ரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, ரெகுலர் பிளான் மற்றும் டைரக்ட் பிளான் என இரண்டு வகைகள் ஒவ்வொரு திட்டத்திலும் உள்ளன. வங்கிகள், ஆன்லைன் நிறுவனங்கள்,  ஷேர் புரோக்கிங் நிறுவனங்கள், அட்வைஸர்கள் போன்ற பலராலும் ரெகுலர் பிளான்கள் விநியோகிக்கப்படுகின்றன. 

முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்தால், அது டைரக்ட் பிளான். டைரக்ட் பிளான்களில் முதலீடு செய்பவர்களுக்கு விநியோகிப்பாளர் கமிஷன் இல்லாததால் லாபம் சற்று அதிகமாகக் கிடைக்கும்.

ஒரே திட்டமாக இருந்தாலும், டிவிடெண்டை வழங்கும்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான்களுக்கு வெவ்வேறாக வழங்குகின்றன. உதாரணமாக, ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் மார்ச் 2019-ல் டிவிடெண்ட் வழங்கும்போது, டைரக்ட் மற்றும் ரெகுலர் ஆகிய இரண்டு பிளான்களுக்கும் ஒரே மாதிரியாக (ரூ.5.25) ஆண்டுக்கு ஒருமுறை வழங்கும் டிவிடெண்டை வழங்கியது. மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தனது ஹைபிரீட் ஈக்விட்டி ஃபண்டுக்கு பிப்ரவரி 2019-ல் டிவிடெண்டை வழங்கியது. அப்போது டைரக்ட் பிளானுக்கு 0.88 ரூபாயும், ரெகுலர் பிளானுக்குச் சற்றுக் குறைவாக 0.71 ரூபாயும் வழங்கியது.
அதேசமயத்தில், கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தனது ஹைபிரீட் ஈக்விட்டி ஃபண்டுக்கு ஏப்ரல் 2019-ல் டிவிடெண்ட் வழங்கியபோது, ரெகுலர் பிளானுக்குக் கூடுதலாகவும் (ரூ.0.61), டைரக்ட் பிளானுக்குக் குறைவாகவும் (ரூ.0.53) வழங்கியது. ஒரே திட்டத்தில் வெவ்வேறு பிளான்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் டிவிடெண்டை ஏன் மாறுபட்டு வழங்கு கின்றன..?

இதற்கு முக்கியக் காரணம், செபியின் விதிமுறைகள்தான். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நினைத்தபடியெல்லாம் டிவிடெண்டை வழங்க முடியாது.  ஃபண்ட் நிறுவனம் வைத்திருக்கும் பங்குகளில் ஒரு பகுதியை விற்று, அவ்வாறு கிடைக்கும் லாபத்தின் மூலம்தான் டிவிடெண்ட் வழங்கவேண்டும். அப்படி  விற்கும்போது முழு லாபத்தையும் டிவிடெண்டாக வழங்க முடியாது.
உதாரணமாக, ரூ.10-க்கு வாங்கிய பங்கினை ரூ.15-க்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் விற்கிறது என்று வைத்துக் கொண்டால், அதில் 2 ரூபாயை புக் செய்த லாபம் என அந்தத் திட்டம் கணக்கில் எடுத்துக்கொண்டால், அந்தப் பணம் டி.இ.ஆர்-க்குச் (Dividend Equalization Reserve) செல்லும். மீதமுள்ள ரூ.3 யு.பி.ஆர்-க்குச் (Unit Premium Reserve) செல்லும். டி.இ.ஆர்-க்குச் செல்லும் 2 ரூபாயை  முழுவதுமாக டிவிடெண்டாகத் தந்துவிடுவதில்லை. அதில் ஒரு பகுதியை எதிர்காலத்தில் (சந்தையானது கரடியின் பிடியில் இருக்கும்போது) டிவிடெண்ட் வழங்குவதற்காக வைத்துக்கொள்கின்றன. அதில் பிரச்னை இல்லை. ஆனால், இந்த யூனிட் பிரீமியம் ரிசர்வ்தான் டிவிடெண்டைச் சீராக வழங்கமுடியாததற்கு ஒரு காரணமாக பல ஃபண்ட் நிறுவனங்கள் கூறுகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்தப் பிரச்னையை செபிக்கு ஏற்கெனவே எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறுகின்றன. ஆகவே, இந்த அக்கவுன்ட்டிங் என்ட்ரியில் மாறுதல்களை செபி ஏற்றுக்கொள்ளும் வரை, ரெகுலர் பிளான்களில் அதிக டிவிடெண்ட், டைரக்ட் பிளான்களில் குறைவான டிவிடெண்ட் என்கிற வேறுபாடு இருக்கவே செய்யும்.
இந்தப் பிரச்னையிலிருந்து முதலீட்டாளர்கள் கவலையின்றி வெளிவர மிகவும் சுலபமான வழி, எஸ்.டபிள்யூ.பி (SWP– Systematic Withdrawal Plan) முறைதான். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலிருந்து பணவரத்தை குறிப்பிட்ட இடைவெளிகளில் குறிப்பிட்ட தொகையைப் பெற விரும்புபவர்கள், டிவிடெண்ட் ஆப்ஷனுக்குச் செல்ல வேண்டாம். அதற்குப் பதிலாக எஸ்.டபிள்யூ.பி மூலமாகக் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதத்துக்கும்/ காலாண்டுக்கும்/ அரை ஆண்டுக்கும்/ ஆண்டுக்கும் பெற்றுக்கொள்வது நல்லது. மேலும், இது உங்களுக்கு வருமான வரியையும் மிச்சப்படுத்தும். மியூச்சுவல் ஃபண்டுகளில் டிவிடெண்ட் எப்போது கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லையென்பதால்,    எஸ்.டபிள்யூ.பி முறை சிறந்த ஆப்ஷனாக அமையும்.

%d bloggers like this: