500 கோடி… 5 தொகுதி… போச்சு!” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா

இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சசிகலா –  தினகரன் இடையே மனக்கசப்பு அதிகரித்துவிட்டதாகப் புதிய தகவல் இப்போது அ.ம.மு.க வட்டாரத்தில் கசிய ஆரம்பித்துள்ளது. தினகரன், தனக்குக் கட்டுப்படவில்லை என்கிற கருத்து சசிகலாவிடம் மேலோங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

அ.தி.மு.க-வுக்காகப் போராட்டம் நடத்தி, கடைசியில் அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்கி, அதுவும் கடந்த தேர்தலில் சோபிக்காமல் போனதால், இனி என்ன செய்யப்போகிறார் தினகரன் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. ஆனால், ” ‘தினகரனை நம்பி இருக்க வேண்டாம்… நாமே இனி களத்தில் இறங்க வேண்டும்’ என்று முடிவுசெய்துவிட்டார் சிறையில் இருக்கும் சசிகலா” என்ற புதிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

சசிகலா சிறைக்குச் சென்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர், சிறையில் இருந்தபோதே ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்கி வெற்றிபெற்றார் தினகரன். அவரின் அதிரடி அரசியலால், அவர் பின்னால் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களும் பல நிர்வாகிகளும் சென்றனர். முதலில் அ.தி.மு.க-வின் சின்னம் மற்றும் கட்சி தங்களுக்கு வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய தினகரன் தரப்பு, இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தியது. இந்நிலையில் தினகரன் பின்னால் அணிவகுத்துச் சென்ற 18 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிக்கப்பட்ட பிறகு, மேலும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடிக்கு அதிர்ச்சிக் கொடுத்தனர். தினகரனின் இந்த அரசியல் அதிரடிகளைக் கண்டு அ.தி.மு.க தரப்பு ஆட்டம் கண்டுபோனது. தங்களுக்கு எதிர்காலத்தில் தினகரன் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகிவிடுவார் என்று எண்ணினார்கள். ஒருபுறம், எடப்பாடி – பன்னீர் அணியை எதிர்த்த மாதிரியே, சசிகலா குடும்பத்தில் உள்ள உறவுகளையும் அரசியல் செய்யவிடாமல் எதிர்க்க ஆரம்பித்தார் தினகரன். இதற்குச் சிறையில் இருந்த சசிகலாவை வைத்தே காய் நகர்த்தினார். தினகரன் செய்வது சரிதான் என்று சசிகலாவும் தன் உறவுகளிடம் சொன்னது தினகரனுக்குத் தெம்பை ஊட்டியது. 

இந்நிலையில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தல், தினகரன் அணிக்குச் சவாலாகவே இருந்தது. அவரின் செல்வாக்குக்கு இந்தத் தேர்தல் முடிவாக அமையும் என்று கணக்குப் போட்டார் சசிகலா. தேர்தலுக்கு முன்பு அ.ம.மு.க-வைக் கட்சியாகப் பதிவுசெய்த தினகரன், அதில் சசிகலாவை உறுப்பினராகச் சேர்க்கவில்லை. அதற்குக் காரணம், ‘அ.ம.மு.க-வில் சசிகலா உறுப்பினராகச் சேர்ந்தால் அ.தி.மு.க பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டது குறித்த வழக்கில் சிக்கல் வரும் என்று தினகரன் இந்த முடிவை சசிகலா ஒப்புதலோடு எடுத்தார்’ என்று விளக்கம் சொன்னார்கள்.

சிறையில் இருக்கும் சசிகலா என்ன சொன்னார் என்பது, சிறையில் அவரைச் சந்தித்த நபரான தினகரன் சொல்லும் வார்த்தைகள் மட்டுமே ஆதாரம். இந்நிலையில் தேர்தல் முடிவுகள், தினகரன் கட்சிக்குப் பெரும் அடியைக் கொடுத்துள்ளது. தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளைத் தவிர, அனைத்து இடங்களிலும் அந்தக் கட்சி டெபாசிட் இழந்துவிட்டது. சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட அந்தக் கட்சி வெற்றிபெறவில்லை. தேர்தல் முடிந்த பிறகு, தினகரன் தரப்பு இப்போது சத்தமில்லாமல் அமைதியாக இருந்துவருகிறது. இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சசிகலா –  தினகரன் இடையே மனக்கசப்பு அதிகரித்துவிட்டதாகப் புதிய தகவல் இப்போது அ.ம.மு.க வட்டாரத்தில் கசிய ஆரம்பித்துள்ளது. தினகரன், தனக்குக் கட்டுப்படவில்லை என்கிற கருத்து சசிகலாவிடம் மேலோங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க-வினர், “தினகரனை எடப்பாடி அரசில் இருப்பவர்கள் எதிர்த்துக்கொண்டிருந்தாலும், எடப்பாடி உட்பட பல மூத்த அமைச்சர்களே சசிகலாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வந்தனர். தினகரனின் அணுகுமுறையே இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு அ.ம.மு.க-வைக் கட்சியாகப் பதிவுசெய்வதை சசிகலா விரும்பவில்லை. ஆனால், சின்னம் தொடர்பாக எழுந்த பிரச்னையால், தன்னை அந்தக் கட்சியில் இணைத்துக்கொள்ளாமல் தினகரனை மட்டும் பொதுச் செயலாளராக இருக்க ஒப்புக்கொண்டார்.

 

இன்றைக்கு அ.தி.மு.க, தனக்குச் சாதகமாக இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அது தன் கட்டுப்பாட்டில் வரும் என்று சசிகலா நினைத்தார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டிக்காத்த ஓர் இயக்கத்தைவிட்டுவிட்டு எந்தச் சூழ்நிலையிலும் வெளியேறக் கூடாது என்கிற உறுதி சசிகலாவிடம் இருந்தது. இதனால் அ.தி.மு.க-வை எதிர்த்து தினகரன் போட்டியிடுவதைக்கூட வழியில்லாமல் சசிகலா ஏற்றுக்கொண்டார். சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம். அந்தத் தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் நிற்கும் வேட்பாளர் நமக்கு விசுவாசமானவர் என்று சசிகலா சொல்லியும் தினகரன் கேட்கவில்லை. தேர்தலுக்கு முன்பு கடும் பணநெருக்கடியில் தினகரன் சிக்கிவந்தார். இதனால், தகுதி இழந்த 18 எம்.எல்.ஏ-க்களைச் சிறைக்கு அழைத்துச் சென்று நிதி நெருக்கடியைப் பற்றி சசிகலாவிடம் சொல்ல வைத்தார்.

தேர்தலில் நிதி இல்லாமல் களத்தில் இறங்க முடியாது என்று உணர்ந்த சசிகலா, தனது வட்டாரங்கள் மூலம் 500 கோடி ரூபாய் பணத்தை தினகரன் தரப்புக்கு அளித்துள்ளார். அதில், கணிசமான தொகை தென் மாவட்டங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு அளிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பு… சிறையில் சசிகலாவைச் சந்தித்த தினகரன், ‘ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் கண்டிப்பாக நாம் வென்றுவிடுவோம்’ என்று உறுதிகொடுத்துள்ளார். ஆனால், தேர்தல் முடிவுகள் வந்தவுடன் அதைப் பார்த்த சசிகலா அதிர்ச்சியடைந்துள்ளார். பணமும் போய், இருந்த மரியாதையும் போய்விட்டதோ என்று எண்ண ஆரம்பித்தார்.

‘பணம் கொடுத்தால் வெற்றிபெறலாம் என்று சொன்னே, அதுவும் நடக்கல; இருந்த பேரையும் காப்பாத்திக்க முடியலை. ஐந்து தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று சொன்னது என்ன ஆச்சு’ என்று கண்கள் சிவக்கக் கொந்தளித்துள்ளார் சசிகலா. அவர், இப்படிக் கோபப்படுவார் என்று தினகரனே எதிர்பார்க்கவில்லையாம். மேலும், தேர்தல் முடிவால் தினகரன் பக்கம் இருந்த நிர்வாகிகள் சிலர் கழன்றுகொண்டு அ.தி.மு.க-வுக்குத் தாவ ஆரம்பித்தனர். அதே நேரம், கெட்டதிலும் ஒரு நல்லதாக சசிகலாவுக்கு நடந்தது. அது அ.தி.மு.க அடைந்த படுதோல்வி. அந்தக் கட்சியும் தோல்வியைச் சந்தித்ததால் இனி பிரிந்து செயல்படுவது ஆபத்து என்று எடப்பாடி முடிவு செய்து சசிகலாவுக்குத் தூதுவிட்டுள்ளார். சசிகலாவும் தினகரனை நம்பி இருப்பதைவிட எடப்பாடியுடன் இணக்கமாகச் சென்று தனது மேற்பார்வையில் வளர்ந்த அ.தி.மு.க கட்சிக்குத் தலைமையாகலாம் என்று கணக்குப் போட்டுவிட்டார்.

 

இது ஒருபுறமிருக்க… மற்றொரு புறம், தினகரன் சமீப நாள்களாகத் தன்னைச் சுற்றியுள்ள நான்கு ஐந்து பேரைத் தவிர, மற்ற யாரையும் சந்திப்பதில்லை. குறிப்பாக, தோல்வியடைந்த வேட்பாளர்கள் அவரைச் சந்திக்க வந்தபோதுகூட மறுத்துவிட்டார். அவரின் நடைமுறை மாறிவிட்டது என்று சசிகலாவின் காதுக்குத் தகவல் சென்றுள்ளது. இதனால், உச்சக்கட்ட கோபத்தில் இப்போது சசிகலா இருக்கிறார். இதுநாள் வரை தினகரனால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராகச் சசிகலாவிடம் நெருங்கிவர ஆரம்பித்துள்ளார்கள்.
வரும் அக்டோபர் மாத்துக்குள் எப்படியும் சிறையிலிருந்து விடுதலைப் பெற்றுவிட வேண்டும் என அதற்கான வேலையையும் தினகரன் இல்லாத தன் குடும்ப உறவுகள் மூலம் சசிகலா செய்ய ஆரம்பித்துள்ளார். அதற்கு எடப்பாடி தரப்பும் உதவிசெய்ய முன்வந்துள்ளது.

மேலும், தன்னிடம் வாங்கிய பணத்தை என்ன செய்தார் தினகரன், யாரிடம் எவ்வளவு கொடுத்தார் என்ற விவரங்களையும் விசாரிக்கச் சொல்லியுள்ளார். இன்னும் ஒரு மாதத்தில் சசிகலா தரப்பிலிருந்து சில அதிரடி நடவடிக்கைகள் வெளியாகும். அது, தினகரனுக்கு மேலும் சிக்கலாகும்” என்கிறார்கள்.

தினகரன் தரப்பிலோ, “தினகரன் ஏற்கெனவே அப்செட்டில் இருக்கிறார். அவர், ஒருபோதும் சசிகலாவுக்கு எதிராக எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார். எடப்பாடி தரப்பிலிருந்து இருவருக்கும் விரிசலை ஏற்படுத்த பார்ப்பது உண்மை. இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்“ என்கிறார்கள்.

உண்மை ஒருநாள் வெளியே வரும்.

%d bloggers like this: