முதன்முதலாக உடற்பயிற்சியைத் தொடங்குகிறீர்களா?- பிசியோதெரபிஸ்ட் வழிகாட்டல்

உடற்பயிற்சியை எப்போதுமே ஒரே மாதிரியாகச் செய்ய வேண்டும். 40 வயதில் அதிகமாக உடற்பயிற்சி செய்யலாம். அதே வேக உடற்பயிற்சி 60 வயதில் செய்ய முடியாது. அதனால், எப்போதும் சீரான உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

முதன்முதலாக உடற்பயிற்சியைத் தொடங்குகிறீர்களா?- பிசியோதெரபிஸ்ட் வழிகாட்டல் #LifeStartsAt40 #நலம்நல்லது

40 வயது தொடங்கியதும் உடல்மீதான அக்கறை தானாகவே வந்துவிடும். உடற்பயிற்சி, யோகா, தியானம் எனத் திட்டமிட்டு பயிற்சி பெறுவார்கள். ஆனால் `அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’தான் என்பதுபோல முறையில்லாத உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் உடலில் பிரச்னையை ஏற்படுத்தும். அதனால் 40 வயதைக் கடந்தவர்களுக்கான உடற்பயிற்சி குறித்து ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் ஹேமாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். விரிவாக அது குறித்து பேசினார்.

வாக்கிங்

அதிகாலை நடைப்பயிற்சிக்கும், மாலை நடைப்பயிற்சிக்கும் என்ன வித்தியாசம், எது சிறந்தது?

“காலை நேரத்தில் எப்போதுமே உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் அதிகாலை வேளை என்றால் காற்று சுத்தமாக இருக்கும் என்பதால் காலைநேர நடைப்பயிற்சி நல்லது. இயற்கையை நேசித்து நடைப்பயிற்சியை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்காக மாலை வேளையில் நடைப்பயிற்சி வேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. நாள் முழுவதும் வேலை இருக்கிறது என்பவர்கள் மாலையில் நடைப்பயிற்சி செய்யலாம். இதில் தவறு ஏதும் இல்லை. உடலுக்கு நடைப்பயிற்சிதான் முக்கியமே தவிர, காலை, மாலை வேளை என்பதல்ல”.

திடீரென்று நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா? செய்யலாம் என்றால் எவ்வளவு தூரம் நடக்கலாம்?

“இதுவரை அதிகதூரம் நடக்காதவர்கள், திடீரென நடைப்பயிற்சி மேற்கொண்டால் சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும், அவரது உடல் நடைப்பயிற்சிக்குத் தயாராகவும் இருக்காது. எனவே, முதலில் தொடங்கும்போது ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தொடங்கலாம். ஒரு வாரம் தொடர்ந்து இப்படிச் செய்யலாம். அதன்பிறகு அது ஒரு தூரமாகவே தெரியாது. அடுத்த வாரமே இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்கலாம். இப்படிப் படிப்படியாக நடைப்பயிற்சியை அதிகரிக்கலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடப்பது அவர்களது உடலுக்கு நன்மை தரும்”.

உடற்பயிற்சி

40 வயதுக்கு மேல் உடற்பயிற்சி செய்யலாமா?

“உடற்பயிற்சிக்கு வயது ஒரு தடையில்லை. ஆனால் திடீரென்று 40 வயதில் ஆரம்பிக்கும்போது உடல் ஒத்துழைக்கும் அளவுக்கு மட்டுமே பயிற்சிகளைச் செய்யவேண்டும். ஏதாவது குறிப்பிட்ட பயிற்சியின்போது உடல்வலி ஏற்பட்டால் பயிற்சியை நிறுத்திக்கொள்வது அல்லது மாற்றிக்கொள்வது நல்லது. மேலும் அடிக்கடி உடல்வலி ஏற்பட்டால் பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவரை அணுகலாம்”.

உடற்பயிற்சிக்கும் உணவுப் பழக்கத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

“நிச்சயமாகத் தொடர்பு இருக்கிறது. உடற்பயிற்சி செய்து 500 கலோரிகளை இறக்கிவிட்டு, உடனே பிரெட், பர்கர் போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. உடலிலிருந்து கலோரிகளை எரித்தபிறகு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையும் சரியாக இருக்கவேண்டும். இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே உடற்பயிற்சி பலன் தரும். நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடற்பயிற்சி செய்தால் போதும். உடலை வருத்திக்கொண்டு உடற்பயிற்சி செய்யக் கூடாது”.

கொஞ்சம் வயதானதும் மொசைக் தரையில் நடக்கக் கூடாது, வெயிட்டை தூக்கக் கூடாது என்று சொல்கிறார்களே, அது சரியா?

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எந்த வயதிலும் நடக்கலாம். நம் முன்னோர் 60 வயதிலும் ஓடி ஆடி வேலை செய்தவர்கள்தானே. அதனால் கூடாது என்பதே இங்கு கிடையாது. என்னிடம் ஆலோசனைகேட்டு வருபவர்கள் எல்லோரும் 50 வயதைக் கடந்தவர்கள்தான். அவர்களுக்கு நான் சொல்வது, `எதையுமே முடியாது என்று நினைக்காதீர்கள்’ என்பதே. நீங்கள் சொல்வதுபோல இதுபோன்று உலவும் கருத்துகள் எல்லாமே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டவைதான்”.

உட்கார்ந்த நிலையில் வேலை

உட்கார்ந்துகொண்டே வேலை செய்பவர்களுக்கு வரும் பிரச்னைகள் குறித்து நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

“ஐ.டி துறைகளில் வேலை செய்பவர்கள் அமர்ந்துகொண்டே வேலை செய்வதால், அவர்களுக்கு உடல்ரீதியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அவர்கள் சைக்ளிங், உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவேண்டும். மேலும், அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து, முன்னெச்சரிக்கையாக உடலைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்”.

ஜிம்

40 வயதுக்கு மேல் ஜிம்முக்குப் போகலாம் என நினைப்பவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

“40 வயதைத்தாண்டி ஜிம்முக்குப் போக நினைப்பவர்கள், உடனே உடலைக் குறைக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். உடற்பயிற்சியை எப்போதுமே ஒரே மாதிரியாகச் செய்யவேண்டும். 40 வயதில் அதிகமாக உடற்பயிற்சி செய்யலாம். ஆனால், அதே வேகத்தில் 60 வயதில்  உடற்பயிற்சி செய்யமுடியாது. அதனால், எப்போதும் சீரான உடற்பயிற்சி மேற்கொள்வதே நல்லது. அதுமட்டுமல்ல, சரியான ஜிம்மைத் தேர்ந்தெடுத்து, சரியான பயிற்சியாளரை தேர்வு செய்யவேண்டியது அவசியம்” என்கிறார்.

%d bloggers like this: