மாற்று முதலீட்டுத் திட்டங்கள்… ஓர் எச்சரிக்கை!

ந்திய முதலீட்டுச் சந்தை என்பது கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு பரிணாமங்களைச் சந்தித்து வருகிறது. சுமார் இருபது முப்பது ஆண்டுகளுக்குமுன்பு நிலவிவந்த முதலீட்டுச் சூழல் இன்றைக்கு இல்லை. பல்வேறு புதிய வடிவங்களில் இன்றைய முதலீட்டுச் சூழல் மாறியுள்ளது. அந்தக் காலகட்டத்தில் முதலீடுகள் என்பது வங்கி மற்றும் நிறுவன வைப்பு நிதி, தங்கம், ரியல் எஸ்டேட் என்று ஒரு குறுகிய முதலீட்டுச் சூழலாகவே இருந்து வந்துள்ளது. விஷயம் தெரிந்த சிலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளனர்.

 

ஆனால், இந்தியப் பொருளாதாரத் தாராளமயமாக்கலுக்குப் பிறகு, முதலீட்டுச் சந்தை மற்றும் முதலீட்டுச் சூழல் என்பது ஒரு புதிய கோணத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது நம் எல்லோக்கும் தெரியும். பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடாக அதுவரை கண்டிராத பல புதிய முதலீட்டு வழிகள் தற்போது உருவாகின. பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, ரியல் எஸ்டேட் போன்ற பல புதிய துறைகளில் முதலீட்டு வழிகள் பிறந்தன. அதுபோன்ற புதிய முதலீட்டு வழிகளால் பல முதலீட்டாளர்கள் அதிக வருமானத்திற்காக முதலீடு செய்து பயன் பெற்றாலும், இன்னொரு பக்கம் புதிய முதலீட்டு வழிகளால் பலருக்கு நஷ்டம் ஏற்பட்ட நிகழ்வுகளும் இருந்துள்ளன.
அந்த அடிப்படையில் சமீபத்தில் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவந்த ஒரு முன்னணி முதலீட்டு நிறுவனத்தின்மீதும் அதன் முக்கிய ஊழியர்களின்மீதும் பெங்களூரைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் போலீசில் மோசடி புகார் கொடுத்துள்ளனர்.  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகத் தகவல்.
அதிக வருமானம் கொழிக்கும் அதிக ரிஸ்க் உள்ள முதலீட்டு வழியில் தங்களை முதலீடு செய்ய வைத்து, உறுதியளித்த வருமானத்தைக் கொடுக்காமல் ஏமாற்றினார்கள் என்பதுதான் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் சாராம்சம்.
சமீபகாலத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற வழிகளைத் தாண்டி, ஆல்டர்நேட் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் (Alternate Investment Funds) அதாவது, மாற்று முதலீட்டு நிதி என்ற ஒரு புதிய முதலீட்டு வழியின்மூலம், முதலீட்டாளர் களிடம் பல  முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் பணம் பெற்றுவந்துள்ளன.
குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் இருந்தவந்த வளர்ச்சி, அதன்பின் அந்தத் துறையில் ஏற்பட்ட பணப்புழக்கம் போன்ற நெருக்கடிகளால் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களின் கட்டுமானத் திட்டங் களுக்கும், புதிய பல திட்டங்களுக்கும்  இதுபோன்ற மாற்று முதலீட்டுத் திட்டங்கள்மூலம் நிதி திரட்டி வந்தன. இதுபோன்ற திட்டங்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமான கால அளவைக் கொண்ட திட்டங்கள் ஆகும். 

இதுபோன்ற திட்டங்களை விற்பவர்களுக்கு அதிகமான கமிஷன் கிடைக்கும் என்பதால், பல முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் இந்தத் திட்டங்களை முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்கின்றன. பல முதலீட்டாளர்களுக்கு இந்த முதலீடுகளின் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் தெரியாததால், அவர்கள் முழுக்க முழுக்க ஆலோசகர்களின் பேச்சை மட்டுமே நம்பி இதுபோன்ற முதலீட்டு வழிகளில் முதலீடு செய்யும் சூழலில் உள்ளனர் என்பதுதான் முக்கியமான பிரச்னை. மேலும், கடந்த சில வருடங்களாக ரியல் எஸ்டேட் துறை என்பது கடுமையான பல நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகிறது. இதுபோன்ற விஷயங்களெல்லாம் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் தெரிவதில்லை. அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு, இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்துவிடுகிறார்கள் அப்பாவி முதலீட்டாளர்கள்.
மேலும், இதுபோன்ற திட்டங்களுக்குக் கடந்த கால செயல்பாட்டு வரலாறு என்பது மிகக் குறைவுதான். இருக்கக்கூடிய செயல்பாட்டு வரலாறும் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதிலும் குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை என்பது மிகவும் மந்தமாக இருப்பதால், இதுபோன்ற ரியல் எஸ்டேட் சார்ந்த திட்டங்களை எப்போதும் கத்தி முனையில் நடக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கவேண்டும். இதில், முதலீட்டு நஷ்டம் என்பது அதிகமாக இருக்கும். ஆனால், இது போன்ற போலீஸ் வழக்கு வந்தால்தான் வெளியில் தெரியும் என்ற நிலை உள்ளது.
இதுபோன்ற மாற்றுவழி முதலீட்டுத் திட்டங்களை முதலீட்டாளர்கள் எப்படி அணுக வேண்டும்?
பொதுவாக, முதலீட்டாளர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம், தங்களால் புரிந்து கொள்ள முடிந்த முதலீடுகளில் மட்டும்தான் முதலீடு செய்யவேண்டும் என்ற அடிப்படை விதிமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும்.
மாற்று வழி முதலீட்டுத் திட்டங்களில் பல சூட்சுமங்கள் ஒளிந்திருக்கும். என்னதான் ஆலோசகர்கள் அந்தத் திட்டத்தைப் பற்றி  எடுத்துச்சொன்னாலும், தாங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்கிறோம் என்பதை முதலீட்டாளர்கள் நன்கு உணர்ந்து,  மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
எந்த முதலீட்டுத் திட்டமாக இருந்தாலும், அதிக வருமானம் கிடைத்தால் எல்லோருக்கும் சந்தோஷம்தான். ஆனால், அதிக வருமானம் கிடைக்கக் கூடுதல் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதுதான் முக்கிய படிப்பினை.
முதலீட்டு உலகில் இருக்கும் ஓர் அடிப்படையான விதிமுறை, அதிக ரிஸ்க் எடுத்தால், அதிக ரிட்டர்ன் கிடைக்கும் என்பதே. அதாவது, அதிக வருமானம் வேண்டுமானால் அதிக ரிஸ்க் எடுக்கவேண்டும் என்பதுதான். அந்த அடிப்படையில், மாற்று வழி முதலீட்டுத் திட்டங்கள் என்பது அதிக வருமானம் கொடுக்கும் அதிக ரிஸ்க் கொண்ட திட்டங்கள் என்பதால், முதலீட்டாளர்கள் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும். அது தொடர்பான விஷயங்களை நன்கு கேட்டு, ஒப்பந்தத்தைப் படித்துத் தெரிந்து கொண்டபின்பே அவற்றில் ஈடுபடுவது நல்லது.

%d bloggers like this: