வால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்!

வால் மிளகு என்றதும், `வால் முளைத்த மிளகாக இருக்குமோ’ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். மிளகு, வால் மிளகு இரண்டும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவைதாம். மிளகைப்போன்றே தோற்றம் கொண்ட வால் மிளகின் காயுடன் இணைந்திருக்கும் காம்பு, வால் போன்று நீண்டு காணப்படுவதால், `வால் மிளகு’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

 

சுருக்கங்களும் பள்ளங்களும்கொண்ட தேகம், சாம்பல் கலந்த காபி நிறம் முதல் கருமை வரையிலான தோலைக்கொண்டது வால் மிளகு. மணமும் எண்ணெய்ப் பசையும் வால் மிளகின் மதிப்புமிக்க சொத்து. முழுமையாக முதிராத வால் மிளகின் காய்களை உலரவைத்து, அஞ்சறைப் பெட்டிப் பொருளாகக் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்தோனேசியா இதன் தாயகமாகக் கருதப்பட்டாலும், ஜாவா பகுதியில் இது அதிக அளவில் விளைவதால், ‘ஜாவா மிளகு’ என்றும் அழைக்கப்படுகிறது. கேரளம் மற்றும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் வால் மிளகு அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

16, 17 -ம் நூற்றாண்டின்போது ரஷ்ய சமையல் அறைகளை வால் மிளகு ஆக்கிரமித்திருந்தது. அரேபியா, சீனா மற்றும் மலேசியாவில் இப்போதும் வால் மிளகு சமையலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தோனேசியர்களின் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாக வால் மிளகு விளங்குவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ‘டாங்’ சாம்ராஜ்ஜியத்தில், பசியை அதிகரிக்கும் மருந்தாகவும் உடலுக்கு நறுமணமூட்டும் பொருளாகவும் வால் மிளகு பயன்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டு மன்னர், மிளகின் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக வால் மிளகின் விற்பனையைத் தடை செய்தார் என்று 17-ம் நூற்றாண்டு வரலாறு குறிப்பிடுகிறது.

வால் மிளகில் இருக்கும் வேதிப்பொருள்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக புராஸ்டேட் புற்றுநோயைப் போக்க வால் மிளகின் சாரங்கள் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. கல்லீரலைப் பதம்பார்க்கும் வைரஸ்களை கட்டுப்பாட்டில்வைக்கும் திறனும் வால் மிளகுக்கு உண்டு. ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை நிறைந்திருப்பதால், உடலின் பல்வேறு நோய்களைத் தடுப்பதில் வால் மிளகு துணை நிற்கும். கேரீன், கேர்யோபில்லைன், சினியோல், க்யுபபீன் (போன்ற நலம் பயக்கும் வேதிப் பொருள்கள் வால் மிளகின் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகின்றன.

வால் மிளகு - நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்!

விறுவிறுப்பு கலந்த கார்ப்புச் சுவையுடன், உடலுக்குத் தேவைப்படும் வெப்பத்தைத் தரக்கூடியது இது. கோழையை அகற்றும், சிறுநீரைப் பெருக்கும், வாயுவை விரட்டும் எனப் பல்வேறு அற்புத செயல்பாடுகளைக் கொண்டது வால் மிளகு. சிறுகீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி போன்ற குளிர்ச்சித் தன்மை நிறைந்த கீரைகளை சமைக்கும்போது, வடகத்துடன் வால் மிளகுத் தூள் சேர்த்தால் அவற்றின் நற்பலன்களைப் பெறலாம். வயிற்றில் சூடு அதிகரித்து அல்லல்படும் நேரத்தில், வால் மிளகுத் தூளை இளநீரில் கலந்து பருகலாம். வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற, சமையலில் வால் மிளகைச் சேர்க்கவேண்டியது அவசியம்.

வால் மிளகைப் பசும்பாலில் ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, வெள்ளை பூசணிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற நீர்க் காய்களின் பொரியல், கூட்டு வகைகளில் தூவிச் சாப்பிடலாம். இதனால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குறைவதுடன் உடல்சூடும் தணியும். `வாத பித்த கபம், வயிற்றுவலி, தாகம்…’ எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், வால் மிளகுக்கு வாத, பித்த, கபத்தை தன்னிலைப்படுத்தும் தன்மை இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது. அதேபோல, நீர்வேட்கை, வயிற்றுவலி போன்றவற்றைக் குணமாக்கும் வன்மை இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அக்கிரகாரம், அதிமதுரம் போன்றவற்றுடன் வால் மிளகைச் சேர்த்து லேகியமாகக் கிளறி சாப்பிட்டால், தொண்டைக்கம்மல், குரல் அடைபடுதல் மறைந்து, குரல் ஒலி சீராகும். வால் மிளகுடன் லவங்கப்பட்டை சேர்த்து நீர்விட்டுக் கொதிக்கவைத்துப் பருகினால் சளி, இருமல் எட்டிப் பார்க்காது. குழந்தை பெற்ற தாய்க்கு வழங்கப்படும் பாரம்பர்ய மருந்தில் வால் மிளகையும் முக்கிய உட்கூறாகச் சேர்க்கும் வழக்கம் நிறைய கிராமங்களில் இன்றும் தொடர்கிறது. ஏப்பம், செரியாமை போன்றவற்றைப் போக்க, வால் மிளகுத் தூளுடன் சீரகம் சேர்த்து மோரில் கலந்து பருகி வரலாம். மிளகைப் போல வால் மிளகுத் தூளையும் பாலில் கலந்து குடிக்க, கப நோய்களுக்கான நோய்க் காப்பாக அமையும்.

கறிவேப்பிலைப் பொடி, லவங்கம், கடுக்காய், நெல்லிவற்றல், வால்மிளகு சேர்த்துத் தயாரித்த பல்பொடியில் பல் துலக்கினால் ஈறுவீக்கம், பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், பல் கூச்சம் மறையும். வால் மிளகைப் பொடியாக்கி மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய்நாற்றம் நீங்கும். வால் மிளகு சேர்த்துத் தயாரித்த மருத்துவ நீர், அக்காலத்தில் சிறந்த ‘மவுத்-வாஷ்’ஆக செயல்பட்டிருக்கிறது. தாம்பூலம் போடும்போது ஏலக்காய், ஜாதிக்காயுடன் வால் மிளகு சேர்த்தால் பலன்கள் பலமடங்கு பெருகும்.

வினிகரில் வால் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். இறைச்சி வகைகளை இதில் மூழ்கவைத்துச் சமைக்கும் வழக்கும் போலந்து நாட்டினரிடம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கிறது. வால் மிளகுடன் இனிப்பு சேர்த்து மிட்டாய் போன்று பயன்படுத்தும் வழக்கம் மேல்நாடுகளில் உண்டு. வால் மிளகை ஒன்றிரண்டாக இடித்து, பனைவெல்லம் சேர்த்து இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவையுடன் சாப்பிட்டால் கோழை அகலும். வால் மிளகை லேசாக வறுத்துத் தூளாக்கி, படிகார பற்பம் சேர்த்து, நெய் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மிக

விரைவில் குணமாகும். வால் மிளகு எண்ணெயுடன் சில மூலிகைப் பொருள்கள் சேர்த்து பால்வினை நோய்களுக்கான மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமையான நூல் ஒன்று, குழந்தையின்மை பிரச்னைக்கு வால் மிளகைப் பயன்படுத்தியதற்கான குறிப்பைச் சுட்டுகிறது.

முட்டையின் மஞ்சள் கருவுடன் வால் மிளகுத்தூள், லவங்கப்பட்டைத்தூள் சேர்த்து வேக வைத்துச் சாப்பிட்டால், உடல் வலுப்பெறும். வால் மிளகு எண்ணெயுடன் பறங்கிப்பட்டை, குங்கிலியம் சேர்த்து செய்த மருந்து சிறுநீரடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றைக் குணமாக்கும். சுவையின்மையின்போது, வால் மிளகுப் பொடியை தேனில் குழைத்து நாக்கில் தடவினால் மீண்டும் சுவை உணரலாம்.

கோதுமை ரவையுடன் தேன், பேரீச்சம்பழம், வால் மிளகைப் பயன்படுத்தி சுவையான சிற்றுண்டி ரகத்தை மொராக்கோ நாட்டினர் தயாரிக்கின்றனர். `ராஸ்-எல்னட்’ என்னும் உலகப் புகழ்பெற்ற மசாலா கலவையில் வால் மிளகுக்கும் இடமுண்டு. உணவுகளுக்கு நறுமணம் கொடுக்க இதன் எண்ணெய் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. வால் மிளகை பன்னீரில் அரைத்து நெற்றியில் பற்றுபோட்டால், தலைவலி உடனடியாக தணியும். வால் மிளகை நெருப்பில் சுட்டு வெளிவரும் புகையை சுவாசித்தால், இரைப்பு நோயின் தீவிரம் குறையும்.

வால் மிளகின் சாம்பல் நிறத்தைவைத்து அதன் தரத்தைக் கண்டுபிடிக்கலாம். மிளகைவிட பாதி அளவு வால் மிளகைப் பயன்படுத்தினால் போதும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் மிளகுக்குப் பதில் வால் மிளகையும் குறைந்த அளவில் சேர்க்கலாம். நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத வால் மிளகுக்கு இனியாவது முக்கியத்துவம் அளிக்கப் பழகுவோம்!

வால் மிளகு… நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்!

மருந்துப் பொடி: வால் மிளகு, சிற்றரத்தை, மிளகு, தூதுவளை, திப்பிலி, கிராம்பு, கத்திரிக்காய்… இவற்றை முறைப்படி தூய்மை செய்து பொடித்து வைத்துக்கொள்ளவும். இருமல், சளி போன்ற குறிகுணங்களால் முடங்கிக்கிடக்கும்போது, ஒரு கிராம் மருந்துப் பொடியை மிதமான வெந்நீரில் கலந்து பருக, உடலில் தங்கிய கபம் மறைந்து உடலில் துள்ளும் உற்சாகம் பிறக்கும்.

பாதாம் – வால் மிளகுப் பால்: இரண்டு கப் பாதாம் பாலை மெல்லிய தீயில் சூடேற்றி, அதனுடன் ஆறு டீஸ்பூன் அரிசி மாவைச் சேர்த்து கொழகொழப்பு பதம் வரும் வரை கலக்க வேண்டும். அதன்பிறகு தலா அரை டீஸ்பூன் வால் மிளகு, இஞ்சி, ஜாதிபத்திரி, லவங்கப்பட்டை, சிறிது குங்குமப்பூ, ஒரு டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரையை அதனுடன் கலந்து, லேசாக கொதிக்கவிட வேண்டும். இதை சாஸ் போன்று கொழகொழப்பாகவும் செய்து பயன்படுத்தலாம் அல்லது கொஞ்சம் நீர் சேர்த்தும் பருகலாம். 14-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இங்கிலாந்து ரெசிப்பியான இதைச் சுவைக்கும்போது, நாவில் நீண்டநேரம் சுவை தங்குவதோடு, செரிமானம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பே இல்லை.

செரிமானப் பொடி: தலா ஒரு டீஸ்பூன் வால் மிளகு, சீரகம், தலா அரை டீஸ்பூன் சுண்டைவற்றல், மணத்தக்காளி வற்றல், கால் டீஸ்பூன் நிலவாகைச் சூரணம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்தப் பொடியை காற்றுப் புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும். இதை சாதப் பொடியாக அவ்வப்போது நெய் அல்லது சிறிது விளக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டால் குடற் புழுக்கள் மடியும். கூடவே சோர்வடைந்த செரிமானம் எளிதாக நடைபெறும்.

பித்த லேகியம்: நன்னாரி வேர், முசுமுசுக்கை வேர், ரோஜாப்பூ, வால் மிளகு, சீரகம், நெல்லி வற்றல், ஏலக்காய், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, சிற்றரத்தை, லவங்கம், ஜாதிபத்திரி… இவை அனைத்தையும் சமஅளவு எடுத்து பொடியாக்கி அடுப்பில் ஏற்ற வேண்டும். பிறகு தேனை தனியாகவும் நெய்யைத் தனியாகவும் சேர்த்துக் கிளறி, லேகிய பக்குவத்தில் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். உணவு எதுக்களித்தல், அதிக பித்தம், வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற பிரச்னைகளுக்கு இதில் கால் டீஸ்பூன் எடுத்துச் சுவைக்கலாம். மலக்கட்டு தொந்தரவுக்கும் அற்புதப் பலன் கொடுக்கும்.

%d bloggers like this: