இரண்டு அமைச்சர்களுக்கு குறி!- உச்சக்கட்ட கோபத்தில் அமித் ஷா

தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி ஐந்து தொகுதிகளில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரண்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மீது அமித் ஷா உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம். அவர்களுடைய கவுன்டவுன் தொடங்கி இரண்டு வாரமாகிவிட்டதாகக் கூறுகிறது பி.ஜே.பி வட்டாரம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி மாநில நிர்வாகிகள், “நாடாளுமன்றத் தேர்தலில் கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து தொகுதிகளில் பி.ஜே.பி போட்டியிட்டது. நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட  ராமநாதபுரத்திலும், சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட கோயம்புத்தூரில் மட்டும்தான் பி.ஜே.பி இரண்டு லட்சம் வாக்குகள் குறைவான வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மற்ற மூன்று தொகுதிகளிலும் தோல்வி வித்தியாசம் மூன்று லட்சம் வாக்குகளைத் தொட்டுவிட்டது.

 

இதே தொகுதிகளில் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்டபோது, கோவையில் 4.31 லட்சம், கன்னியாகுமரியில் 1.76 லட்சம், ராமநாதபுரத்தில் 4.05 லட்சம், சிவகங்கையில் 4.75 லட்சம், தூத்துக்குடியில் 3.66 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிட்ட பி.ஜே.பி-யும் கணிசமாக வாக்குகளைப் பெற்றுள்ளது. இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தினகரனின் பிரிவு, ஜெயலலிதாவின் தலைமை இல்லாதது இவற்றுக்கு ஒரு லட்சம் வாக்குகளைக் கழித்துவிட்டாலும் கூட, மற்ற வாக்குகள் எல்லாம் எங்கே போனது?

தேர்தல் தோல்விக்குப் பிறகு இரண்டு அறிக்கைகள் அமித் ஷாவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒன்று, பி.ஜே.பி தோல்வியடைந்த ஐந்து தொகுதிகளில் சாதி, வயது, பகுதி வாரியாக கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்குகள், கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு கிடைத்துள்ள வாக்குகளின் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது, பி.ஜே.பி-யின் தோல்விக்குக் காரணமான இரண்டு கொங்கு மண்டல அமைச்சர்களின் செயல்பாடுகள் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமான இவர்கள் இருவரும், பி.ஜே.பி-யின் வெற்றிக்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. ‘பி.ஜே.பி-யினர் ஏற்கெனவே நம்மை மதிப்பதில்லை. ஓரிரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால்கூட நாம் கிள்ளுக்கீரைதான். நம்ம ஆட்கள் ஓரமாக வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்’ என்று அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டார்களாம். தேர்தலின் போதும் இவ்விவகாரம் பியூஷ் கோயல் வரை எழுப்பப்பட்டு, அவரும் எச்சரித்தார். அதற்குப் பிறகும் அ.தி.மு.க தரப்பில் எந்த ஒத்துழைப்பும் இல்லை. ஜெயித்திருக்கக் கூடிய ராமநாதபுரம், கோயம்புத்தூர் தொகுதிகளையும் பி.ஜே.பி கைநழுவவிட்டது. இத்தொகுதிகளில் அ.தி.மு.க கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், பி.ஜே.பி ஜெயித்திருக்கும் என அமித் ஷா கொதிப்பில் உள்ளார். ஏற்கெனவே பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியுள்ள அந்த இரண்டு அமைச்சர்கள் மீதும், விரைவில் மத்திய அரசின் இரும்புக்கரம் பாயலாம்” என்றனர்.

அந்த இரண்டு அமைச்சர்கள் மட்டுமல்ல. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பி.ஜே.பி தொகுதிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என அமித் ஷா கருதுகிறாராம். சட்டமன்ற இடைத்தேர்தலில் காட்டிய கவனத்தை, இதிலிலும் காட்டியிருந்தாலே பி.ஜே.பி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என கோபத்தில் உள்ளாராம். எடப்பாடிக்கு வைக்கப் போகும் முதல் `செக்’, இந்த இரண்டு அமைச்சர்களிடமிருந்து தொடங்கும் என பி.ஜே.பி வட்டாரம் கூறுகிறது. 

%d bloggers like this: