Advertisements

உள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே!

ழத்தைக் கொண்டாடியவர்கள் தமிழர்கள். ‘முத்தமிழே… முக்கனியே…’ எனக் கொஞ்சிப் பேசியவர்கள். இன்றைய பீட்சா, பர்கர் யுகத்தில் பழங்களை தினசரி உணவில் எடுத்துக்கொள்வதையே பலர் மறந்துவிட்டார்கள். உணவாகவும் மருந்தாகவும் அமைந்து, நிறைவான ஊட்டச்சத்துகளையும் அள்ளித்தருபவை பழங்கள். இன்று பலரும் ‘வாஷிங்டன் ஆப்பிள்’, ‘கலிஃபோர்னியா திராட்சை’ என மேலைநாட்டுப் பழங்களை விரும்புகிறோம். ஆனால், வெளிநாட்டுப் பழங்களிலிருக்கும் சத்துகளைவிட, உள்நாட்டுப் பழங்களிலிருக்கும் சத்துகள் விஷம் கலக்காமல் நமக்குக் கிடைப்பதாக உணவியல் நிபுணர்களும் மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். 

“ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகமான சத்துகள் கொண்ட கொய்யா அஞ்சு கிலோ 50 ரூபாய். எதைச் சாப்பிடப் போறீங்க?” என்று பாரம்பர்யப் பழங்களின் சிறப்புகளை அடிக்கடி வலியுறுத்திவந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். மேலைநாட்டுப் பழங்களிலிருக்கும் சுவைக்கும் சத்துக்கும் எந்த வகையிலும் நம் நாட்டுப் பழங்கள் சளைத்தவையல்ல என்பதைக் கடைசிவரை சொன்னவர்.
இரண்டுமே பழங்கள்தாம். ஆனால், விளையும் இடங்களால் அவற்றின் தட்பவெப்பநிலையைப் பொறுத்து வேறுபடுகின்றன.   2,000 கி.மீ தாண்டி வரும் ஒரு பழம் அத்தனை தரமானதாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் தவிர்க்க முடியவில்லை. சரியான வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு வந்தாலும், நம்மிடம் வரும்போது சரியான வெப்பநிலையில் வைத்திருக்கிறோமா… ஓர் உணவுப் பொருள் ஆயிரம் மைல்களைக் கடந்து வரும்போது சத்துகளும் சுவையும் மாறாமல் இருக்குமா… இன்று பெரும்பாலான நாட்டுப் பழங்கள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் பற்றி சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம்.
“நமக்குப் பக்கத்திலிருக்கும் கிராமங்களிலிருந்து பழங்கள் வணிகப்படுத்தப்படும்போது, அடுத்த இரண்டு நாள்களில் நம் கைகளுக்கு வந்துவிடும். அந்தப் பழங்களில் ரசாயனப் பூச்சுகள் இருக்காது. நம் பக்கத்தில் கிடைக்கும் பொருள்களையோ, பழங்களையோ சாப்பிடும்போது, அருகிலிருக்கும் விவசாயிகளும் பயன்பெறுவார்கள்; விவசாயமும் காப்பாற்றப்படும். விவசாயம் காப்பாற்றப்பட்டால், அருகிலுள்ள நீர் நிலைகள் மற்றும் இயற்கை வளங்கள் காப்பாற்றப்படும். நம் நாட்டுப் பழங்களை நாமே ஒதுக்கினால், அவை அழிவை நோக்கித்தானே செல்லும். அவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.
உள்ளூர்ப் பழங்களை வாங்கும்போது, மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ முடியும். இது தற்சார்பு முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சுருக்கமாகச் சொன்னால், உடல்நலம் மற்றும் சமூகநலத்துக்கு நல்லது. ஒரு மண்ணில் வளரும் தாவரம், தனக்குத் தேவையான சத்துகளைத் தக்கவைத்துக்கொள்ளும். அப்படி விளைவிக்கப்படுபவற்றை நாம் அப்படியே உணவாக எடுத்துக்கொள்ளும்போது, அது  நமக்கு நோய் எதிர்ப்பாற்றல் சமநிலையை உருவாக்கிவிடும். எந்த மண்ணில், தட்பவெப்பநிலையில் வாழ்கிறோமோ, அந்தப் பகுதியில் விளையும் பழங்களை உண்பதே சரியானது.

வியாபார உத்திகளின் விளைவு சாதாரண மனிதனின் மனதுக்குள் ஐரோப்பியப் பழங்கள் நன்மை கொடுப்பதாகப் பதியவைக்கப்படுகிறது. நம்மூர் கொய்யாப் பழங்களை ஏளனமாக நினைக்கவைக்கின்றன இன்றைய விளம்பரங்கள். பொதுவாக, வெளிநாட்டுப் பழங்கள் ஆயிரம் மைல்களைக் கடந்து வரும்போது கெட்டுப் போகாமல் இருப்பதற்காக செயற்கைப்பூச்சுகள் பூசப்படுகின்றன. உதாரணமாக, முன்னர் கொடைக்கானல் ஆப்பிள், காஷ்மீர் ஆப்பிள் என இந்தியச் சந்தைக்கு வந்துகொண்டிருந்தன. இன்று வாஷிங்டன், சீனா போன்ற பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை நம் கையில் கிடைப்பதற்குப் பல நாள்கள், மாதங்கள் ஆகலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தட்பவெப்பநிலையைச் சேர்ந்தது. சேமிக்கும்போது ஒரு டிகிரி தட்பவெப்பநிலையில் சேமிக்கப்படும் பழம், நம் கைக்கு வரும்போது 30 டிகிரி தட்பவெப்பநிலையில் இருக்கும். உடனடியாக வெப்பநிலை மாறும்போது, பழத்தின் இயல்பான தன்மை மாறி, சத்துகள் குறையும். பக்கத்தில் கிடைக்கும் நாட்டுப் பழங்களை உண்ணும்போது மட்டுமே ஆரோக்கியம் கிடைக்கும். இன்று எளிதாகக் கிடைக்கும் வாழைப்பழங்களைச் சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால், மனிதனின் ஆகச்சிறந்த காலை உணவு வாழைப்பழம்தான். சர்க்கரை, இதயநோய் இருப்பவர்களைத் தவிர அனைவரும் வாழைப்பழத்தை உண்ணலாம்.
இன்றைய இளம் தலைமுறைக்குப் பல உள்நாட்டுப் பழங்களின் சுவைகூடத் தெரியாமல் இருப்பது வருந்த வேண்டிய விஷயம். ப்ளுபெர்ரி, ராஸ்பெர்ரி, வெளிநாட்டு ஆரஞ்சு என இறக்குமதியாகும் பழங்களை விரும்பி வாங்குவோர் பலரும் மிகவும் எளிதாகக் கிடைக்கும் இலந்தைப்பழம், பனம்பழம், வில்வம்பழம் போன்றவற்றின் சுவைகளை அறியாமலிருப்பது வேதனையாக இருக்கிறது. இரண்டு கிவி பழங்களில் கிடைக்க வேண்டிய வைட்டமின் சி, ஒரு பெரிய நெல்லிக்கனியில் கிடைத்துவிடும். ஆஸ்திரேலியா ஆப்பிள் அல்லது வாஷிங்டன் ஆப்பிள் பழத்தில் கிடைக்கும் சத்தைவிட நம் நாட்டில் விளையும் வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம்” என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.
சுவைக்காக என்றாவது ஒரு நாள் வெளிநாட்டுப் பழங்களைச் சாப்பிடுவதில் தவறில்லை. மற்றபடி, நாம் வாழும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற பழங்களை உண்பதுதான் நம் உடலுக்கு நன்மையைத் தரும். மேலைநாட்டுப் பழங்களை அதிகமாக வாங்க நேரும்போது, நமது சந்தையில் பாரம்பர்யப் பழங்களுக்கு இடமில்லாமல் போகும். இரவைப் பகலாக்கி, வெளிச்சத்தில் விற்பனை செய்யும் பளபளப்பான பழங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, பத்து ரூபாய்க்கு தெருவில் விற்கப்படும் நாட்டுப் பழங்களுக்குக் கொடுப்பது சிறந்தது.


அழிவின் விளிம்பில் வாழைப்பழம்!
மீபத்தில், எக்ஸெடர் பல்கலைக்கழகம் (University of Exeter), தனது ஆய்வில் வாழைப்பழங்கள் அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறது. அந்த ஆய்வில், வாழை மரங்களைத் தாக்கக்கூடிய பிளாக் சிகடோகா (Black Sigatoka) என்னும் பூஞ்சைத்தொற்று, காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வருவதாகவும், பயிரிடப்படும் வாழை மரங்களை வளர்வதற்கு முன்னரே இந்தத் தொற்று அழித்துவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால், வாழைத் தோப்புகள், வாழைப்பழங்களின் வரத்து என அனைத்தும் அழியும் தறுவாயில் இருப்பதாகவும் எச்சரித்திருக்கிறது.


நாட்டுப் பழங்களில் சில வகைகள் அழிந்துவிட்டன. இன்னும் சில வகைகள் அழியும் தறுவாயில் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் இருக்கும் பழங்களில் சிலவற்றின்    பெயர்கள்  கேள்விப் படாதவையாக இருக்கும். இவை பெரும்பாலும் முட்புதர் நிறைந்த இடங்களில் வளர்பவை.
இலந்தைப்பழம்
குருவிப்பழம்
தெரணிப்பழம்
வீரன் பழம்
கிலா பழம்
சொடலிப்பழம்
காரைப்பழம்
சூரைப்பழம்
நரிப்பழம்
இரும்புலி
காட்டு சீத்தா
வெள்ளைக்கோட்டான்
காட்டத்தி
பல்லுக்குச்சிப் பழம்
விளாம்பழம்
உன்னிப்பழம்
புலாப்பழம்
கிலுவைப்பழம்
ஈச்சம் பழம்
நுணா பழம்
கோவைப்பழம்
மணித்தக்காளி
முட்டைத்தக்காளி
சுக்கம் பழம்
மலை சுக்கன்
சப்பாத்திக்கள்ளிப் பழம்
கொடுக்காபுளி  

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: