அ.தி.மு.க., தலைமை பதவி யாருக்கு?

ஒற்றை தலைமை வேண்டும்’ என, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்த துவங்கியுள்ள நிலையில், கட்சியின் தலைமை பதவிக்கு வர, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்,

கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், புதிய பொதுச்செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர் சிறை சென்றதும், மீண்டும் பொதுக்குழு கூடியது. பொதுச் செயலர் பதவியில் இருந்து, சசிகலா நீக்கப்பட்டார். மேலும், பொதுச்செயலர் பதவியே நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக, இ.பி.எஸ்., ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.ஆனால், இ.பி.எஸ்., முதல்வராக இருப்பதால், ஆட்சியில் மட்டுமின்றி, கட்சியிலும் ஆதிக்கம் செலுத்த துவங்கினார். கட்சி, ஆட்சி இரண்டிலும், பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை தவிர்த்தார். இதன் காரணமாக, இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை, இ.பி.எஸ்.,சும், அவரது ஆதரவு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் தான் முடிவு செய்தனர்.

ஆனால், லோக்சபா தேர்தல் தோல்வி, அதிலும் கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட படுதோல்வி, இம்மூவர் மீதும் கட்சியினருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள், எம்.எல்.ஏ.,க்களாக தேர்வான, சொந்த தொகுதிகளில் கூட, அ.தி.மு.க., முன்னிலை பெறவில்லை. இதனால், மற்ற அமைச்சர்களிடம், தோல்வி குறித்து, இவர்களால் கேள்வி கேட்க முடியவில்லை. சமீபத்தில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது அமைச்சர்களிடம், தோல்வி குறித்து கேட்டதற்கு, ‘வேட்பாளர்களை, நீங்கள் தானே முடிவு செய்தீர்கள். அப்புறம் எப்படி, நாங்கள் பொறுப்பாக முடியும்’ என, எதிர்கேள்வி எழுப்பி உள்ளனர். ஒவ்வொருவரும், தோல்விக்கு காரணமானவர்கள் எனக்கூறி, தங்களுக்கு எதிரானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்; முதல்வரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுவும், கட்சியில் பூசலை அதிகரித்துள்ளது.

இதையடுத்து, ‘இரட்டை தலைமை இருப்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. எனவே, ஒற்றை தலைமை வேண்டும்’ என்ற, கருத்து வலுப்பெறத் துவங்கியது. அதை, மதுரை வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, வெளிப்படையாக அறிவித்தார். அதற்கு, ஆதரவு, எதிர்ப்பு என, விவாதம் தொடர்வதால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுச்செயலர் பொறுப்பை ஏற்கவும், துணை முதல்வர் பதவியை துறக்கவும், பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக தெரிகிறது. அதேபோல, கட்சி, ஆட்சி இரண்டையும், தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, இ.பி.எஸ்., விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், நாளை காலை, 10:00 மணிக்கு, சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், செய்தி தொடர்பாளர்கள், எம்.பி.,க்கள் – எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கிடையில், தலைமை பதவிக்கு வர, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே ஏற்பட்டுள்ள போட்டி, கட்சியில் பிளவை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதால், இரு தரப்பிலும், சில நிர்வாகிகள் சமரச பேச்சு நடத்தியுள்ளனர். –

%d bloggers like this: