உடலை வலுவாக்க ஓர் உபகரணம்!

1

நன்றி குங்குமம் டாக்டர்

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையிலான உடற்பயிற்சிகளை செய்வதற்காக பல்வேறு உடற்பயிற்சி சாதனங்கள் இருக்கின்றன. அவற்றில் தற்போது உடற்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுவரும் ஒன்றாக Pull Reducer இருக்கிறது. உடற்பயிற்சி நிபுணர் தேவி மீனாவிடம் Pull Reducer மூலம் எப்படி உடற்பயிற்சிகளை சரியான முறையில் செய்வது என்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்றும் கேட்டோம்.

‘‘Pull Reducer என்கிற இந்த உபகரணம் இரண்டு கால்களில் மாட்டிக்கொண்டு, கைகளால் பிடித்து இழுப்பது போன்று செயல்படுகிறது. அப்படி பிடித்து இழுப்பதற்கு, இவற்றை இணைக்கும் விதமாக இரண்டு ரப்பர் பேண்டுகள் உள்ளன. இந்த ரப்பர் பேண்டுகள் சற்று வலுவான நிலையில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த சாதனத்தின் ஒரு புறத்தில் இரண்டு கால்களையும் மாட்டிக்கொண்டு, மறுபுறம் கைகளால் பிடித்துக்கொள்ள வேண்டும்.

இதிலுள்ள ரப்பர் பேண்டுகளை இழுக்கக்கூடிய முழு நீளம் வரை இழுத்து பல விதங்களில் உடற்பயிற்சிகளை செய்யலாம்.  இக்கருவி வயிறு, இடுப்பு, முதுகு, கை, கால் போன்ற உடல் பகுதிகளை மட்டுமின்றி உடலை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது. இக்கருவியில் இருக்கும் ரப்பர் பேண்டின் உறுதித்தன்மை மற்றும் அதை இழுக்கும் திறனைப் பொறுத்து உடல் வலுவடைகிறது. இந்தக் கருவி சிறியதாக இருப்பதால் அதை வெளியில் எடுத்துச் செல்வதற்கும், வீட்டில் வைத்துக்  கொள்வதற்கும் சௌகரியமாக இருக்கிறது.

இதிலுள்ள ரப்பர் பேண்டின் இழுக்கும் திறன் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அதற்கு நிகரான உறுதித் தன்மையுடைய உடற்பயிற்சிகளை இதில் செய்யலாம். ஒவ்வொரு நபரின் உடல்திறன் தகுதிகளைப் பொறுத்தே அவர்களுக்குரிய உடல் உறுதித்தன்மை பயிற்சிகளை அமைத்துக் கொடுக்க
வேண்டும். Pull reducer மூலம் பலவிதமான உடற்பயிற்சிகளை செய்ய முடியும். அவரவர் தேவைக்கு ஏற்ப உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ பயிற்சிகளை செய்யலாம்.

இதில் படுத்துக் கொண்டு செய்யும் பயிற்சிகளை Supine Position  பயிற்சிகள் என்று சொல்வோம். ஒரு விரிப்பின் (Mat) மீது படுத்துக்கொண்டு, இரு கால்களையும் வளையத்தில்  மாட்டிக்கொண்டு, கால்கள் இரண்டையும் 90 டிகிரி அளவில் தூக்கி பின்னர் தரையைத் தொடும்வரை கீழிறக்கி பின் மேல்  எழுப்பி செய்யும் பயிற்சியானது வயிறு தசைகளுக்கு வலுவினைக் கொடுக்கும்.

நின்றுகொண்டு ஒரு பக்கம் ஒரு கையினால் இக்கருவியின் handle-ஐ பிடித்துக்கொண்டு மற்றொரு கையினால் காலைப்  பிடித்து இழுத்து செய்யும் பயிற்சி கைகளுக்கு வலுவினைத் தருகிறது. Half sit என்கிற Seated exercises தரையில் அமர்ந்து செய்யக்கூடியவை. தரையில் அமர்ந்துகொண்டு கால்களை இரு வளையத்திலும் வைத்துக்கொண்டு, உடலின் மேல்புறம் மட்டும் தரையில் படுத்து எழுவதை Abs sit-up என்று சொல்கிறோம். 

இதே நிலையில் இரு கைகளை மேலே எழுப்பி கீழே இறக்குவதற்கு Biceps என்று பெயர். இது கை தசைகளுக்கு வலுவினைக்  கொடுக்கிறது. இதேபோல கை, கால் மற்றும் இடுப்புப் பகுதிகளுக்கான தனித்தனி உபயோகமுள்ள உடற்பயிற்சிகளை  இக்கருவியின் மூலம் செய்யலாம்.
எந்தவொரு உடற்பயிற்சி கருவியின் பயன்பாடும் அதை சரியாக கற்றுக்கொண்டு, சரியாக செய்தால்தான் கிடைக்கும். 

இதுபோன்ற உடற்பயிற்சி கருவி ஒன்றினை வாங்கும்போது, அதன் பயன்பாட்டைக் குறித்து Instruction Manual என்கிற  செய்முறை விளக்கம் கொண்ட புத்தகம் அதோடு கொடுக்கப்படும். பொதுவாகவே நான் பார்த்த வரையில் என் நண்பர்களோ  அல்லது உறவினர்களோ இதுபோன்ற ஒரு கருவியை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை, அதைப் பயன்படுத்துவதில் காட்டுவதில்லை.

இந்த உடற்பயிற்சியை இப்படி செய்ய வேண்டும் என்று செய்முறை விளக்கக் கையேட்டில் தகவல் இருக்கும். அதை சரியாக வாசிக்காமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்படுகிற காயங்களின் விகிதம் அதிகமாக இருக்கும். மொத்தமாக  உடற்பயிற்சி செய்ததால்தான் இடுப்பு, கை, கால் என பல உடல் பகுதிகளில் வலியும், பிடிப்பும் ஏற்பட்டதாக சிலர் கருத்து சொல்வார்கள்.

எந்த ஒரு உடற்பயிற்சியும் சரியாக செய்யும் பட்சத்தில் பலனைதான் தரும். ஆனால், தவறாக செய்தால் அதன் பக்க விளைவுகளைக் காட்டிவிடும். எனவே உடற்பயிற்சிகளை சரியாக செய்வதற்கு முதலில் செய்முறை விளக்கக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை நன்றாக படிக்க வேண்டும். பின்னர் உடல் உறுதித் தன்மைக்குரிய பயிற்சிகளை மெதுவாக செய்து பழக வேண்டும். ஓரளவு செய்து பழக்கமான பிறகு உறுதித் தன்மைக்குரிய பயிற்சிகளை அதிகப்படுத்தலாம்.

வெளியூர் செல்லும்போது, வேலைப் பளுவினால் நேரமின்மை காரணத்தினால் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல முடியாதவர்கள், ஓரளவு இதுபோன்ற கருவியின் மூலம் பல பயன்களை அடையலாம். மேற்சொன்னது போல அவரவர் உடல்திறன் தகுதிகளைப் பொறுத்து ஒவ்வொரு உடல் பாகங்களாகப் பிரித்து பயிற்சிகள் செய்யலாம்.

நன்றாக பழக்கமான பிறகு முழு உடற்பயிற்சிகளையும் சேர்த்து ஒரே நாளில் செய்யலாம். உடற்பயிற்சி என்பது ஒருவித கலை. எந்த ஒரு கலையையும் அதற்குரிய குருவின் மூலமாக கற்பது சாலச் சிறந்தது. தேர்ந்த உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையோடு இது மாதிரியான உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் மனமும், உடலும் சிறக்க வாழலாம்’’ என்கிறார் உடற்பயிற்சி நிபுணர் தேவிமீனா.

%d bloggers like this: