும் தங்களுக்கு வேண்டியவர் வரவேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு நெருக்கமான அமைப்பு ஒன்று தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இந்த ரேஸில், முன்னணியில் இருக்கும் திரிபாதியே அவர்கள் சாய்ஸ். தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர், நமக்கு ஒத்துவருவார். மாநிலத்தில் நமக்குத்தெரியாமல் ஏதும் நடக்காது என்று கணக்குப்போடுகிறது டெல்லி லாபி. ஆனால், எடப்பாடிக்கு ஜாபர்சேட்டைக் கொண்டு வரத்தான் விருப்பம். திரிபாதி தவிர லட்சுமி பிரசாத்தும் பி.ஜே.பி லாபியைக் கையில் எடுத்துள்ளார். இப்போது டி.ஜி.பி-யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன், தன் பதவிக்காலம் முடிந்ததும் அரசு ஆலோசகர் பதவியைக் குறி வைத்துக் காய் நகர்த்தி வருகிறார்” என்ற கழுகார் சட்டென சிறகுகளை விரித்தார்.


காலியாகிறது அ.ம.மு.க கூடாரம்!
தெ
ன் மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அதிகம் இருப்பதாக நம்பப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக வந்துவிட்டன. இதனால் டி.டி.வி.தினகரனை நம்பி அ.ம.மு.க-வில் சேர்ந்திருந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்யும் மனநிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியானதும் அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருந்த ஆ.பி.ஆதித்தன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அதைத் தொடர்ந்து தென்காசி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்தார்.
இந்த நிலையில், சென்னையில் அ.ம.மு.க தலைமை அலுவலகத்துக்குத் தன் சொந்த வீட்டைக் கொடுத்திருக்கும் முன்னாள் அமைச்சரும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்டவருமான இசக்கி சுப்பையாவும் அணி மாறக் காத்திருக்கிறார். தென் மாவட்டங்களில் அ.ம.மு.க கூடாரத்தைக் காலிசெய்யும் பொறுப்பு, தளவாய் சுந்தரத்திடம் தரப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி மிகப் பெரிய அளவில் ஓர் இணைப்பு விழாவை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது அ.தி.மு.க தரப்பு.

%d bloggers like this: