Advertisements

தி.மு.க பதுங்கும் மர்மம்!

‘இந்தப் புலி அட்ராக்ட் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசகாய புலி, அசால்ட்டான புலி, அசுரப் புலி, அற்புதப் புலி, வாடாத புலி, வதங்காத புலி…’ டி.ராஜேந்தரின் குரல் ஓங்கி ஒலிக்க, திரும்பிப் பார்த்தால் வழக்கமான தன்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்டு மொபைலில் ‘புலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா யூ டியூப் வீடியோவைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார் கழுகார்.

‘‘ஓகோ… ‘பாயும் புலி… பதுங்கும் புலி’ என்று ஸ்டாலின் உறுமியிருப்பது பற்றிய செய்தியுடன் ஆரம்பிக்கப் போகிறீராக்கும்?’’ என்று நாமும் சேர்ந்து சிரிக்க, செய்திக் கச்சேரியை ஆரம்பித்தார் கழுகார்.

‘‘அவரின் கட்சியினரே அதை ரசிக்கவில்லை. ‘பாயும் நேரமெல்லாம் பதுங்கிவிட்டு, இப்போது போய் பதுங்குவது பாய்வதற்குத்தான் என்கிறார். எத்தனை காலம்தான் பதுங்கிக்கொண்டேயிருப்பது’ என்று கேட்கிறார்கள் அவர்கள். ஸ்டாலின் இப்போது பதுங்குவது பாய்வதற்கில்லை. உண்மையில் அவர் பதுங்கும் நிலையில்தான் இருக்கிறார் என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் அ.தி.மு.க தரப்பில்!’’

‘‘எதற்காக அவர் பதுங்க வேண்டும்?’’

‘‘ஸ்டாலின் இப்போது பதுங்குவது எடப்பாடி அரசுமீது பாய்வதற்கல்ல. ஸ்டாலின் குடும்பத்துக்கு பி.ஜே.பி அரசு சத்தமில்லாமல் தரும் நெருக்கடிகள் காரணமாகப் பதுங்குகிறார் என்பதுதான் உண்மை. தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை மத்திய அரசுக்குப் பெரும் உறுத்தலாக இருக்கிறது. ‘அ.தி.மு.க உறுப்பினர்களைப்போல தி.மு.க உறுப்பினர்கள் நம் இழுவைக்கு வரமாட்டார்கள், பலநேரங்களில் நமக்கு குடைச்சலாக மாறுவார்கள்’ என்ற எண்ணம் பி.ஜே.பி தலைமைக்கு இருக்கிறது. அவர்களை அடக்க வேண்டுமென்றால், தி.மு.க தலைமையின் வாயை முதலில் அடைக்க வேண்டும் என்பதுதான் பி.ஜே.பி-யின் திட்டமாம்!’’

‘‘ஓகோ!’’

 

‘‘குறிப்பாக, ஸ்டாலினின் மருமகன் சபரீசனைத் தீவிரமாகக் கண்காணிக்கிறது பி.ஜே.பி தரப்பு. தி.மு.க-வுக்கு கஜானாவை நிரப்பும் நபர்களாக இருப்பது இவர் தலைமையிலான ஐவர் படைதான். அண்ணா நகர் பிரமுகர், மேற்கு மண்டல பிரமுகர், அரசர் பெயர் கொண்டவர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட இந்த ஐவர் படையின் நடவடிக்கைகளை மத்திய வருவாய் உளவுப்பிரிவு துல்லியமாகக் கண்காணித்து வருகிறது. ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் சமீபத்திய விமானப் பயணங்கள், அவருடன் பயணம் செய்த நபர்கள் குறித்தத் தகவல்களை எல்லாம் ஒரு ஃபைலாக ரெடி செய்திருக்கிறது!’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘இவர்களைத் தவிர்த்து மிக முக்கியமான ஒருவர் பற்றிய செய்திகளையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர், ஸ்டாலினின் மகள்வழி உறவுக்கார இளைஞர். கட்சிக்காக அவர் செய்த சில வேலைகள் காரணமாக அவரும் குறிவைக்கப்பட்டிருக்கிறாராம்.’’

‘‘புது விஷயம்தான்!’’

‘‘இவர்களைத் தாண்டி, தி.மு.க புள்ளிகள் சிலருக்கு வெளிநாட்டு முதலீட்டுத் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதில் முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் கில்லாடியாக இருக்கிறாராம். இவரின் கைதான் இப்போது கட்சிக்குள் ஓங்கியிருக்கிறது. இவரைப்பற்றியும் இவரின் தொழில் நிறுவனங்களில் நடைபெற்றுவரும் பணப் பரிவர்த்தனைகளைப் பற்றியும் ஒரு ரிப்போர்ட்டை மத்திய வருமான வரித் துறை கடந்த வாரம் கையில் எடுத்திருக்கிறதாம். இதனால் அந்த முன்னாள் அமைச்சரும் தற்போது திகிலடித்துப்போய்க் கிடக்கிறாராம். சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல ‘சி’க்கள் பரிமாறப்பட்ட விவகாரத் தில், இவருக்கு முக்கிய பங்கிருப்பதாக வருமானவரித் துறை மோப்பம் பிடித்து, ஆவணங்களைக்கூட கைப்பற்றி வைத்துள்ளதாக அ.தி.மு.க தரப்பில் கிசுகிசுக்கிறார்கள்!’’

‘‘இதனால்தான் ‘பதுங்கல்… பாய்ச்சல்’ கதையெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறதோ!’’

‘‘ஒருபுறம், மத்தியஅரசு மூலமாக பி.ஜே.பி நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க அரசும் தன்பங்குக்கு ஏதாவது சிக்கலை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் தி.மு.க-வுக்கு நிறையவே இருக்கிறது. தேர்தலுக்கு முன்பிருந்தே, ‘தி.மு.க தலைவர் மீதிருக்கும் பழைய வழக்குகள் விசாரிக்கப்படும்’ என்று எடப்பாடி அடிக்கடி சொல்லிவந்தார். அதற்குப் பின்னணி ஏதாவது இருக்குமோ என்று ஸ்டாலின் சந்தேகப்படுகிறாராம்.’’

 

‘‘சபாநாயகர் மீதான தீர்மானத்தை தி.மு.க கொண்டு வராததற்கான காரணம் இதுதானோ?’’

‘‘அதுதான் ஸ்டாலினே தற்போது காரணத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டாரே. ஆனால், அதற்கு முன்பாகவே, ‘இந்தத் தீர்மானம் வராது’ என்று எடப்பாடி தரப்பிலிருந்து உறுதியான குரலில் சொல்லப்பட்டது எப்படி என்பதுதான் பலருக்கும் புரியாத புதிர். ‘நம் தரப்பில் திட்டமிடும் விஷயங்கள் பலவும், ஆளும்கட்சி முகாமுக்குத் தானாகவே கசிகின்றனவா, கசியவிடப்படுகின்றனவா’ என்று தி.மு.க உயர் உடன்பிறப்புகள் மத்தியில் சூடான விவாதம் நடந்துகொண்டிருக்கிறது!’’

‘‘இந்தத் தைரியத்தில்தான், ‘10 எம்.எல்.ஏ-க்கள் முகாம் மாறினாலும் கவலையில்லை’ என்று எடப்பாடி வீராவேஷம் காட்டினாரோ?’’

‘‘அதேதான். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் எடப்பாடியின் பேச்சைக் கேட்டு, சீனியர்களே ஆடிப்போனார்களாம். ‘நம் எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் முயற்சியில் தி.மு.க-வில் சேர்ந்துவிட்ட செந்தில்பாலாஜி இறங்கியிருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. அவர் பின்னால் ஐந்தாறு எம்.எல்.ஏ-க்கள் செல்ல வும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஆனால், 10 எம்.எல்.ஏ-க்கள் போனாலும் இந்த ஆட்சியைக் காப்பாற்ற எங்களுக்குத் தெரியும்’ என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார் எடப்பாடி. இதுவும் தி.மு.க தரப்புக்கு மறைமுகமாகக் கொடுக்கும் எச்சரிக்கை சிக்னல்தான் என்கிறார்கள்.’’

“அதென்ன எச்சரிக்கை சிக்னல்?”

‘‘அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களைத் தன்பக்கம் தி.மு.க தள்ளிக்கொண்டு போனால், ஏற்கெனவே ஆளும்கட்சியின் கவனிப்பில் இருந்துவரும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் சிலரை ஆளும்கட்சி பக்கம் தள்ளிக்கொண்டுவரும் வேலைகள் முடித்து வைக்கப்பட்டுள்ளனவாம். அதாவது, ஒரு காலத்தில் விஜயகாந்தின் தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட்டார்களே… அதே பாலிஸியை எடப்பாடி கையில் எடுத்திருக்கிறார்.’’

‘‘ஜெயலலிதா பாணி என்று சொல்லும்?’’

‘‘அதேதான். ஜெயலலிதா பாணியிலேயே எம்.எல்.ஏ-க்களுக்குச் சில உத்தரவுகளையும் கொடுத் திருக்கிறாராம் எடப்பாடி. ‘மானியக்கோரிக்கை நடைபெறும் நாள்களில் உறுப்பினர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது, சபை நடக்கும்போது கூட்டமாக எழுந்து போகக்கூடாது, வார இறுதியில் வெள்ளிக் கிழமை சபை முடியும் வரை அனைத்து உறுப் பினர்களும் இருக்கவேண்டும்’ என்று வரிசை கட்டுகின்றன அந்தக் கறார் உத்தரவுகள்!’’

‘‘இதே அதிரடியை ராஜ்யசபா வேட்பாளர்கள் தேர்விலும் காட்டுவாரா எடப்பாடி?’’

‘‘ம்ஹூம்… இதைப் பொறுத்தவரை சமாதானப் படலம்தானாம். ஓ.பி.எஸ்-ஸுக்கு ஒன்று, தனக்கு ஒன்று என்பதில் எடப்பாடி தெளிவாக இருக்கிறார். ஓ.பி.எஸ் தரப்பில் நத்தம் விஸ்வநாதன் பெயர் முதலில் இருக்கிறது. முன்னாள் எம்.பி-யான டாக்டர் மைத்ரேயன், சீட் எதிர்பார்க்கிறார். இவர், ஏற்கெனவே ஓ.பி.எஸ் அணியில் இருந்தவர். தற்போது, எந்த அணியிலும் இல்லாமல் மதில்மேல் பூனையாக இருக்கிறார். இவரை டெல்லிக்கு அனுப்பினால், பி.ஜே.பி-யிடம் லாபி செய்ய வசதியாக இருக்கும் என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவருமே நினைக்கிறார்களாம். இதைத் தவிர, கோகுல இந்திரா, அன்வர்ராஜா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனை யில் இருக்கின்றன. தம்பிதுரையை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அனுப்பிவைக்கவும் ஏற்பாடு நடக்கிறது.’’

‘‘தி.மு.க முந்திவிட்டதே?’’

“சட்டத்துறையைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, வில்சன் இருவரின் பெயர்கள்தான் ஸ்டாலினின் பரிசீலனையில் இருந்தன. கொளத்தூர் தொகுதி பொறுப்பாளராக இருந்து தன்னை வெற்றிபெற வைத்தவர் என்பதால் கடந்த முறையே தொ.மு.ச அமைப்பைச் சேர்ந்த சண்முகத்தை சிபாரிசு செய்தார் ஸ்டாலின். அப்போது டி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாய்ப் புக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. இப்போது அதை நிறைவேற்றியிருக்கிறார் ஸ்டாலின்!’’

‘‘வில்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?’’

‘‘தி.மு.க சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகளைக் கையாண்டு வெற்றிகண்டவர் வில்சன். கருணாநிதியே, வில்சன் நமக்கு ‘வின்’சன் என்று சிலாகித்துச் சொல்லும் அளவுக்குக் கட்சிக்குள் ஊடுருவியிருப்பவர். கருணாநிதி மறைந்தபோது சட்டப்போராட்டம் நடத்தி, மெரினா கடற்கரை யில் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்ததும் இவரே. சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் ஆதரவளித்த சிறுபான்மையினர் சமூகத்துக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையிலும் வில்சனுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்!’’

‘‘புது டி.ஜி.பி., புது தலைமைச் செயலாளர் பற்றியெல்லாம் சங்கதிகள் இருக்கிறதுதானே?’’

‘‘சுவாரஸ்யமான குழப்ப சங்கதிகூட இருக்கிறது. புதிய டி.ஜி.பி நியமனத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் யு.பி.எஸ்.சி ஒரு பட்டியலை அனுப்பும். அதிலிருந்து ஒருவரை டி.ஜி.பி-யாக மாநில அரசு நியமித்துக்கொள்ளலாம். அதற்கான கடிதத்தை எதிர்பார்த்து தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட அனைவரும் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனர். சீலிட்ட கவர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை டெல்லி யிலிருந்து வந்தது. பிரித்துப் பார்த்தால், உள்ளே பஞ்சாப் மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல். குழம்பிவிட்டார் மார்டி. இந்தத் தகவல் டி.ஜி.பி ஆபீஸுக்கும் பரவ… எல்லோரும் டென்ஷன் ஆகிவிட்டார்கள்!’’

‘‘அப்புறம் என்னாச்சு?’’

‘‘மீண்டும் கவரை உற்று நோக்கிய போதுதான், அது மாநிலம் மாறி வந்த விஷயம் தெரிந்திருக்கிறது. கடந்த பிப்ரவரியில், பஞ்சாப்பில் யாரை டி.ஜி.பி-யாக நியமிப்பது என்பது தொடர்பாக நடந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட தகவல்கள் அடங்கிய மினிட்ஸ் விவரங்கள் அந்தக் கவரில் இருந்திருக்கின்றன. டெல்லி யு.பி.எஸ்.சி அலுவலக உயர் அதிகாரிகளுடன் மார்டி பேசியபின்பே தவற்றை உணர்ந்து தமிழகத்துக்கான பட்டியல் அடங்கிய கவரை மீண்டும் அனுப்பினார்களாம். கவர் மாறிய விஷயத்துக்காக யு.பி.எஸ்.சி அலுவல கப் பணியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.’’

‘‘அதுதான், சோஷியல் மீடியாக்களில் யூகங்கள் வரிசை கட்டினவோ!’’

‘‘பஞ்சாப் ஐ.பி.எஸ் அதிகாரி பெயரை மையப்படுத்தித் தமிழக போலீஸ் அதிகாரிகள் மத்தியில், ‘யார் அந்த பஞ்சாபிவாலா?’ என்று வாட்ஸ்அப் குரூப்களில் தாறுமாறாகத் தகவல் போட ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டாவதாக வந்த கவரில்தான் திரிபாதி பெயர் இருந்திருக்கிறது. இவரை நியமிப்பது குறித்து ஏதோ ஸ்பெஷல் தகவல் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மூலமாக முதல்வர் எடப்பாடிக்கு வந்ததாம். அதையடுத்துதான், புதிய டி.ஜி.பி-யாக திரிபாதி நியமிக்கப்பட்டாராம்.’’

‘‘ஜாபர் சேட்?’’

‘‘யு.பி.எஸ்.சி-யிடமிருந்து வந்த லிஸ்ட்டிலேயே அவர் பெயர் இல்லையாம். எடப்பாடிக்கு இதில் வருத்தம்தான். பி.ஜே.பி அரசு அவரை ஏற்கவில்லை என்பதால், ஜாபர் சேட்டின் திறமையையும் அனுபவத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேறு ஐடியா வைத்திருக்கிறாராம் எடப்பாடி. மாநில உளவுத்துறை டி.ஜி.பி-யாக விரைவில் பணிமாறுதல் செய்ய இருக்கிறாராம். டி.கே.ராஜேந்திரன், முதல் வரின் ஆலோசகர் (காவல் துறை) என்கிற பணியில் நியமிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்!’’

‘‘புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் தேர்வானது எப்படி?’’

‘‘ரேஸில் இருந்தவர்களில் டெல்லி யின் ஆசி, ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்குத் தான். கவர்னரின் முதன்மைச் செயலாளர் ராஜகோபாலும் முன்னிலையில்தான் இருந்தார். க்ளைமாக்ஸில், ராஜகோபாலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள், வர்மா வுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் என சர்வீஸ் இருக்கின்றது. சண்முகத்துக்கு ஒரு வருடம் என்பதால் அவரையே நியமிக்கலாம் என்று முடிவெடுத்து, மற்ற இருவரையும் சமாதானப் படுத்திவிட்டாராம் முதல்வர்.’’

‘‘சண்முகம்மீது எடப்பாடிக்கு என்ன பரிவு?’’

‘‘தேர்தலுக்கு முன் அறிவிக்கப்பட்ட பொங்கல் பண்டிகைப் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாயை மக்களுக்கு அதிவிரைவாக வழங்கிட சண்முகம் எடுத்த நடவடிக்கை முதல்வர் எடப்பாடிக்கு பிடித்துப்போனதாம். ஒன்பது ஆண்டுகளாக நிதித்துறை செயலாளர் என்கிற ஒரே பதவியில் இருந்த அவர், ஏழைகளுக்கு உதவும் திட்டத்துக்காக எந்த ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நேரில் வந்து பேசினால், உடனே நிதி தர ஏற்பாடு செய்வாராம். நிதி நெருக்கடியில் தவிக்கும் சில மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்-கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாத ஆரம்பத்தில் சம்பளம் வராதாம். ஓரிரு நாள்கள் தாமதமாகத்தான் தருவார்களாம். தமிழகத்தில் பெரும்பாலும் மாதத்தின் முதல் தேதியே சம்ப ளம் தர ஏதுவாகச் சில நிதித்துறை நுணுக்கங்களைச் செயல்படுத்தி வந்தாராம் சண்முகம். இதுமாதிரி நிறைய ப்ளஸ் பாயின்டுகள் இவருக்கு உண்டு’’ என்ற கழுகார், சிறகு விரித்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: