மருந்தாகும் உணவு – சுக்கு பர்பி

ஞ்சி பல மருத்துவப் பயன்களைக் கொடுப்பதைப்போலவே, காய்ந்து சுக்கான பிறகும் பல்வேறு பலன்களைக் கொடுக்கும். சுக்கு, பெரும்பாலும் பொடியாகவும் எண்ணெய் வடிவத்திலும்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜிஞ்ஜிபெராசி (Zingiberaceae) என்ற மருத்துவ வகையைச் சேர்ந்த சுக்கு, ஏலக்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் குடும்பத்தைச் சேர்ந்தது. நம் ஊரில் சுக்கு டீ, சுக்கு பால், சுக்கு காபி என்று பானங்களாகவோ, பேக்கரி சார்ந்த ரெசிபிகளாகவோ தயாரிக்கத்தான் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. சுக்கு பர்பி தயாரிக்கும் முறையை இங்கே பார்க்கலாம்!

பலன்கள்:

பலருக்கும் இஞ்சி மற்றும் சுக்கின் காரச் சுவை பிடிக்காது. ஆனால், அதன் மருத்துவ குணங்களை அவ்வளவு எளிதாகத் தவிர்க்கவும் முடியாது. இஞ்சியின் சுவையை விரும்பாதவர்கள்கூட, இஞ்சிமுரபாவை விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் சுக்கு பர்பி.

* கடினமான உணவு சாப்பிட்ட பின்னர், ஒரு பர்பியை மென்றுவந்தால் செரிமானம் எளிதாகும்.

* வாந்தி உணர்வைத் தடுக்கக்கூடியது சுக்கு. எனவே கர்ப்பிணிகள் தினமும் ஸ்நாக்காக, சுக்கு பர்பி சாப்பிட்டுவருவது ஆரோக்கியமானது.

* வயிற்றுப்புண், அழற்சி போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, சுக்கு நல்ல மருந்து.

* உணவுக்குப் பிறகு, சுக்குப்பொடியுடன் கொஞ்சம் தண்ணீர் குடித்துவந்தால், உடலில் சேர்ந்துள்ள நச்சுகள் அழிந்து செரிமானம் விரைந்து நடக்கும். உணவுக்குழாய் சுத்தமாகும்.

* வாயில், எச்சில் சுரப்பு அதிகரிக்கும்.

* சுக்குடன் தண்ணீர் சேர்த்துக் குடித்துவந்தால், அடிவயிற்றுப் பகுதி தசைகளின் அசைவுகள் சீராகும்.

* கொழுப்பு உட்கிரகிக்கப்படுவதற்காகவே கணையத்தில் சுரக்கும் லேக்டோஸ் (Lactose) என்ற அமில உற்பத்தியை, சுக்கு அதிகப்படுத்தும். இதனால், கெட்ட கொழுப்புச்சத்துகள் எளிதில் செரிமானமாகி, வளர்சிதை மாற்றம் சீராகும்.

 

* சிகிச்சை மேற்கொண்டுவரும் புற்றுநோயாளிகளுக்கு, வாந்தி வருவது போன்ற உணர்வு அதிகமாக இருக்கும். சுக்கு பர்பி உட்கொண்டால், அது சரியாகும்.

* சளி, இருமல் பிரச்னை உள்ளவர்கள், அவ்வப்போது ஒரு சுக்கு பர்பியை மென்றுவருவது நல்லது.

* உடலிலுள்ள புரதத்தை உட்கிரகிக்க சுக்கு உதவும் என்பதால், தினமும் சுக்கு டீ குடிப்பது நல்லது.

* சுக்கு சாப்பிடும்போது உடல் உஷ்ணம் அதிகரிக்கும் என்பதால், வியர்வை வெளியேற்றம் அதிகமாகும்.

* உடம்பில் வலி இருக்கும் பகுதியில், சுக்கை நன்கு இழைத்து, பற்றுப் போட்டால் வலி குணமாகும்.

* பெண்கள், மாதவிடாய் நாள்களின் வலியைத் தவிர்க்க அந்த நேரத்தில் சுக்கு பர்பி சாப்பிடுவது நல்லது.

தேவையானவை:

பவுடராக அரைக்கப்பட்ட சுக்கு : முக்கால் கப்

சர்க்கரை :     இரண்டு கப்

பால் :
ஒரு டீஸ்பூன்

 

குறிப்பு: சில நேரங்களில் சுக்கை அரைத்த பிறகும் அதன் நார்ப்பகுதி அப்படியே இருக்கும். அப்படியான சூழலில், அதை நன்கு சலித்து, உபயோகப்படுத்த வேண்டும்.

செய்முறை:

* முதலில் சர்க்கரைப் பாகு காய்ச்ச வேண்டும். பாகு கொதித்து வரும்போது அதில் ஒரு டீஸ்பூன் பால் சேர்க்கவும். அப்படிச் செய்யும்போது, சர்க்கரையில் சேர்ந்திருக்கும் அழுக்கு திரண்டு வரும். அதை நீக்கிவிட வேண்டும்.

* பாகு பதத்துக்கு வந்தவுடன், அதில் சலித்துவைத்திருக்கும் சுக்குப்பொடியைச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவை, கடினமாகும்வரை நன்கு கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

* கலவை சேர்ந்து வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இளஞ்சூட்டுநிலைக்கு வந்தவுடன், விருப்பப்பட்ட அளவில் துண்டுகள் போட்டுப் பரிமாறலாம்.

* சுக்கின் மஞ்சள் கலர்தான் பர்பியிலிருக்கும். வேறு ஏதேனும் கலர் வேண்டுமென நினைப்பவர்கள் குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளலாம். செயற்கை நிறமிகளைத் தவிர்ப்பது நல்லது.

%d bloggers like this: