அதிமுக பஞ்சாயத்து சுமூகம்? இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார். தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு தனியாக பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி கோரிக்கை வைத்தார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியாக சந்தித்து பேசினார்.

இப்போது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்ல உள்ளார். இதற்காக இன்று இன்று இரவு கோவையில் இருந்து சென்னை திரும்பிய உடன், இன்று இரவே டெல்லி புறப்பட்டு செல்கிறார் ஓ பன்னீர்செல்வம். நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் மற்றும் மாநிலத்துக்கு இடம்பெற வேண்டிய திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கான அழைப்பை ஏற்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் நாளை பங்கேற்று தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து பேச உள்ளார்.

அதன்பின்னர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனியாக சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் மத்திய திட்டங்கள் குறித்து பேசப்படும் என தெரிகிறது.அதிமுகவில் ஒற்றை தலைமை கேட்டு போர்க்கொடி உயர்த்திய பின்னர், எடப்பாடியும் பன்னீர்செல்வமும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை இருவருமே தவிர்த்து வருகிறார்கள். இந்த சூழலில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அதிமுக பஞ்சாயத்துக்கள் சுமூகமாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

%d bloggers like this: