நீங்களும் செய்யலாம்! – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை!

சிறியதோ, பெரியதோ… எல்லா வீடுகளிலும் முதலில் வரவேற்பது மிதியடியாகவே இருக்கும். வீட்டு வாசலில் மட்டுமன்றி, உள்ளே ஒவ்வோர் அறையின் வாசலிலும் இடம்பிடிக்கத் தொடங்கி விட்டது மிதியடி.

‘`வீடுகளின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக இடம்பிடித்துவிட்ட மிதியடிகளை நாமே நம் கைப்படத் தயாரிக்கலாம்; சிறிய அளவிலான பிசினஸாகவும் செய்யலாம்’’ என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் அமுதா.

‘`ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கேன். படிப்பை முடிச்சதுமே கல்யாணம் பண்ணிவெச்சிட்டாங்க. வேலைக்குப் போறதுக்கான தேவையோ, அந்த எண்ணமோ வரவே இல்லை. என் பிள்ளைங்க வளர்ந்து, அவங்களுக்குக் கல்யாணமான பிறகுதான் என்னை நானே தெரிஞ்சுக்கிறதுக்கான அவகாசமே கிடைச்சது. ஆனாலும், என்ன செய்யறதுங்கிற ஐடியா இல்லை. ஓய்வுநேரத்துல டி.வி நிகழ்ச்சிகள் பார்ப்பேன். சேனல்களில் வரும் கைவினைக்கலை தொடர்பான நிகழ்ச்சிகளைப் பார்த்து, அவற்றில் சொல்லிக்கொடுக்கிறதையெல்லாம் நானா செய்து பழகினேன். சில வருஷங்களுக்கு முன்னாடி ரேடியோ வில் கைவினைக் கலைஞர் ஒருவரின் பேட்டியைக் கேட்டேன். அதன் பிறகுதான் கைவினைக்கலைப் பொருள்கள் செய்யறதுல ஆர்வம் அதிகமானது. பலவிதமான பெயின்ட்டிங் கத்துக்கிட்டேன். அந்த நேரம்தான் சென்னையில உள்ள சுஹா என்.ஜி.ஓ மூலமா `வீட்டிலிருந்தே சுலபமாக மிதியடி தயாரிக்கலாம்’ என்கிற தகவலையும் கேள்விப்பட்டேன். அந்த இடத்தைத் தேடிப்பிடிச்சுப் போய் கத்துக்கிட்டேன். என் கணவர் மளிகைக்கடை வெச்சிருக்கார். நேரம் கிடைக்கும்போது நானும் கடையைப் பார்த்துக்கிறதுண்டு. மிதியடி செய்யக் கத்துக்கிட்டதும்,  கடையில உட்கார்ந்தபடியே ரெண்டு வேலைகளையும் பார்க்கறேன். பொழுதும் போகுது… வருமானமும் வருது’’ என்கிற அமுதா, ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டுகிறார்.

என்னென்ன தேவை… எவ்வளவு முதலீடு?

மிதியடி தயாரிக்கவென்றே பிரத்யேக மெஷின் இருக்கிறது.  மெஷின் வாங்கும் இடத்திலேயே மூலப்பொருள்களையும் வாங்கலாம்.

மெஷின், 150 மிதியடிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து 13,000 ரூபாய் முதலீடு போதுமானது. இடவசதியோ, மின்சாரமோ தேவையில்லை. பத்துக்குப் பத்து இடம் போதுமானது. தறி நெய்கிற மாதிரி கைகளால் செய்ய வேண்டியதுதான்.

ஒரு நாளைக்கு எத்தனை?

இரண்டு மணி நேரத்தில் பத்து மிதியடிகள் செய்யலாம். அரைநாளில் 25 மதியடிகளும், ஒருநாளில் 50 மிதியடிகள் வரையிலும் செய்ய முடியும். அவரவர் வேகத்தையும் செலவிடுகிற நேரத்தையும் பொறுத்து இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். நமக்கு விருப்பமான அளவுகளில் செய்யலாம்.

விற்பனை வாய்ப்பு? லாபம்?

ஒரு மிதியடி தயாரிப்பதற்கான அடக்க விலை 13 ரூபாய். அதை நாம் 20 ரூபாய் வரை விற்கலாம். மிதியடி தயாரிப்பதற்கான மெட்டீரியல்களில் நான்கு வகைகள் கொடுப்பார்கள். நான்கையும் நான்கு மாடல்களில் செய்யலாம்.

முதலில் அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து விற்பனையைத் தொடங்கலாம். அடுத்து கடைகளுக்கு மொத்தமாக சப்ளை செய்யலாம். மருத்துவமனைகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் என எல்லா இடங்களுக்கும் கொடுக்கலாம். சமீபகாலமாக வண்டிகளில் மொத்தமாக மிதியடிகளை ஏற்றிவந்து ஓரிடத்தில் நிறுத்தி விற்பனை செய்வதைப் பார்க்க முடிகிறது. வாகன வசதி இருப்போர் அப்படியும் செய்யலாம். 50 சதவிகித லாபம் பார்க்கலாம். மெஷின் வாங்கிச் செய்ய விருப்பமில்லாதவர்கள், எங்களைப் போன்றோரிடம் மிதியடிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யலாம். தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

பயிற்சி?

ஒருநாள் பயிற்சி போதும். கட்டணம் 750 ரூபாய் (சென்னையில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது).

One response

  1. மிக்க உபயோகமான கட்டுரை.

    நான் மிதியடிகள் வாங்கி விற்க விரும்புகிறேன். திருமதி அமுதா அவர்களின் தொலைபேசி, முகவரி கொடுக்க முடியுமா?

    நன்றி.

%d bloggers like this: