முதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது?

சென்னை மெட்ரோ ரயிலில் ஒருவர் தன் நண்பரிடம் சொன்னது…
“யாருக்குமே தெரியாமல் வீக் எண்டுக்குக் குடும்பத்துடன் போய் மகிழ்ச்சியாக இருக்க வீடு வாங்கினேன். இந்தத் தகவல் இன்கம் டாக்ஸ்காரங்களுக்கு எப்படித் தெரிஞ்சதுனு தெரியல. எனக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்காங்க!’’ 

பொதுவாக, குறிப்பிட்ட அளவுக்குமேல் முதலீடுகள், செலவுகளைச் செய்யும்போது, அதனை வருமான வரிக் கணக்குத் தாக்கலில் குறிப்பிட வேண்டியது அவசியம். அப்படிக்  குறிப்பிடவில்லை எனில், வருமான வரித்துறையிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வரும். அந்தச் சமயத்தில் நாம் பொருள் எதையும் வாங்கவில்லை என்று நிரூபிக்க வேண்டும் அல்லது வாங்கிய பொருளின் மதிப்புக்கேற்ப வரிச் செலுத்தியாக வேண்டும்.
ஒருவர் செய்யும் பெரிய முதலீடுகள் மற்றும் செலவு களை வருமான வரித்துறை எப்படிக் கண்டுபிடிக்கிறது என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. வருமான வரித் துறையானது, சார்பதிவாளர், கூட்டுறவு வங்கிகள், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், தபால்துறை, கடன் பத்திரங்கள் மற்றும் பங்குப் பத்திரங்களை வெளியிடுபவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் போன்றவை மூலம் தனிநபர்களின் செலவு மற்றும் முதலீட்டு விவரங்களைப் பெறுகிறது. 

இந்த அமைப்புகள், வருமான வரித்துறைக்குக் குறிப்பிட்ட நிதியாண்டில் தனிநபர்கள் மேற்கொண்ட பெரிய நிதி பரிவர்த்தனைகளை அறிக்கையாக ஒவ்வோர் ஆண்டும் மே 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும். உதாரணத்திற்கு, 2018 – 19–ம் நிதியாண்டுக்கான நிதி பரிவர்த்தனை அறிக்கையை 2019 மே 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்திருக்கும். 

கிரெடிட் கார்டுமூலமான பரிவர்த்தனையானது ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்குமேல் நடந்திருந்தால், அந்த விவரத்தை கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனம் வரித்துறைக்குத் தெரிவிக்கும். ரூ.30 லட்சத்துக்குமேல் வீடு வாங்கினால், இதனை சார்பதிவாளர் வரித்துறைக்குத் தெரிவிப்பார். எதற்காக, எவ்வளவு பரிவர்த்தனை செய்தால்  வருமான வரித்துறைக்கு விவரங்கள் அனுப்பப் படும் என்பதை மேலே உள்ள அட்டவணையில் பார்க்கவும். வருமான வரித்துறையிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதைப் புரிந்து செயல்பட்டால் எந்த நோட்டீஸும் இனி வராது!

%d bloggers like this: