துணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ – அடம் பிடிக்கும் அமைச்சர்கள்!

கூலிங்கிளாஸுடன், “யப்பா கொஞ்ச நஞ்சமா அடிக்கிறது வெயில்” என்றபடியே நுழைந்த கழுகாரிடம், “அ.தி.மு.க முகாமைவிடவா அனல் அதிகம்?” என்றபடியே ஜில்லென்ற மண் பானை மோரை கழுகாருக்குக் கொடுத்தோம்!

ரசித்துக் குடித்தவர், “நக்கல்தான்… சரி கேளும். கடந்த சில நாள்களாகவே, ‘நாடாளுமன்றத் தோல்வி பற்றி விவாதிக்கக் கட்சியின் உயர்மட்டக்குழுவைக் கூட்ட வேண்டும்; பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும்’ என்கிற முணுமுணுப்பு கட்சியில் கேட்கிறது. அடுத்து, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவி, ஆட்சியில் முதல்வர் பதவி இவை இரண்டையும் தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். இதற்கு முட்டுக்கட்டையாக பன்னீர்செல்வம் இருக்கிறார். எனவே,

அவரைக் காலி செய்ய காய் நகர்த்துகிறது எடப்பாடி தரப்பு. ‘பன்னீர்செல்வம் வெறுத்துப் போய் அ.தி.மு.க-வை விட்டே போய்விட வேண்டும்’ என்பது தான் எடப்பாடி தரப்பினரின் திட்டம் என்கிறார்கள். கட்சி, ஆட்சி… என்று இரண்டிலும் தான் ஒருவரே முடிசூடவேண்டும் என்கிற வகையில் முதல்வரின் செவ்வந்தி இல்லத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்றுள்ளதாம்!”
“என்ன பேசினார்களாம்?”
“ராஜன் செல்லப்பா குரலை உயர்த்தினார் அல்லவா? அதுவே எடப்பாடி தரப்பின் திட்டம்தானாம். கே.சி.பழனிசாமி மட்டுமே கூறிவந்த கருத்தை இப்போது ராஜன் செல்லப்பாவும் சொல்லியுள்ளார். இது ஒருவகையில் பன்னீர்செல்வத்துக்கு வைக்கப்படும் செக் என்கிறார்கள். அவரது துணை முதல்வர் பதவியைப் பங்கு கேட்டால்தான், பதறுவார் என்று யோசித்தது எடப்பாடி கோஷ்டி. ராஜன் செல்லப்பா உள்ளிட்ட ஆட்கள் அதை செவ்வனே செயல் படுத்துகிறார்கள். பக்கத்து மாநிலமான ஆந்திரத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சாதிவாரியாக ஐந்து பேருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கினார் அல்லவா… அதை வைத்து இப்படி ஒரு ஐடியாவை அரங் கேற்றத் தொடங்கியுள்ளது எடப்பாடி தரப்பு!”
“ஓஹோ… காரசாரமான ஆந்திரா மீல்ஸுக்கு அமைச்சர்களை அடித்துக்கொள்ள வைக்கிறார் என்று சொல்லும். சரி, சி.வி.சண்முகத்தை ஏன் தூண்டிவிட்டார்களாம்?”

“சி.வி.சண்முகம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். பொசுக்கென்று கோபப்படக் கூடியவர். பட்டென்று எதையும் பேசிவிடுவார். அதனாலேயே அவரைத் தூண்டிவிட்டிருக்க லாம் என்கிறார்கள். தவிர, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 13 பேர் எம்.எல்.ஏ-க்களாக இருக்கிறார்கள். இவர்களில் சம்பத் மற்றும் சி.வி.சண்முகம் தவிர வேறு யாருக்கும் சொல்லிக்கொள்ளும்படி எந்தப் பதவியும் இல்லை. இதைச் சுட்டிக்காட்டும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள், ‘அண்ணன் சி.வி.சண்முகத்தைத் துணை முதல்வர் ஆக்குங்கள்’ என்று போர்க்குரல் எழுப்பி வருகிறார்களாம். வடமாவட்ட எம்.எல்.ஏ-க்களில் பலரும்கூட சண்முகத்துக்கு ஆதரவாக நிற்பதாகக் கூறப்படுகிறது.’’
“அடேங்கப்பா… பெரிய விவகாரம்தான்.”
“நாடார் சமூகத்தைச் சேர்ந்த வர்களும் துணை முதல்வர் பதவி கேட்கத் தொடங்கிவிட்டார்கள். நாடார் மகாஜன சபையின் கார்த்திகேயன் நாடார் என்பவர், ‘தமிழக அமைச்சரவையில் 32 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் ஒன்பது பேர் முக்குலத்தோர், ஆறு பேர் கவுண்டர்கள், ஐந்து பேர் வன்னியர்கள். நாடார் சமூகத்தைச் சேர்ந்த நான்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில், மாஃபா பாண்டியராஜனுக்கு மட்டும் உப்புசப்பில்லாத துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் வன்னியர்களுக்கு அடுத்த இடத்திலுள்ள நாடார்களுக்கு உரிய பிரதி நிதித்துவத்தை அமைச்சரவையில் வழங்க வேண்டும். ஆந்திர பாணியில் எங்களுக்கும் துணை முதல்வர் பதவி அளிக்க வேண்டும்’ என்று பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதமாகவும் அளிக்கப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போஸ்டர் களும் ஒட்டப்பட்டுள்ளன.”
“இதையெல்லாம் எடப்பாடி எப்படி எதிர்கொள்வாராம்?”
“அமைச்சரவை விரிவாக்கத்தின்போது நாடார் சமூகத்துக்கு மற்றொரு அமைச்சர் பதவியை அளித்து அவர்களைச் சமாதானம் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், பன்னீர் செல்வத்துக்கு செக் வைக்க நினைத்து, எடப்பாடி தரப்பு கிளப்பிய விவகாரம் இப்போது அவருக்கே தலைவலியாக மாறியிருக்கிறது. துணை முதல்வர் பதவி கேட்பவர்கள், அதைத் தரவில்லை என்றால் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் கோஷ்டி சேர்த்து ஆட்சிக்கே ஆபத்து ஏற்படுத்துவோம் என்றும் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கிறார்களாம்.”
“அடேங்கப்பா!”
“வன்னியர், நாடார் சமூகங்களைத் தொடர்ந்து, பிற சமூகத்தினரும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டனர். பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ‘எம்.ஜி.ஆர் காலம் தொட்டு அ.தி.மு.க-வுக்குத்தான் வாக்களித்து வருகிறோம். 25 தொகுதிகளில் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக உள்ளோம். ஆனால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த வளர்மதிக்கு மட்டுமே அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் துணை முதல்வர் பதவி அளித்தால்தான், தொடர்ந்து அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிக்க முடியும்’ என்று பிரச்னைசெய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்தச் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சிலர் எடப்பாடி தரப்பிடம் தங்கள் விருப்பத்தைக் கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த எடப்பாடி தரப்பு எந்தப் பதிலும் சொல்லவில்லையாம்!”

“வேறு தரப்பினர் எதுவும் கேட்கவில்லையா?”
“இன்னும் முடியவில்லை, கேளும்… 2016 சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 44 பட்டியல் சமூக தனித் தொகுதிகளில் முப்பது தொகுதிகளில் அ.தி.மு.க வென்றது. பின்னர் நடைபெற்ற தகுதிநீக்கம் மற்றும் இடைத்தேர்தலைத் தொடர்ந்து, தற்போது 25 பட்டியல் சமூக எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-வில் உள்ளனர். ‘வன்னியர், நாடார் சமூகத்தினருக்குத் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டால், எங்கள் தரப்புக்கும் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட வேண்டும்’ என்று அவர்களும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.”
“சரி… ‘ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்று ஏன் பேசினாராம் ராஜன் செல்லப்பா?”
“அது தனிக்கதை. ராஜன் செல்லப்பாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் ஆகாது. மதுரை மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பாவின் ஆளுகை பிரதேசத்துக்குள் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியிருந்தன. அவர் தன் மகனுக்கு எம்.பி வேட்பாளராக சீட் பெற்றபோது, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராஜன் செல்லப்பாவிடம் இருந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்து, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆர்.பி.உதயகுமாரை மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் அமரவைத்தனர். அப்போது சீட் கிடைத்த திருப்தியில் அமைதியாக இருந்துவிட்டார் ராஜன் செல்லப்பா. ஆனால், மகனின் தோல்விக்குப் பிறகு இப்போது கோபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். அதற்கு இப்போது எடப்பாடி தரப்பு போட்ட தூபமும் சேர்ந்துகொள்ள… ‘என் கட்டுப்பாட்டிலிருந்து பிரித்த சட்டமன்றத் தொகுதிகளை மீண்டும் தரவேண்டும். அமைச்சர் பதவி வேண்டும்’ என்று அவரது கோரிக்கை நீள்கிறதாம்.’’
“பன்னீர்செல்வம் சும்மா இருப்பாரா?”
“நடப்பவற்றை எல்லாம் அமைதியாக உள்வாங்கி வருகிறாராம் அவர். அவரைச் சந்தித்த தென்மாவட்ட அமைச்சர் ஒருவர், ‘கொங்கு மண்டலத்தில் தன்னுடைய ஆதரவு அமைச்சர்களுக்கு எதிராக யாரையேனும் கொம்பு சீவிவிடுகிறாரா எடப்பாடி? ஆனால் வன்னியர், முக்குலத்தோர் சமூகத்து அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இருக்கும் மாவட்டங்களில் மட்டும் எதிர் கோஷ்டியினரைத் தேடிப்பிடித்து, அவர்களிடம் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்கிறார் எடப்பாடி. இப்படிக் கோஷ்டி பூசலை ஏற்படுத்தி, மற்றவர்களைச் சண்டை மூட்டிவிடுவதன் மூலம் தன் முதல்வர் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதே எடப்பாடி தரப்பின் நோக்கமாக இருக்கிறது. இதையெல்லாம் நீங்களும் கேட்பதில்லை… நாங்கள் எங்கே போவது?’ என்று ஆவேசப் பட்டிருக்கிறார். இதைக் கேட்டு தனது வழக்கமான பாணியில், ‘பொறுமையாக இருங்கள்’ என்று மட்டும் சொன்னாராம் பன்னீர்செல்வம்.’’
“பி.ஜே.பி என்ன நினைக்கிறதாம்?”
“அவர்கள் பிரதான எதிர்க்கட்சியாகும் திட்டத்தில் இருக்கிறார்கள். வரும் ஜூன் 13, 14-ம் தேதிகளில் மாநிலத் தலைவர்களுடன் அமித் ஷா கலந்துரையாடுகிறார். தமிழகத்தில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுடன் அப்போது அவர் விவாதிக்கலாம். உள்ளாட்சித் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் திட்டத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். ‘அரசுடன் கூட்டணி; ஆனால், கட்சியுடன் கூட்டணி இல்லை’ என்று புதுக்கணக்கு போடுகிறது பி.ஜே.பி. மேலும் அ.தி.மு.க, அ.ம.மு.க ஆகிய கட்சியிலிருக்கும் அதிருப்தி சமூகத் தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் திட்டமும் இருக்கிறதாம். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான செ.ம.வேலுச் சாமி, கு.ப.கிருஷ்ணன், அ.ம.மு.க-வில் இருந்து சமீபத்தில் அ.தி.மு.க-வில் இணைந்த கிணத்துக்கடவு தாமோதரன், அ.ம.மு.க பிரமுகர் தொட்டியம் ராஜசேகர், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 28,000 வாக்குகள் பெற்ற செல்வராஜ் ஆகியோருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாம். ‘பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகம் ஆகியவற்றில் உறுப்பினர், துணை இயக்குநர் பதவி தரப்படும்’ என்றெல்லாம் கவர்ச்சி வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றனவாம். இதே பாணியில் தி.மு.க-வில் உள்ள நிர்வாகிகளுக்கும் அழைப்பு கொடுக்கப் பட்டுள்ளது என்கிறார்கள்.”
“ம்!”
“தி.மு.க தரப்பில் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க அரசிடம் ஏக சலுகைகளை அனுபவித்து வருகிறார்களாம். அதேபோல், ‘அ.தி.மு.க-விலிருந்து எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுவருகிறோம்’ என்று ஸ்டாலினிடம் சொல்லிய தரப்பினர், ஆளுங்கட்சியுடன் சிலபல பேரங்களை நடத்திவருகிறார்களாம். இதைத் தொடர்ந்து தி.மு.க-விலிருந்தே ‘பாவம்… ஸ்டாலினை ஏமாற்றுகிறார்கள்’ என்று எச்சரிக்கை குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.”
“கவர்னர் திடீரென டெல்லி பறந்துள்ளாரே?”
“பிரதமருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கிறார்கள். இரண்டாவது முறையாக மோடி பதவி ஏற்ற பிறகு, ஒவ்வொரு மாநில கவர்னரையும் சந்தித்து வருகிறார். தமிழகம், ஆந்திரம், மேற்கு வங்க கவர்னர் களுக்கு இப்போதுதான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்கிறார் தமிழக கவர்னர். ‘பன்வாரிலால் மாற்றப்படுவார்’ என்கிற பேச்சு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகவே நீடித்துவருகிறது. அது அநேகமாக இப்போது  நடக்க வாய்ப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள்” என்ற கழுகார் சிறகுகளை விரித்துப் பறந்தார்!

%d bloggers like this: