பட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படும்; பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்த பல பெரிய திட்டங்கள் அறிவிக்கப்படும்; வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்குக் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருந்தது.

ஆனால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் அப்படிப்பட்ட அறிவிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால், இந்த பட்ஜெட் ஏமாற்றம் தரக் கூடியதாக இருப்பதாக மக்களிடம் ஒரு கருத்து உருவாகியிருக்கிறது. சில பொருளாதார நிபுணர்கள்கூட இந்த பட்ஜெட் குறித்து அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பட்ஜெட் உள்ளபடியே ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறதா அல்லது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகிற வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா என்று பார்ப்போம்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்…

நீண்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியைக்கொண்டு வருவதற்கான இலக்குகள் இந்த பட்ஜெட்டில் தெளிவாகத் தீட்டப்பட்டுள்ளன. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் (சுமார் 350 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள இலக்கு. இந்த ஆண்டே நம்முடைய பொருளாதாரம் மூன்று டிரில்லியன் (சுமார் 210 லட்சம் கோடி ரூபாய்) இலக்கினை எட்டத் தேவையான திட்டங்களை இந்த பட்ஜெட்டில் சொல்லி யிருக்கிறார் நிதி அமைச்சர்.

வளர்ச்சிக்கு உதவும் உள்கட்டமைப்பு…

நிலம் வழியாகவும், நீர் வழியாகவும், ஆகாயம் வழியாகவும் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று அறிவித்திருக்கிறார், நிதி அமைச்சர். ரயில்வே துறையை மேம்படுத்த அடுத்த 12 ஆண்டுகளுக்குள் ரூ.50 லட்சம் கோடி தேவை. ரயில்வே துறையின் வளர்ச்சிக்கான நிதியை பப்ளிக் – பிரைவேட் – பார்ட்னர்ஷிப்மூலம் திரட்ட முடிவு செய்திருப்பதுமூலம், தனியார் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்பாக அமையும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கான சாலைகளின் தரத்தினை உயர்த்த ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கிறது. உள்நாட்டு நதிகள்மூலம் சரக்கு போக்குவரத்தினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதுடன், கடல்வழிப் போக்குவரத்தை அதிகப்படுத்துகிற மாதிரி பாரத் மாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். இந்தத் திட்டங்கள் மூலம் போக்குவரத்து வசதி பெருகி, பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும்.

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்கள்

வேலைவாய்ப்பின்மை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் இந்தச் சமயத்தில், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சில வகையான பொருள்களுக்கு கலால் வரி விதிப்பதன்மூலம், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பி.வி.சி பொருள்கள், டைல்ஸ், ஆட்டோ உதிரிப்பாகங்கள், மார்பிள்கள், ஆப்டிக்கல் பைபர் கேபிள், சி.சி.டி.வி கேமரா போன்ற வற்றுக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் சில எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரியும் நீக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க விவசாயம் சார்ந்த துறையில் 75,000 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்படுவார்கள். புதிய பொருள்களை உருவாக்க உதவும் 80 பிசினஸ் இன்குபேட்டர்களும், 20 தொழில்நுட்ப இன்குபேட்டர்களும் தொடங்கப்படும். அரசின் இந்தத் திட்டங்களால் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்புகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உருவாகும்.

வங்கிகளும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும்

வாராக் கடன் சிக்கலினால் வங்கிகள் புதிதாகக் கடன் தரமுடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றன. வங்கிகள் இன்னும் அதிக அளவில் கடன் தருவதற்குப் புதிய முதலீடு தேவை என்பதால், ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்து தந்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். இதன்மூலம் புதிய கடன்கள் தரப்பட்டு, பல புதிய தொழில்கள் தொடங்கப்படலாம். பொதுத் துறை வங்கிகள் பலப்படுத்தப்படும் என அறிவித்திருக்கும் மத்திய நிதி அமைச்சர், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் முதலீட்டினைத் திரட்டுவதற்கான பல வழிகளையும் செய்துதந்திருக்கிறார். இதற்கான சட்டம் நிதி மசோதாவில் கொண்டுவரப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் அபாயமாக விளங்கும் வாராக் கடன் பிரச்னை இதன்மூலம் தீர்ந்து, பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

விவசாயத்துக்கு உதவும் ஜீரோ பட்ஜெட்

விவசாயத் துறை வளர்ச்சிக்கும் பல திட்டங் களை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். மதிப்புக் கூட்டல் தொழிலில் தனியார் நிறுவனங் கள் ஈடுபட ஊக்குவிக்கப்படும்; 10,000 புதிய விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டு, விவசாய விளைபொருள்களின் விற்பனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்; ஜீரோ பட்ஜெட் மூலம் விவசாய விளைபொருள் உற்பத்தி அதிகரிக்கப்படும் என விவசாய வளர்ச்சிக்கு பல திட்டங்களை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர்.

நாரி து நாராயணி

பெண்களின் முன்னேற்றத்துக்கும் இந்த பட்ஜெட்மூலம் பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார் நிதி அமைச்சர். ஜன்தன் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் ரூ.5,000 ஓவர் டிராஃப்ட் கடன் தரப்படும்; மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டி மானியம் எல்லா மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும் இனி தரப்படும்; முத்ரா திட்டத்தின்கீழ் தகுதியுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் கடன் தரப்படும் என அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.

தீர்க்கதரிசனத்துடன்கூடிய பட்ஜெட்

நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கும் இத்தனை திட்டங்களாலும், உடனடியாக வேலைவாய்ப்பு உருவாகி பொருளாதார வளர்ச்சி பெருகிவிடாது என்றாலும், நீண்ட காலத்தில் நம் நாட்டின் வளர்ச்சியினைப் பெருக்க இந்தத் திட்டங்கள் நிச்சயம் உதவவே செய்யும். அந்த வகையில் தீர்க்கதரிசனத்துடன் போடப்பட்ட பட்ஜெட் இது என்றே சொல்லலாம்.

தவிர, கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலேயே பல முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. நாடாளுமன்றத் தேர்தலை முன்நிறுத்தி அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், பல முக்கியமான திட்டங்களை அப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் முந்தைய பா.ஜ.க அரசுக்கு இருந்தது.

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஜெயிக்காமல், வேறு கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு, புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பதால், பரபரப்பான பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.

பொறுத்திருந்து பார்ப்போம், அடுத்த ஆண்டு எப்படிப்பட்ட பட்ஜெட்டினை அவர் தாக்கல் செய்கிறார் என்று!

சூட்கேஸுக்கு டாடா!

பட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்?

பொதுவாக, நிதி அமைச்சர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யவரும்போது கையில் பிரவுன் சூட்கேஸுடன்தான் வருவார்கள். மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழர் உடையான வேட்டி, சட்டையுடன் நாடாளு மன்றத்துக்கு வருவார் என்றாலும், அவரும் சூட்கேஸுடன் வந்துதான் பட்ஜெட்டினைத் தாக்கல் செய்வார்.

இந்த மரபினை முதலில் உடைத்து, வழக்கமான சூட்கேஸைக் கொண்டு வராமல், சிவப்புப் பையினைக் கொண்டு வந்திருந்தார் நிர்மலா சீதாராமன். சிவப்புப் பையைக் கொண்டுவந்ததற்கான காரணத்தை நிதி அமைச்சர் சொல்லவில்லை என்றாலும், நமது பட்ஜெட்டினை நம்முடைய கலாசாரத்துக்கேற்றபடி மாற்ற வேண்டும் என்கிற நோக்கில் அவர் இதைச் செய்திருப்பார் என்று நம்பலாம்.

%d bloggers like this: