ஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்!

டினுங்…’கென சிணுங்கியது வாட்ஸ் அப். வேறு யார்… நம் கழுகார்தான்… ‘துறைச் செயலாளர்கள் உட்பட தலைமைச் செயலக அனைத்து ஊழியர்களும் காலை 10 மணிக்கெல்லாம் அலுவலகம் வரவேண்டும்’ என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பிய கடித நகலை நமக்கு ஃபார்வேர்டு செய்திருந்தார். அதைப் படித்து முடிக்கவும்… அவர் என்ட்ரி கொடுக்கவும் சரியாக இருந்தது!

“என்ன விவகாரம் இது?”

“விரைவில் தமிழக தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விடைபெறப்போகிறார் கிரிஜா. ஆனால், தான் விடைபெறும் முன்பு சில முடிவுகளைக் கடுமையாக எடுக்க வேண்டும் என்று நினைத்தாராம். அதில் ஒன்றுதான் மேற்கண்ட கடிதம்…”

“அவர் மீதுதான் பலருக்கும் வருத்தங்கள் உண்டு. ‘செயல்பட வேண்டிய நேரத்தில் எல்லாம் செயல்படவில்லை. டெல்லி செல்வாக்கு இருப்பதால், இங்குள்ள ஐ.ஏ.எஸ்-களை அவர் பெரிதாகக் கண்டுகொண்டதே இல்லை. ரிடையர் ஆகவிருக்கும் நேரத்தில் மட்டும் என்ன திடீர் அக்கறை?’ என்று தலைமைச் செயலகத்திலேயே பேசுகிறார்களாம்.. சில மாதங்களுக்கு முன்பு பெண் செய்தியாளர்களை அவதூறாகப் பேசிய, கிரிஜாவின் உறவினரான எஸ்.வி.சேகர், போலீஸ் தேடும் நபராக இருந்தார். ஆனால், போலீஸ் புடைசூழ மத்திய மந்திரியோடுகூட மேடையில் காட்சி கொடுத்தார். அவரை போலீஸ் நெருங்கவே இல்லை. இதற்கெல்லாம் காரணம், கிரிஜா இருக்கும் தைரியம்தான் என்று வெளிப்படை யாகவே விமர்சனங்கள் எழுந்ததையும் மறந்துவிட முடியாது. மொத்தத்தில் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன என்பதுதான் பெரும்பாலான ஐ.ஏ.எஸ்-களின் பொருமல்”

“ஓ… தன்வினை தன்னைச்சுடும் என்பதுபோல இப்போது அதிகாரிகள் அனைவரும் கிரிஜாவை கண்டுகொள்வது இல்லையோ!”

 

“கிரிஜாவை மட்டுமல்ல, மாநிலத்தையும் அல்லவா கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். மாநில நிர்வாகத்தைக் கண்காணிக்க வேண்டிய தலைமைச் செயலக அதிகாரிகள் பலரும் கடந்த சில மாதங்களாகவே எதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர் தலைமைச் செயலகம் வந்தாலும்… வராவிட்டாலும் அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் இணை, துணை செயலாளர்கள் பதறியடித்துக்கொண்டு காலை 10 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் ஆஜராகிவிடுவார்கள். எந்தச் செயலாளருக்கு… எப்போது முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும் என்று பதைபதைத்துக்கிடப்பார்கள். ஆனால், நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்தக் காட்சிகள் எல்லாம் காலாவதியாகி பல மாதங்களாகிவிட்டன.”

“ஆச்சயர்மாக உள்ளதே!”

“அவமானமும்கூட. தமிழகத்தின் முக்கிய துறைகளின் செயலாளர் களாக இப்போது இருப்பவர்கள் பலரும் வெளி மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான். பொதுப்பணித்துறை, தொழில்துறை உள்ளிட்ட சில துறைகளில் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செயலாளர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக வட இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருவர்தான் தலைமைச் செயலகத்தில் கோலோச்சுகிறார்களாம்.”

“ம்!”

“பலரும் சிண்டிகேட் அமைத்து, அமைச்சர்களையே ஆட்டுவிக்கிறார்களாம். இதற்கு அமைச்சர்களும் ஒரு காரணம். பல அமைச்சர்களுக்கு தங்கள் துறை பற்றிய விவரங்களே முழுமையாகத் தெரிவதில்லை. ஆனால், காசு விஷயத்தில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். இதை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார்கள் அதிகாரிகள். இதனால், அமைச்சர் அலுவலகத்திலிருந்து செல்லும் கோப்புகளைக்கூட அலட்சியமாகவே கையாள்கிறார்கள்.”
“எங்கிருந்து வந்ததாம், இவ்வளவு துணிச்சல்?”

“ஒவ்வொரு முக்கிய துறையின் அமைச்சரும் எங்கெங்கு, என்னவெல்லாம் செய்தார்கள் என்கிற மொத்த விவரங்களும் அதிகாரிகளின் கைகளில் துல்லியமாக இருக்கின்றனவாம். அதனால்தான் இந்தத் துணிச்சல். ஒரு விஷயத்தைச் சொல்கிறேன் கேளும்… தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் துறைவாரியாக ரிவ்யூ மீட்டிங் நடப்பது வழக்கம். அதுபோன்ற கூட்டங்களில் அமைச்சர்கள் வருகைக்கு முன்பே அதிகாரிகள் வந்துவிடுவார்கள். ஆனால், இப்போது அமைச்சர்கள் வந்து, அதிகாரிகளுக்கு போன் செய்து ‘மீட்டிங் ஆரம்பிக்கலாமா?’ என்று பவ்யமாகக் கேட்கிறார்களாம். இதனால் பல ஃபைல் தூசு படிந்து கிடக்கின்றனவாம்.” 

“ஒஹோ!”

“மின்வெட்டுப் பிரச்னையால்தான் கடைசியாக தி.மு.க ஆட்சியைப் பறிகொடுத்தது என்பார்கள். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மூன்றே மாதங்களில் மின்வெட்டுப் பிரச்னையை சரிசெய்தார். அதற்குக் காரணம் அதிகாரிகள் சுறுசுறுப்புடன் திட்டங்களை வகுத்ததுதான். அதேபோல, சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்தபோது, ‘வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரலாம்’ என்று ஜெயலலிதாவிடம் ஐடியா கொடுத்ததே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான். ஆனால், தற்போது தமிழகமே தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. அதைப்பற்றி எந்த அதிகாரியும் அலட்டிக்கொள்ள வில்லை. தண்ணீர் பிரச்னை போதாதென்று, தற்போது மின்வெட்டுப் பிரச்னையும் வாட்டுகிறது. இப்போதே புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலநாள்களில் பின்னிரவு ஏற்படும் மின்வெட்டு மறுநாள் மதியம்தான் சரியாகிறது. தேர்தலுக்கு முன்பாகவே மின்சாரத் தட்டுப்பாடு பிரச்னை ஆரம்பித்துவிட்டாலும் துறைசார்ந்த அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லையாம். அமைச்சர்களும் இதை எல்லாம் கண்டிக்க முடியாமல் திணறுகிறார்கள்.”

“நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டது என்று சொல்லும்…”

“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இப்படி ஒத்துழையாமை இயக்கம் நடத்த மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு வேண்டிய… அதேசமயம் தகுதியே இல்லாத ஆட்களை அதிகாரிகளாக நியமித்துக் கொண்டார்கள். ஆனால், அவர்களே இப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்களை மதிப்பது இல்லையாம். மேற்கு மண்டலத்தில் ஒரு மாநகராட்சியின் ஆணையரை, அந்தத் துறை சார்ந்த ஒரு முக்கியப் புள்ளிதான் நியமித்தாராம். ஆனால், இப்போது அந்தப் புள்ளியின் தரப்பிலிருந்து அனுப்பப்படும் பரிந்துரைகளுக்கே ‘கட்டிங்’ எதிர்பார்க்கிறாராம் அந்த ஆணையர். எதிர்த்துக் கேள்வி கேட்டால்… ‘அண்ணனின் சமாச்சாரம் எல்லாம் நமக்கு தெரியும்ஜி…’ என்று சிரிக்கிறாராம்! இதனால், கடுப்பிலிருக்கிறாராம் அந்த முக்கியப் புள்ளி.”

“அடேங்கப்பா!”

“அதேசமயம், அமைச்சர்களாலும் சில அதிகாரிகள் பந்தாடப்பட்டிருக்கிறார்கள். அதுவும் அதிகாரிகள் இடையே அதிருப்தியைக் கிளப்பியிருக்கிறது. பதிவுத்துறையில் ஐ.ஜி-யாக இருந்த குமரகுருபரன், கண்டிப்பான பேர்வழி. துறையில் ‘ஆன்லைன்’ பதிவு முறை உட்பட பல நல்ல நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், பணம் வாங்கிக்கொண்டு சார்பதிவாளர்களை பணி இடமாறுதல் செய்வதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட ஒரு முக்கிய புள்ளி, மேலிடத்தில் சண்டைபோட்டு அவரை மாற்ற வைத்துவிட்டாராம்.”

“உதயசந்திரன், இறையன்பு, சகாயம் போன்ற திறமையான, நேர்மையான அதிகாரிகள் முக்கியத்துவமற்றவர்களாக ஓரங்கட்டி வைக்கப்பட்டிருப்பதன் விளைவை தமிழக அரசு இன்று அனுபவித்துவருகிறது என்று சொல்லும்!”

 

“உண்மைதான். எடப்பாடி தரப்புக்கு மற்றொரு சிக்கலும் ஆரம்பித்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒரு குழுவினர் சத்தமில்லாமல் தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பாக, முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் மூன்று அதிகாரிகள், தி.மு.க-வின் முக்கிய புள்ளிக்கு தினமும் போன் செய்து அரசுத் தரப்பில் நடக்கும் விஷயங்களைப் போட்டுக் கொடுக்கிறார்களாம்.”

“இவ்வளவு சிக்கல்களுக்கு இடையே சட்டமன்றக் கூட்டத்தொடர் வேறு அறிவிக்கப் பட்டுள்ளதே?”

“ஆம், ஜூன் 28-ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத்தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யவேண்டும். அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மானியக்கோரிக்கையை எப்படி தாக்கல் செய்யமுடியும் என்பதால், அதிகாரிகளிடம் அமைச்சர்கள் பலரும் சரணடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.”

“முதல்வர் சாட்டையைச் சுழற்றவில்லையா?”

“சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்கிற முடிவுக்கு முதல்வர் வந்துள்ளார். தலைமைச் செயலாளர் பதவி காலியாகும்போது சில முக்கிய துறைகளின் செயலாளர்கள் மாற்றம் கண்டிப்பாக இருக்கும் என்கிறார்கள். தமிழக அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்தத் தகவல்களை மத்திய உளவுத்துறையும் நோட் போட்டு டெல்லிக்கு அனுப்பியுள்ளது. அங்கிருந்து கிரிஜா வைத்தியநாதனுக்கு ஓலை வந்த பிறகே அவர் அதிகாரிகளைக் கண்டிக்கும் விதமாக இந்தக் கடிதத்தை அனுப்பினார் என்றும் சொல்கிறார்கள். இந்தக் கடிதத்தைப் படித்த அதிகாரிகள் பலரும் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றைச் சுட்டிக்காட்டி நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்களாம்!”

“சொல்லும்… சொல்லும்!”

“ஜூன் 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில் குதிரை தடை தாண்டும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்துக்கு வந்துவிட்டார். ஆனால், தலைமைச் செயலாளர் அங்கு இல்லை. ‘சி.எஸ் எங்கே?’ என்று முதல்வர் கேட்க… ‘மேடம் ஆன் தி வே’ என்றார்கள் அதிகாரிகள். ‘நானே வந்துவிட்டேன்… அவர் வருவதற்கு லேட்டா?’ என்று கூறி கடுப்படித் துள்ளார் முதல்வர்!”

“ஓ… எடப்பாடி கடுப்படிக்கும் அளவுக்கெல்லாம் தெம்பாக இருக்கிறாரா?”

“மற்றொரு விஷயத்தையும் சொல்கிறேன்… ‘ராம் ராபர்ட் ரஹீம்’ என்கிற பழைய படத்தை வைத்து மூன்று பேர்களை உணவுத்துறை அதிகாரிகள் கிசுகிசுக்கிறார்கள். ‘ராம்’ என்றால் கோட்டைப் பிரதிநிதி. ‘ராபர்ட்’ மத்திய அரசின் உயர் அதிகாரி. ‘ரஹீம்’ புரோக்கர். விலையில்லா அரிசி திட்டத்துக்காக வெளிமாநிலங்களிலிருந்து அரிசி வாங்குகிறார்கள் அல்லவா… கோட்டைப் பிரதிநிதிக்கு மட்டும் கிலோவுக்கு ஒரு ரூபாய் முதல் ரூ.1.90 வரை கமிஷன் போகிறதாம். மத்திய அரசு அதிகாரியும் புரோக்கரும் சராசரியாக கிலோவுக்கு ஒரு ரூபாய் பார்த்துவிடுகிறார்களாம். நாள் ஒன்றுக்கே சில கோடிகள் புரள்கிற விஷயம் இது என்கிறார்கள்!”

“அடப்பாவிகளா!”

“இன்னும் இருக்கிறது கேளும்… இதற்காகவே சென்னை அண்ணாசாலையில் கமிஷன் ஆபீஸ் ஒன்று இயங்குகிறதாம். இதன் பின்னணியில் நாமக்கல்லைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய நிறுவனத்தின் ஆசி உண்டாம். இதுபற்றிய தகவல்களை மத்திய உளவுத்துறையினர் மேலிடத்துக்கு அனுப்பியுள்ளார்கள். தொடர்ந்து சில ஆவணங்களை கிராஸ்செக் செய்யும் பணி நடக்கிறது. விரைவில் பலரும் சிக்குவார்கள்!”

“டெல்லியில் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகத்தை திருப்பி அனுப்பிவிட்டார்களாமே!”

“அ.தி.மு.க தலைமை செய்த தவறுதான் இதற்குக் காரணமாம். ‘ஒரே நாடு… ஒரே தேர்தல்’ குறித்த ஆலோசனைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது பி.ஜே.பி. ஆனால், முதல்வர் அல்லது துணை முதல்வர் செல்லாமல் சி.வி.சண்முகத்தை அனுப்பியிருக்கிறது அ.தி.மு.க தலைமை. ஏற்கெனவே பல்வேறு விவகாரங்களில் அ.தி.மு.க அரசு மீது செம கடுப்பில் இருக்கிறாராம் மோடி. இந்தச் சூழலில் சண்முகம் வந்த விஷயத்தை மோடி காதில் அதிகாரிகள் ஓத… ஒரே வார்த்தையில் ‘நோ’ என்று சத்தமாகவே சொல்லிவிட்டாராம் மோடி!” என்ற கழுகார்… “வருத்தம் தெரிவித்து ஒரு திருத்தத்தைப் போட்டுக்கொள்ளும்… கடந்த இதழில், ‘இடைத்தேர்தலில் தி.மு.க தோற்ற தொகுதிகளில் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். நிலக்கோட்டைத் தொகுதி தோல்விக்காக, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஐ.பெரியசாமி தலை உருளுது’ என்று சொல்லிவிட்டேன். ஆனால், அங்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார். ஐ.பெரியசாமி மாநில துணை செயலாளராகி பல ஆண்டுகள் ஆகின்றன… வெயிலில் கிறுகிறுத்து வந்ததால், அதை மறந்துவிட்டேன்…” என்றபடி சிறகுகளை விரித்துப் பறந்தார்.

%d bloggers like this: