பன்னீர்செல்வத்தைவிட எடப்பாடி பழனிசாமி மேல்!’ – ஆடிட்டர் அஸ்திரத்தால் அதிரும் அ.தி.மு.க

இப்படியொரு வீழ்ச்சிக்குப் பிறகு அ.தி.மு.க-வோடு நெருக்கம் காட்டுவது அவசியமற்றது. இதனால் பா.ஜ.க தான் பலவீனப்பட்டுப் போகும். இனி அ.தி.மு.க-வை நம்பி காலத்தை ஓட்ட முடியாது. தேர்தல் முடிவில் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை நம்பக்கம் கொண்டு வர வேண்டும் என்றால், அவர்களை வீழ்த்துவதுதான் ஒரே வழி.

அ.தி.மு.க தலைமையை விமர்சித்து கேலிச் சித்திரம் வரைந்த `துக்ளக்’ பத்திரிகை மீது மூன்று நாள்களுக்குப் பிறகு கோபத்தைக் காட்டியிருக்கிறது ஆளும்கட்சி நாளிதழான `நமது அம்மா’. `ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் தன்னுடைய தேவைக்காக மட்டுமே பா.ஜ.க-வைப் பயன்படுத்திக்கொள்கிறார் பன்னீர்’ என ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பு கொந்தளிக்கிறது.

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற கையோடு, `மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துவிடலாம்’ என நம்பிக்கையோடு காத்திருந்தார் ரவீந்திரநாத். ஆனால், பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் அ.தி.மு.க-வுக்கு இடம் அளிக்கப்படவில்லை. `கட்சியின் சீனியர்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தால், ரவீந்திரநாத்துக்குக் கொடுக்கப்படுவதை வரவேற்கிறோம்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் காட்டிய கெடுபிடியை பன்னீர்செல்வம் ரசிக்கவில்லை. அதேநேரம், பா.ஜ.க நிர்வாகிகளும், `மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வினர் பெரிதாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. சட்டமன்றத் தேர்தல் வெற்றி குறித்துத்தான் அவர்கள் அதிகம் கவலைப்பட்டனர். நாம் கேட்ட தொகுதிகளையும் ஒதுக்காமல், தோற்கடிக்கக் கூடிய தொகுதிகளைக் கொடுத்துவிட்டனர்’ என்றெல்லாம் தலைமைக்குச் சுட்டிக் காட்டினர். இதன் தொடர்ச்சியாகத்தான் அ.தி.மு.க-வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை என்ற தகவல்களும் வெளியாகின. இந்தநிலையில், துக்ளக் இதழில் வெளியான கேலிச் சித்திரம் அ.தி.மு.க நிர்வாகிகளைக் கடுகடுக்க வைத்தது. 

துக்ளக்

`துக்ளக்’ இதழின் அட்டைப் படத்தில் அமைச்சரவையில் அ.தி.மு.க-வுக்கு இடம் இல்லாததை சுட்டிக் காட்டி, `நம்மை எல்லாம் உள்ளேகூப்பிட மாட்டாங்க. கடைசியா, ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்‘ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியொரு நேரடித் தாக்குதலை அக்கட்சித் தலைமை எதிர்பார்க்கவில்லை. `அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் எதாவது கருத்தை வெளிப்படுத்துவார்கள்’ என அ.தி.மு.க தொண்டர்களும் காத்திருந்தனர். மூன்று நாள்களாக இதுதொடர்பாக ஒருவரும் பேசவில்லை. ஆடிட்டரின் விமர்சனத்துக்குப் பதில் அளிக்காமல் இருப்பது தொடர்பாக முதல்வரிடம் நிர்வாகிகள் சிலர் எடுத்துக் கூறியுள்ளனர். `நம்மை வீழ்த்த வேண்டும் என்ற நினைப்பில் இப்படி விமர்சிக்கிறார்கள். நாம் பதில் கொடுக்கவில்லையென்றால் தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற சலசலப்பு ஏற்படும். கேலிச் சித்திரத்தை விமர்சித்து எழுதுங்கள்’ என ஒப்புதல் வந்துள்ளது. இதையடுத்து, `அதிகாரத்துக்கு ஏங்குவது போல அண்ணா தி.மு.க-வை அப்பத்திரிகை விமர்சித்திருக்கிறது. கழகம் தொடங்கப்பட்டு 42 வருடங்களில் ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலாக அதிகாரத்தில் அமர்ந்து ஆட்சியில் இருந்து கொண்டே வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்கிற அரசியல் புரட்சியை 32 வருடங்களுக்குப் பிறகு நடத்திக் காட்டியிருக்கும் அண்ணா தி.மு.க, ஒருபோதும் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்றதில்லை. அதனால் இதுபோன்ற நாலாந்தர விமர்சனங்களுக்குக் கழகத்துக்குச் சிப்பாய்கள் செவிமடுக்காமல் கடந்து போவது ஒன்றே அவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும்’ என துக்ளக்கை விமர்சித்துள்ளது நமது அம்மா நாளேடு. 

ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பினரிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் பெரியளவில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. 22 சட்டமன்றத் தொகுதிகளில் காட்டிய ஈடுபாட்டை, மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்கும் காட்டியிருக்கலாம். பா.ஜ.க செல்வாக்கோடு இருக்கக் கூடிய தென்சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளை எவ்வளவோ கேட்டும் அ.தி.மு.க தலைமை மறுத்துவிட்டது. இதன் தொடர்ச்சியாகத் தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டது. இந்தக் கோபத்தைத்தான் கேலிச் சித்திரம் வழியாக வெளிப்படுத்தினார் குருமூர்த்தி. `தன் மீதான வழக்கு உட்பட பல்வேறு விஷயங்களுக்கு நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார் பன்னீர்செல்வம். ஆனால், நமக்குத் தேவையான விஷயங்களை அவர் செய்து தருவதில்லை. இத்தனைக்கும் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவர் இருக்கிறார். தேர்தல் பிரசாரத்திலும் மோடியைப் பெரியளவில் கொண்டு செல்லவில்லை. சொல்லப் போனால், நம்மிடமும் எடப்பாடியிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறையில் பன்னீர் நடந்து கொள்கிறார்’ எனக் கடும் கோபத்தில் இருக்கிறார் ஆடிட்டர். 

இதைப் பற்றி நடந்த விவாதத்திலும், `தேர்தல் தோல்விக்குக் காரணமே, எடப்பாடி, பன்னீர்செல்வத்தின் சாதிரீதியான அணுகுமுறைகள்தான். ஜெயலலிதா இருந்த வரையில் தென் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகள், கணிசமான அளவுக்கு அ.தி.மு.க பக்கம் வந்தன. இனி அந்த வாக்குகளும் பெரிதாக வந்து சேரப் போவதில்லை. தி.மு.க பக்கம் போன தலித் வாக்குகளும் வரப் போவதில்லை. இப்படியொரு வீழ்ச்சிக்குப் பிறகு அ.தி.மு.க-வோடு நெருக்கம் காட்டுவது அவசியமற்றது. இதனால் பா.ஜ.க தான் பலவீனப்பட்டுப் போகும். இனி அ.தி.மு.க-வை நம்பி காலத்தை ஓட்ட முடியாது. தேர்தல் முடிவில் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை நம்பக்கம் கொண்டு வர வேண்டும் என்றால், அவர்களை வீழ்த்துவதுதான் ஒரே வழி’ எனப் பேசியுள்ளனர். அதிலும், `எடப்பாடியைக் கூட நம்பிவிடலாம். பன்னீர்செல்வத்தை நம்பக் கூடாது’ என்ற மனநிலையில் ஆடிட்டர் இருக்கிறார். அதன் வெளிப்பாடாகத்தான் கேலிச் சித்திரம் வெளியானது” என்கின்றனர் விரிவாக. 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து கமலாலயத்தில் கூட்டம் நடத்தியது பா.ஜ.க. கூட்டத்தின் முடிவில் பேசிய தமிழிசை, `உள்ளாட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க பலமான கட்சியாக வலம் வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்வோம். தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்ட தோல்வியால் தொண்டர்கள் துவண்டுவிடக் கூடாது என்பதால் தமிழகம் முழுவதும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்’ என்றவரிடம், `அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடருமா?’ எனக் கேட்டபோது, ‘அதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிப் பேசுவோம். இப்போது எங்கள் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்திக்கொண்டிருக்கிறோம்’ என்றதோடு முடித்துக் கொண்டார். 

தமிழிசையின் சுற்றுப்பயணமும் ஆடிட்டரின் அஸ்திரமும் அ.தி.மு.க-வுக்கு எதிராக வாள் சுழற்றப் போகிறதா என்பது போகப் போக தெரிந்துவிடும். 

%d bloggers like this: