எடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…

டைக் குறைப்பு பற்றி ஒவ்வோர் இதழிலும் நீங்கள் தருகிற ஆலோசனைகளும் டயட் சார்ட்டும் நன்றாக இருக்கின்றன. ஆனால், வேலை நிமித்தம் எப்போதும் பயணத்தில் இருக்கும் என்னைப் போன்றோருக்கு இதெல்லாம் சரிவராதே…’’

‘`வாழ்க்கையில் வேலையும் ஓர் அங்கம் என்கிற நிலை மாறி, இன்று பலருக்கும் வேலைதான் வாழ்க்கை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது உங்களுக்கு மட்டுமே இருக்கும் பிரச்னையல்ல. பெரிய நிறுவனங்களின் சிஈஓக்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என நான் தினமும் சந்திக்கிற பலருக்கும் இருக்கும் பிரச்னைதான். அவர்கள் எல்லோரும் எப்படிச் சமாளிக்கிறார்கள்?

 

பயணங்களைத் தவிர்க்கமுடியாதவர்களுக்கு…

டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், சீட்ஸ் போன்றவற்றை சிறிய பாக்கெட்டுகளில் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். ஒருநாள் பயணம் என்றால் ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, ஆரஞ்சு போன்ற ஃப்ரெஷ் பழங்களை எடுத்துச் செல்லலாம். இவையெல்லாம் அப்படியே சாப்பிடக்கூடிய பழங்கள். கத்தியோ, கட்டரோ எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

ஊருக்குப் போய் இறங்கியதும், அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லுங்கள். வெள்ளரிக்காய், கேரட், பழங்கள் போன்ற வற்றை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளுங்கள்.

உப்புமா, தால், பொங்கல், பருப்பு சாதம் என ரெடி டு ஈட் மிக்ஸ் வகைகள் பெரிய கடைகளில் கிடைக்கும். வெந்நீரை ஊற்றி, 8 முதல் 10 நிமிடங்கள் காத்திருந்தால் சுவையான உணவு தயாராகிவிடும். ரெடிமேடு உணவுகள் ஆரோக்கியமானவைதானா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். மைதாவில் செய்த பிரெட் சாண்ட்விச்சையும் பரோட்டாவையும் சாப்பிடுவதற்கு இது எவ்வளவோ மேல் அல்லவா?

வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, வறுத்த தாமரை விதை, பொரி போன்றவற்றில் ஏதேனும் ஒன்று நொறுக்குத்தீனியாகச் சாப்பிடலாம்.

டெட்ராபேக்கில் வரும் மோர், சோயா மில்க் போன்றவை எப்போதும் இருக்கட்டும்.

தங்கியிருக்கும் ஹோட்டலில் காலை உணவைச் சாப்பிடுங்கள். முட்டை, டோஸ்ட், பழங்கள் மற்றும் பாலுடன் கார்ன்ஃப்ளாக்ஸ் அல்லது முசிலி, சாம்பாருடன் இட்லி அல்லது தோசை போன்றவை ஓகே. பழங்கள் பரிமாறப்பட்டால் வீணாக்காதீர்கள்.

மதிய உணவுக்குத் தென்னிந்திய சாப்பாடு அல்லது வாழையிலைச் சாப்பாடு கிடைத்தால் சாதத்தின் அளவை ஒரு கரண்டியுடன் நிறுத்திக்கொண்டு, பருப்பு, கூட்டு, பொரியல் போன்றவற்றை எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். அசைவம் என்றால் ஸ்டீம் செய்த மீன், மீன் கறி, சிக்கன் கறி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையோ, ஓர் ஆம்லெட்டையோ சாப்பிடலாம். புரதம் நிறைந்த உணவுகள் மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்குப் பசியின்றி வைக்கும்.

 

மதிய உணவில் தவிர்க்க வேண்டியவை…

* வடை, அப்பளம், பிரிஞ்சி சாதம் மற்றும் இனிப்புகள்.

* இரவு உணவு மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஒரு கப் சூப் குடித்துவிட்டு, சில நிமிடங்கள் கழித்து ஏதேனும் ஒரு அயிட்டம் மட்டும் சாப்பிடுங்கள். உதாரணத்துக்கு, தேங்காய்ப்பாலுடன் இடியாப்பம் அல்லது ஆப்பம், சாம்பாருடன் பெசரட்டு அல்லது இட்லி அல்லது தோசை, சூப்புடன் ஃபிஷ் டிக்கா அல்லது சிக்கன் டிக்கா அல்லது ஆம்லெட் அல்லது ஒரு பிளேட் பனீர் டிக்கா சாப்பிடலாம். பஃபே உணவு இருந்தால் தவிர்த்துவிடுங்கள்.

* சோய் புரோட்டீன் பவுடர் அல்லது வே புரோட்டீன் மீல் ரீப்ளேஸ்மென்ட் பவுடர் என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். வே புரோட்டீன் என்பது சைவ உணவுக்காரர்களுக்கு மிக ஆரோக்கிய மானது. இந்த பவுடர்கள் எல்லாமே 50 கிராம் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இவற்றுடன் 200 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு குலுக்கி அப்படியே குடிக்கலாம். ஐஸ் வாட்டரோ, ஐஸ்கட்டிகளோ சேர்த்துக் குடிக்கலாம். பசிக்கும்போது பஜ்ஜி, பஃப், சமோசா, சாட் எனக் கண்டதையும் சாப்பிட்டு ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.

* உப்புமா மிக்ஸ், அடை மிக்ஸ், ரெடிமேடு தேப்லா, காக்ரா என வீட்டிலேயே தயாரித்த வேறு சில உணவுகளையும் எடுத்துச் செல்லலாம். நண்பர்களின் வீடுகளிலோ, சர்வீஸ் அபார்ட்மென்ட்டிலோ தங்கும்போது இவை கைகொடுக்கும்.

 

இண்டக்‌ஷன் அடுப்பையும் கெட்டிலையும் கையோடு எடுத்துச் செல்கிற நபர்களையும், விளையாட்டு வீரர்களையும் நான் பார்த்திருக்கிறேன். சைவ உணவுப்பழக்கமுள்ள ஒரு குடும்பத்தை எனக்குத் தெரியும். குடும்பத்துடன் ஹாங்காங் ட்ரிப் போனபோது, சத்து மாவு மிக்ஸ், அடை மிக்ஸ், உப்புமா மிக்ஸ், சிறுதானிய மிக்ஸ், ரசம் மிக்ஸ் என்று ஏகப்பட்ட ரெடிமேடு மிக்ஸ் வகைகளையும், கூடவே ஒரு குக்கரையும் எடுத்துச் சென்று 10 பேரின் பசியாற்றிக் கொண்டார்கள் என்றால் நம்புவீர்களா?

ஆப்பிரிக்காவுக்கு அடிக்கடி பயணம் செய்கிற கம்பெனி எக்சிகியூட்டிவ் ஒருவர், ஒவ்வொரு முறையும் இவைபோன்ற உணவுகளை எடுத்துச் சென்றுதான் இன்றுவரை சமாளித்துக்கொண்டிருக்கிறார். எனவே மனமிருந்தால் மார்க்கமுண்டு!

வாழ்க்கையில் எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை விட்டுக்கொடுப்பதற்கு மட்டும் நோ எக்ஸ்கியூஸ்.

திருமணம், விசேஷங்கள், உடல்நலமில்லாத உறவினரைப் பார்க்கப் பயணிப்பது, விருந்தாளிகளின் வருகை என வாழ்க்கை என்பது நிகழ்வுகளால் நிரம்பியது. இத்தனைக்கும் இடையில் ஆரோக்கியத்தைக் கட்டிக் காப்பாற்றுவதுதான் உங்கள் திறமை. அது உங்களால் நிச்சயம் முடியும்.”


விடுமுறைக் காலச் சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பீர்கள். வழக்கமாக ஆரோக்கியமாகச் சாப்பிடுகிறவர்கள்கூட பயணங்களின்போது வேறு வழியின்றி கண்டதையும் சாப்பிட்டிருக்கலாம். சர்க்கரை, எண்ணெய், மைதா என ஆகாத அனைத்தையும் சாப்பிட்டதாக நினைக்கிறீர்களா? உங்கள் ஆரோக்கியம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப இந்த டிப்ஸ் உதவும்.

 

ஊருக்குத் திரும்பிய முதல் இரண்டு நாள்களுக்கு வெறும் திரவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். இளநீர், தக்காளி ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், கீரை சூப், தக்காளி சூப், தக்காளி ரசம், கிரீன் டீ, லெமன் டீ, மோர் போன்றவை உங்களுக்கான சாய்ஸ். கூடவே கொஞ்சம் நட்ஸும்,  ஃப்ரெஷ்ஷான பழங்களும் சாப்பிடலாம்.

மூன்றாவது நாள்: காலை உணவுக்கு நட்ஸ் மற்றும் சாலட் அல்லது பழத்துண்டுகள், இளநீர்.

மதிய உணவுக்கு ஒரு டம்ளர் மோர், ஒரு டம்ளர் சூப், ஒரு கப் வேகவைத்த காய்கறிகள் அல்லது சாலட்.

மாலையில் டீ அல்லது காபி, பழங்கள் அல்லது நுங்கு.

இரவு உணவுக்கு சூப் மற்றும் வேகவைத்த காய்கறிகள் அல்லது நீர்க்கத் தயாரித்த பொங்கல் அல்லது வடஇந்தியக் கிச்சடி.

நான்காவது நாள்: காலை உணவுக்கு சாம்பாருடன் இட்லி அல்லது தோசை மற்றும் மோர்.

மதிய உணவுக்கு மோர், மிகக் குறைந்த அளவு சாதம் அல்லது சிறுதானியம், சாம்பார் அல்லது காய்கறி கிரேவியுடன்.

மாலையில் டீ அல்லது ஃப்ரூட் சாலட் அல்லது பொட்டுக்கடலை.

இரவு உணவுக்கு சாலட் மற்றும் ரொட்டி அல்லது தோசை அல்லது இட்லி… தொட்டுக்கொள்ள வெஜ் அல்லது நான்வெஜ் கறி.

அசைவ உணவுக்காரர்கள், ஐந்தாம் நாள் முதல் அந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது திரவ உணவுகளில் தொடங்கி, பிறகு சைவ உணவுக்குப் பழகி, அடுத்து அசைவத்துக்கு வர வேண்டும். இந்த ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றினால், சுற்றுலாவால் சீரற்றுப்போயிருந்த உங்கள் ஆரோக்கியம், மீண்டும் உங்கள் வசமாகும்!

%d bloggers like this: