தண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…!

லக அளவில் தண்ணீர்ப் பிரச்னை என்பது வெறும் நீர் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; அது ஓர் அரசியல். அதுவும் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தண்ணீர் என்பது ஒரு மாபெரும் அரசியல் கருவியாகத் திகழ்கிறது. இந்தப் பிரச்னை தேர்தல் கால பிரசாரக் களத்தில் வெகுவாக எதிரொலிக்கும். நீராதாரங்களைப் பாதுகாப்பது, அவற்றை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களின் தேவையைப் பொறுத்து, அண்டை மாநிலங்களுடனான ஒப்பந்தங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, அவற்றின் மூலமாகத் தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதுதான் சிறந்த அரசின் கடமை.

சென்னை மாநகரின் தண்ணீர்த் தேவையைக் கவனத்தில்கொண்டு ஏற்கெனவே ஆந்திர மாநிலத்துடனான ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் கொண்டுவந்த திட்டம்தான் தெலுங்கு கங்கை திட்டம். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி தண்ணீர், ஆந்திர மாநில கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு வெறும் 2.22 டி.எம்.சி தண்ணீர்தான் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த ஒப்பந்தம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தற்போது சென்னைக்கு இத்தகைய அவலநிலை ஏற்படாமல் தப்பித்திருக்க வாய்ப்புண்டு. தண்ணீர்த் தட்டுப்பாடு சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் உச்சக்கட்டத்தில உள்ள நிலையில், மாநில அரசு எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி, தண்ணீர் சம்பந்தமாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய சிலரிடம் பேசினோம். 

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஹாரிஷ் சுல்தான், “2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கு நீர்நிலைகளைத் முறையாகத் தூர்வாராததுதான் முக்கியக் காரணம் எனப் பார்த்தோம். அதற்குப் பின்னராவது, இந்த அரசாங்கம் விழிப்புற்று நம்முடைய நீர்நிலைகளைத் தூர்வாரி இருந்தால் இப்போதைய வறட்சியைத் தவிர்த்திருக்கலாம். ஏனெனில், 2017-ம் ஆண்டு மழைக்காலத்திலும் நம் மாநகரில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்தன. சென்னையில் உள்ள எந்த நீர்நிலைகளையும் இந்த அரசாங்கம் தூர்வாரவில்லை. ஏரிகளைத் தூர்வாருவதற்குப் போதிய பணம் அரசாங்கத்திடம் இல்லையோ என நீங்கள் நினைத்தால் அது தவறு. நீர் நிலைகளைத் தூர்வாருவதற்காக அரசு செய்துள்ள செலவு எவ்வளவு என்பது பற்றி ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் நிரூபித்துள்ளது. குறிப்பாக சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்து கொண்டிருக்கும் நான்கு ஏரிகளையும் தூர்வாரி, 25 வருடங்கள் ஆகிவிட்டன” என்றார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் கௌரவத் தலைவர் கே.கே.என். ராஜன், “தமிழகத்தில் தண்ணீர்ப் பிரச்னை என்பது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்தப் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, நீர்நிலைகளில் மணல் கொள்ளை. ஆறுகளில் மணல் இருந்தால்தான் நீர்வளம் பாதுகாக்கப்படும். மணலுக்கு நீரைத் தேக்கி வைக்கின்ற சக்தி உண்டு. 2003-ம் ஆண்டு மணல் குவாரியையும் மது விற்பனையையும் அரசே எடுத்துக்கொண்டது. ஆனால், அரசின் அறிக்கைப்படி, மணல் குவாரி மூலமாகக் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது, மது விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய வருவாயைவிட மிகக்குறைவு. அதேநேரத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து நீடிப்பதால், நிலத்தடி நீர் வளமும் பாதிக்கப்படுகின்றது. நீர்ப் பிடிப்புப் பகுதிகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர், அந்த நீர்த்தேக்கங்களில் தேங்கி நிற்காமல் போகிறது. ஒரே ஆண்டில் வெள்ள நிவாரணத்தையும்  வறட்சி நிவாரணத்தையும் அரசு அறிவிக்கிறது என்றால், அவற்றை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. ஆகவே, ஆண்டுக்கு எவ்வளவு மழை பெய்கிறது, மக்களின் தண்ணீர்த் தேவை எவ்வளவு என்பது குறித்தான சரியான கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும்” என்றார்.

 

`காவிரி வெறும் நீரல்ல’ என்ற நூலின் ஆசிரியர் தங்க.ஜெயராமன், “தண்ணீர்ப் பிரச்னையில் நிரந்தரமான தீர்வை நோக்கி நகரவேண்டுமென்றால், அந்தந்தப் பகுதிக்கான நீராதாரங்கள் எவை என்பதைக் கண்டறிந்து, அவற்றை நோக்கி அரசு தனது திட்டங்களை வகுக்க வேண்டும். பெருநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப அந்தப் பகுதிகளைச் சேர்ந்த நீராதாரங்களை வளர்த்தெடுக்க வேண்டும். முன்பெல்லாம், கிராமங்களும்  நகரங்களும் நீராதாரங்களை மையமாக வைத்தே உருவாகின. நீராதாரங்கள் இல்லாத இடங்களில் மக்களின் வளர்ச்சி ஏற்படாது. ஆனால், இப்போது நகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நீராதாரங்கள் வளர்கின்றனவா என்றால், அப்படி வளர்வதில்லை என்பதுதான் உண்மை. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றைத் தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு தீர்த்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. `வீராணத்திலிருந்து 300 கி.மீ பயணம் செய்து தண்ணீர் கொண்டு வந்து விட முடியும். மேட்டூரிலிருந்து, வீராணத்துக்குத் தண்ணீர் கொண்டு வந்து, அங்கிருந்து சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வந்து விடலாம்’ எனச் சொல்வதெல்லாம் இந்தப் பிரச்னைகளிலிருந்து தற்காலிக விடுதலையை மட்டுமே அளிக்கும். அவை நிரந்தரமான தீர்வைத் தராது.

நிரந்தரமான தீர்வு என்பது, நிலத்தடி நீர்மட்டத்தை மீண்டும் உயர்த்த வேண்டும். அதற்கு குளம், குட்டைகள் போன்ற நீர்நிலைகள் நிரம்பினால் மட்டுமே அது சாத்தியம். அதற்கு குடிமராமத்துப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் கட்டுமானங்களுக்கான தேவையும் வளரும். எனவே, அத்தகைய கட்டுமானங்களுக்கு மணல் தேவை எவ்வளவு என்பது குறித்தான கணக்கெடுப்பையும் அரசு நடத்த வேண்டும். கடல்நீரைக் குடிநீராக்குவது, செயற்கை முறையில் மழையைப் பெற முயற்சி செய்வது போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல் நீர் நிலைகளின் பரப்பளவை அதிகரித்துப் பாதுகாப்பதுடன், நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்புகள் இல்லாமல் சரி செய்து பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமை” என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் முடிந்துவிட்ட நிலையில், தண்ணீர் அரசியலை மனதில் கொண்டு, தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கைகளில் அமைச்சர்களும், அரசும் சற்றே கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

%d bloggers like this: