பல்வலியா… தலைவலியா? – பாயும் பன்னீர்…. பதறும் எடப்பாடி!

அவர் வந்துவிடவே கூடாது என்று பலரும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரைத்தான் கொண்டுவருவேன் என்று எடப்பாடி பழனிசாமி ஒற்றைக்காலில் நிற்கிறார்’’ என்கிற ‘இன்ட்ரோ’வுடன் உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘புதிய டி.ஜி.பி நியமனம் பற்றித்தானே…’’ என்று கேட்டதும், ‘‘சபாஷ்… சரியான யூகம்’’ என்றபடி செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.
‘‘அடுத்து டி.ஜி.பி-யாக ஜாபர் சேட் வரவேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் ஆசை. ஆனால், ஜாபர் சேட் பற்றிய பழைய விஷயங்கள் பலவற்றையும் நெருக்கமானவர்கள் மூலமாக எடப்பாடிக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.’’
‘‘சிலர் என்றால் போலீஸ் அதிகாரிகளா… அரசியல்வாதிகளா?’’

‘‘இரு தரப்பினரும் உண்டு. முதல்வருக்கு நெருக்கமான சில தொழிலதிபர்களும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். ‘தி.மு.க ஆட்சிக் காலத்தில், அதிகார மையத்தில் இருந்தவர்களுடன் ஜாபர் சேட் மிகவும் நெருக்கமாக இருந்தார். அதேசமயம், அப்படி நெருக்கமாக இருந்தவர்களையே பல விஷயங்களில் பதற வைத்தார். அவர்கள் சார்ந்த பல விஷயங்களை ஜாபர் சேட் கையில் வைத்திருந்தது கண்டு அவர்கள் ஆடிப்போனார்கள்’ என்று ஒரு விஷயத்தை எடப்பாடியின் காதில் போட்டுள்ளனர்.’’
‘‘அடேங்கப்பா…’’
‘‘கடந்த காலங்களில் முக்கியமான ஒரு வழக்கிலிருந்து சிலரைக் காப்பாற்றுவதற்காக டெல்லி வரையில் காய்கள் நகர்த்தப்பட்டன. அப்போது, ‘டெல்லியில் ஒருவருக்குத் தரவேண்டும்’ என்று சொல்லி, பல கோடி ரூபாய் பணம் கைமாறியிருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக அப்போது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் என்ன உண்மை இருக்கிறது என்பதையும் நீங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் எடப்பாடியிடம் எடுத்துச் சொல்லப் பட்டுள்ளதாம்.’’

‘‘இதற்கும் ஜாபர் சேட்டுக்கும் என்ன தொடர்பு?’’
‘‘இதில் அவருக்குத் தொடர்பு இருக்கிறது என்று அவர்கள் கூறவில்லையே… ‘அதையும் விசாரித்துக் கொள்ளுங்கள்’ என்றுதான் கூறியுள்ளனர். ‘இந்த விஷயம், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்து, 2ஜி ஊழல் விவகாரம் வெடித்த சூழலில் தற்கொலை செய்துகொண்ட சாதிக்பாட்சா விவகாரம் வரைக்கும் உள்ள முடிச்சுகளை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும்’ என்று கூறியுள்ளனராம்.’’
‘‘ஓகோ…’’
‘‘சரி, ஜாபர் சேட்டைத்தான் டி.ஜி.பி-யாக நியமிப்பேன் என்று எடப்பாடி தரப்பு பிடிவாதம் பிடிக்கக் காரணம்தான் என்ன?’’
‘‘அந்த அதிகாரிக்கு மட்டும்தான் எடப்பாடியின் எதிரிகளுடைய அந்தரங்கங்கள், அரசியல் தொடர்புகள் அத்தனையும் தெரியும். அதுதொடர்பாக அந்த அதிகாரி, சில விஷயங்களை டிரெய்லர் போல ஓட்டிவிட்டு, ‘என்னை பெரிய இடத்தில் உட்கார வையுங்கள், முழுப் படத்தையும் ரிலீஸ் செய்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறாராம். அதனால்தான் அவரை எப்படியாவது டி.ஜி.பி-யாக்க பிடிவாதம் பிடிக்கிறது எடப்பாடி தரப்பு என்கிறார்கள்.’’
‘‘போலீஸ் புராணம் போதும். கொஞ்சம் அரசியல் பேசுவோம்… அ.தி.மு.க-வில் அடுத்த யுத்தம் ஆரம்பித்துவிட்டதே?’’
‘‘ஆமாம்! மத்திய அமைச்சராகத் தன் மகனுக்கு வந்த வாய்ப்பு பறிபோனதற்கு எடப்பாடியே காரணம் என்று பன்னீர்செல்வம் தரப்பு கோபத்தில் இருக்கிறது. மீண்டும் பொங்கி எழ ஆரம்பித்துவிட்டார் பன்னீர்செல்வம். அவர் முதலில் தர்மயுத்தத்தை ஆரம்பித்த ஜெயலலிதாவின் சமாதியில் ஜூன் 4-ம் தேதி தன் மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்துதான் அ.தி.மு.க-வில் இப்படியொரு பேச்சு கிளம்பியிருக்கிறது.’’
‘‘ஜெயலலிதா சமாதிக்குப் போனது அஞ்சலி செலுத்த மட்டும்தானா?’’
‘‘இல்லை, எதிராளிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. எடப்பாடி தரப்புக்கு தனது பலத்தைக் காட்டும் வேலைதான் இந்த யுக்தி என்கிறார்கள். ஆனால், தர்மயுத்தம் தொடங்கியபோது இவர் பின்னால் சென்றவர்கள் நிலை பற்றியும் பேசுகிறார்கள். ‘தமிழகத்தில் பன்னீர்செல்வத்தின் மகன் மட்டுமா வெற்றி பெற்றார்… ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களும்தான் வெற்றிபெற்றார்கள்… அவர்களையும் அம்மா சமாதிக்கு அழைத்துச் சென்றிருக்கலாமே’ என்று கொக்கி போடுபவர்கள், ‘இது எடப்பாடிக்கு, பன்னீர்செல்வம் வைத்த செக்’ என்கிறார்கள்.’’
‘‘சரி, பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் உதயகுமாரும் டெல்லி சென்ற பின்னணி என்ன?’’
‘‘உதயகுமார், பன்னீர்செல்வம் எல்லோரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வாழ்த்து சொல்லிய உதயகுமார், அடுத்து எடப்பாடிக்கும் ஆதரவு கொடுத்தார். இப்போது பன்னீர் செல்வத்துக்கு பால்குடம் தூக்குகிறார். அதனால் தான், ‘எனது வெற்றியின் பின்னணியில் உதயகுமாரின் உழைப்பும் இருக்கிறது’ என்று ரவீந்திரநாத் உருகியதைக் கவனிக்க வேண்டியிருக் கிறது. இப்போதைய நிலையில் எடப்பாடியைவிட, கொங்கு அமைச்சர் ஒருவர் மீதுதான் பன்னீர்செல்வத்துக்குக் கோபம் என்கிறார்கள்.’’
‘‘காரணம்?’’
‘‘தன் மகனுக்குப் பதவி கிடைக்காமல் போனதற்கு அந்த அமைச்சர்தான் காரணம் என்று பன்னீர்செல்வம் தரப்பு நினைக்கிறதாம். ‘வைத்தியலிங்கத்துக்கு அமைச்சர் பதவி’ என்று கோத்துவிட்டதே அந்த அமைச்சரின் பிளான்தான் என்று ‘ராஜகுரு’ தரப்பிலிருந்து பன்னீருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.’’
‘‘ஆகா..’’
‘‘ஏற்கெனவே, ‘கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள்தான் எடப்பாடியை ஆட்டுவிக்கிறார்கள்’ என்று புலம்பிக் கொண்டிருப்பார் பன்னீர். இப்போது, மகனுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டியதைக் கடைசி நேரத்தில் காலி செய்தது அவர்களில் ஒருவர்தான் என்று தெரியவந்ததும் பொங்கிவிட்டாராம்”
‘‘ஓ… பொங்கவே ஆரம்பித்துவிட்டாரா?”
‘‘அதேதான். இதைத்தொடர்ந்து அமைச்சரவை யிலும் கட்சியிலும் புதுப்புது கோஷ்டிகள் முளைக்க ஆரம்பித்துள்ளன. இதுநாள் வரை ‘மரியாதையே கிடைக்கவில்லை; எந்த வேலைகளும் நடப்பதில்லை’ என்று பொருமி வந்த பன்னீர்செல்வத்தின் தரப்பில் பலம் கூட ஆரம்பித்துள்ளது. எடப்பாடி மற்றும் கொங்கு அமைச்சர்கள் மீது கோபத்திலிருக்கும் பலரும் பன்னீர் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளார் களாம். கே.சி.வீரமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட சிலர் பன்னீர்செல்வம் தரப்பில் அணி திரண்டிருக்கிறார்கள். பழனிசாமி தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சிலர் திரண்டிருக்கிறார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு இரண்டு குழுக்களும் கடுமையாக முட்டிக்கொண்டதாகவும் ஒரு தகவல்…’’
‘‘சொல்லும்… சொல்லும்…”
‘‘இரு குழுக்களும் பேசிக்கொண்டிருந்தபோது எடப்பாடி தரப்பினர், ‘அவர் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றி பெற்றுவிட்டார். அதே கவனத்தை ஆண்டிபட்டி, பெரியகுளத்திலும் காட்டியிருக்கலாம் அல்லவா… அங்கும் வெற்றிபெற்றிருந்தால், ஆட்சியைக் கலைத்துப் பார்க்கும் எண்ணமே தி.மு.க-வுக்கு வந்திருக்காது’ என்று வாய்விட்டார் களாம். இதைக் கேட்டு பன்னீர்செல்வம் தரப்பு ஒரேடியாகப் பாய்ந்துவிட்டதாம்.’’
‘‘பலே… பலே…’’
‘‘பதிலடி கொடுத்த அமைச்சர் ஒருவர், ‘முக்கியமான துறைகளை எல்லாம் நீங்கள் மூன்று பேர் மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் கிடைக்கும் பலன்கள் மொத்தமும் உங்களைத் தாண்டி அடுத்தவர்களுக்கு வருவதே இல்லை. இதையெல்லாம் டெல்லி தர்பாரில் போட்டுவிட எவ்வளவு நேரம் ஆகும். அண்ணன் பன்னீரின் டெல்லி செல்வாக்கு தெரியும்தானே’ என்று ஒரே போடாக போட்டாராம். இதைக் கேட்டு எடப்பாடி தரப்பு பதறிவிட்டதாம்.’’
‘‘எடப்பாடியின் பிளான் என்ன?’’
‘‘மனிதர் அப்செட்டில் இருக்கிறார். அதனால்தான் சட்டமன்றக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பைக்கூட தள்ளிப்போடுகிறார் என்கிறார்கள். ‘தி.மு.க, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொடுத்துள்ளது. அதை இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றவேண்டிய நிலைதான் நீடிக்கிறது. இப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாமல், நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்து, அது தி.மு.க-வுக்குச் சாதகமாக அமைந்துவிடுமோ’ என்று எடப்பாடி பயப்படுகிறார். ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில், முதல்வர் என்கிற முறையில் எடப்பாடி கலந்துகொள்ளவில்லை. ‘பல் வலி’ என்று காரணம் கூறப்பட்டது. ஆனால், அதேநாளில் மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்து, ‘என் தலைமையிலான ஆட்சி நீடிக்கவேண்டும். அதுதான், உங்களுக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்’ என்று உருகி உருகிக் கூறினாராம். இதையெல்லாம் வைத்து, ‘அது பல்வலி அல்ல… ஆட்சியை இவர்களே ஆட்டம் காண வைத்து விடுவார்களோ என்கிற பயத்தில் வந்திருக்கும் தலைவலி’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.’’
‘‘பி.ஜே.பி தரப்பு என்ன நினைக்கிறது?’’
‘‘தமிழக அரசியல் நிலவரத்தில் இனியும் பெரிதாகத் தலையிட வேண்டாம். ஆட்சி கலைந்தாலும் பன்னீர்செல்வம் நமக்கு ஆதரவாக இருப்பார். அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறது.’’
‘‘தி.மு.க-வின் திட்டம் என்ன?’’
‘‘ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். செந்தில்பாலாஜி தீவிரமாக களப்பணியில் இறங்கியுள்ளார். விரைவில் அதற்கான பலனும் கிடைத்துவிடும் என்கிறார்கள்’’ என்ற கழுகார், ‘‘அடுத்த வாரம் இதற்கான ரிசல்ட் தெரியலாம்!’’ என்று சொல்லிவிட்டுச் சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: