டி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன?

டி.டி.வி. தினகரன் கட்சியிலிருந்து தொடர்ந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறிவருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மிகப் பெரிய சக்தியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட டி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன?

தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.கவில் இணைந்த அதிர்ச்சி நீங்கும் முன்பாகவே, ஒரே நாளில் இருவர் தினகரனின் பக்கமிருந்து அ.தி.மு.கவில் மீண்டும் இணைந்துள்ளனர். அமமுகவின் அமைப்புச் செயலாளரும் தென்காசியைச் சேர்ந்தவருமான இசக்கி சுப்பைய்யா செவ்வாய்க்கிழமையன்று காலையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அ.தி.மு.கவில் இணைவதாக அறிவித்தார். அன்று மாலையே, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தபடியே தினகரனுக்கு ஆதரவளித்துவந்த ரத்தினசபாபதி, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியைச் சந்தித்து அ.தி.மு.க. பக்கம் இருப்பதை உறுதிசெய்திருக்கிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் படுதோல்வியைச் சந்தித்ததிலிருந்து அக்கட்சியின் பிரமுகர்கள் வெளியேறுவது தொடர்ந்து நடந்துவருகிறது.

டிடிவி தினகரன் தனி அணியாக இயங்க ஆரம்பித்தபோது சுமார் 30க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற பேச்சு அடிபட்டது. டி.டி.வி. தினகரனும் சசிகலாவும் அ.தி.மு.கவின் விவகாரங்களிலிருந்து ஒதுக்கிவைக்கப்படுவதாக ஆளும் அ.தி.மு.க. அறிவித்தபோது, ஆளும்கட்சியைச் சேர்ந்த 33 சட்டமன்ற உறுப்பினர்கள் அடையாறில் உள்ள தினகரன் இல்லத்திற்கு வந்து அவரைச் சந்தித்துச் சென்றனர்.
ஆனால் வெளிப்படையாக ஆதரவைத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்தபோது 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே முன்வந்தனர். அந்தத் தருணத்தில், அ.தி.மு.கவிற்குள் தனக்கு ‘ஸ்லீப்பர் செல்கள்’ நிறையப் பேர் இருப்பதாக தினகரன் தெரிவித்துவந்தார். அவர்கள் நேரம் வரும்போது வெளிப்படுவார்கள் என்றும்கூறி வந்தார்.

இந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து முதல்வரை மாற்றும்படி மனு அளித்த பிறகு, அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். உடனடியாக, தினகரன் பக்கம் இருந்த எஸ்.டி.கே. ஜக்கைய்யன் சபாநாயகரைச் சந்தித்து, முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பக்கமே தான் இருப்பதாக உறுதியளித்தார். இதனால், 18 சட்டமன்ற உறுப்பினர்களே தினகரன் பக்கம் இருந்துவந்தனர். இந்த 18 பேரில் 2 பேர் இப்போது வெளியேறியிருக்கின்றனர்.

தினகரனின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன?
2011ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் அவர் உயிரோடு இருக்கும்வரை மீண்டும் கட்சிக்குள் வர முடியவில்லை. அவர் மறைந்த பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா தண்டிக்கப்பட்ட நிலையில், சிறைக்கு செல்வதற்கு முன்பாக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அவசர அவசரமாக கட்சியில் சேர்க்கப்பட்டார் தினகரன்.

ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார் டிடிவி தினகரன். இது குறித்து முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடமோ, மற்ற முக்கியத் தலைவர்களுடனோ அவர் விவாதிக்கவில்லையெனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்தத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

இதற்குப் பிறகு டி.டி.வி. தினகரன் வீட்டில் நடந்த கூட்டத்தில், தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட தினகரன் முடிவெடுத்தது குறித்து அமைச்சர்கள் சிலர் கேள்வியெழுப்பியதையடுத்து பிரச்சனை வெடித்தது. தினகரனும் சசிகலாவும் ஒதுக்கிவைக்கப்படுவதாக அமைச்சர்கள் வெளிப்படையாக அறிவித்தனர். இதுதான் தினகரனுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு. சசிகலாவும் சிறையில் இருந்த நிலையில், அ.தி.மு.க. அந்தத் தருணத்திலேயே கிட்டத்தட்ட அவர் கையைவிட்டுப் போய்விட்டது.
இருந்தபோதும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அதில் கிடைத்த வெற்றி அந்தத் தரப்பைச் சேர்ந்த பலருக்கும் நம்பிக்கை அளித்தது.

அந்த இடைத்தேர்தலில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றிபெற்றார். தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்குப் பிறகு சுயேச்சை ஒருவர் வெற்றிபெற்ற தருணமாகவும் அமைந்தது. தினகரனுக்குக் கிடைத்த வாக்கு வித்தியாசம், ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட சுமார் 1100 வாக்குகள் அதிகம். தினகரன் பெற்ற வாக்குகளில் பாதி வாக்குகளையே அ.தி.மு.கவால் பெற முடிந்தது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் தொகையையே இழந்தன.

அந்தத் தேர்தலில் அ.தி.மு.கவின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.கவும் தினகரன் தரப்பும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டன.

ஆனால், இந்த உற்சாகம் வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. அ.தி.மு.க. என்ற கட்சிப் பெயரும் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புக்கு உரியவை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து தொடர் பின்னடைவுகளைச் சந்திக்க ஆரம்பித்தார் தினகரன்.

தினகரன் பக்கம் வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லுமென நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
தினகரன் தரப்பிற்குள் முரண்பாடுகள் அப்போதுதான் தலைதூக்க ஆரம்பித்தன. 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, உடனடியாக தேர்தலை சந்திப்பதையே தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பிய நிலையில் மேல் முறையீடு செய்ய விரும்பினார் தினகரன். மேல் முறையீட்டிலும் தீர்ப்பு தினகரன் தரப்பிற்கு சாதகமாக வரவில்லை.

அதேபோல, கட்சியும் சின்னமும் கையைவிட்டுப் போன பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் இயக்கத்தை ஆரம்பித்த தினகரன், அதனைக் கட்சியாகப் பதிவுசெய்திருந்தால் முன்பே சின்னத்தைப் பெற்று அதனை நன்றாக விளம்பரம் செய்திருந்திருக்கலாம். அப்படிச் செய்யாத காரணத்தால், தினகரன் அமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்களின் பெயர்கள் சுயேச்சைகளின் மத்தியில் இடம்பெற்றது. இந்தத் தேர்தலில் கட்சி அடைந்த பின்னடைவுக்கு இது முக்கியமான காரணம்.

கட்சியில் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் முக்கியத் தலைவர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் தானாகவே முடிவெடுப்பார் என்ற அதிருப்தியும் கட்சிக்குள் பலருக்கும் இருந்துவந்தது.

“டி.டி.வி. தினகரனுக்கு அரசியல் எதிர்காலம் சிறப்பானதாக இல்லையெனக் கருதுகிறேன். முழுக்க முழுக்க அவரது தான்தோன்றித்தனமான போக்குதான் இதற்குக் காரணம். எந்த முடிவையும் கட்சித் தலைவர்களைக்கேட்டு எடுக்கமாட்டார். இந்தப் போக்கே அவரது பின்னடைவுக்குக் காரணம்” என்கிறார் சமீபத்தில் டிடிவி தினகரனிடமிருந்து பிரிந்து தி.மு.கவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன்.

இதுபோன்ற பல காரணங்களால் அவருடன் சென்ற வி.பி. கலைராஜன், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பைய்யா, பாப்புலர் முத்தைய்யா, அ.தி.மு.கவிற்குள் இருந்தபடியே ஆதரவு தெரிவித்துவந்த ரத்தின சபாபதி போன்றவர்கள் இப்போது அங்கு இல்லை

செந்தில் பாலாஜி
முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த படுதோல்வி, அக்கட்சியின் தலைவர்கள் உடனடியாக வேறு முடிவுகளை எடுக்கத் தூண்டியது என்று சொல்லலாம். இந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில் தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொண்ட தினகரனுக்கு அவர் சென்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையில் தொண்டர்கள் திரண்டனர். இதனால், பல தொகுதிகளில் அ.தி.மு.கவின் வாக்குகளைப் பெருமளவில் பிரித்து, குறிப்பிடத்தகுந்த சதவீத வாக்குகளைப் பெறுவார் என கணிக்கப்பட்டது.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது தினகரன் அணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒட்டுமொத்தமாக சுமார் 5 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தனர். வெகு சில இடங்களில் மட்டுமே அவர்களால் அ.தி.மு.கவின் வெற்றிவாய்ப்பைத் தடுக்க முடிந்திருந்தது. குறிப்பாக, தினகரனுக்கு ஆதரவாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் அவர்களால் ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியவில்லை. பெரம்பூரில் அவரது கட்சி வேட்பாளர் வெற்றிவேல் வெறும் ஆறாயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

“இப்போது வெளியேறியிருப்பவர்கள் எல்லாம் முக்கியத் தலைவர்களா? அவர்களை நம்பி கட்சி இல்லை. இவர்களையெல்லாம் முக்கியத் தலைவர்கள் என ஊடகங்கள்தான் சொல்கின்றன. இவர்கள் வெளியேறுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் கிடையாது” என்கிறார் தினகரன் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கதிர்காமு.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தங்களுக்குக் கிடைத்த வரவேற்பும், பிரசாரங்களில் கூடிய கூட்டமும் ஏன் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கவில்லையென்பதை ஆலோசிப்போம் என்கிறார் கதிர்காமு. அ.ம.மு.கவின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கிறது என்கிறார் அவர்.

தற்போதைய சூழலில் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உடனடியாக இருப்பதாகத் தெரியவில்லை. 2021ல் சட்டமன்றத் தேர்தல் வரும்போது அவரது கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளே அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். “அரசியல் கட்சிகள் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அங்கிருந்து தலைவர்கள் வெளியேறுவது சகஜமானதுதான். அதைவைத்து தினகரன் பலவீனமடைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. ஆனால் பெரிய அளவில் பணத்தைச் செலவழித்து, பிரசாரம் செய்தும் மிகக் குறைந்த வாக்குகளே கிடைத்திருப்பது அவருக்கு கவலை அளிக்கும் விஷயம்தான். வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றே ஆக வேண்டிய நிலையில் இருப்பார்” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விடையும்பட்சத்தில், எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொண்டர்களையும் தலைவர்களையும் எப்படி கையாள்வார்கள் என்பதும் தினகரனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். தற்போது தினகரனை ஏற்காத பலரும்கூட, சசிகலா மீது பரிவுணர்வுடனேயே இருக்கின்றனர். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, அவர் தினகரனின் அரசியல் நடவடிக்கைகளை எப்படி அணுகுவார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அங்கீகரிப்பாரா போன்றவையும் தினகரனின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

%d bloggers like this: