தீருமா சொரியாசிஸ் வேதனை

சொரியாசிஸ் நோய் குணமடைந்தாலும் தழும்பு இருக்குமா?
நோய் முழுமையாக குணமடைந்தாலும், சிலருக்கு நகங்களில் சொத்தை மாறுவதற்கு தாமதமாகலாம் அல்லது சொத்தை மாறாமல் போகலாம். நகச்சொத்தை மாற மருதாணியை மை போல் அரைத்து பூசிவர வேண்டும்.
* சொரியாசிஸ் சிகிச்சையின் போது வேறு நோய்க்கு மருந்துகள் உட்கொள்ளலாமா?

அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மருந்துகள் மற்றும் எதிர் உயிர் மருந்துகளை உட்கொள்ளும்போது சொரியாசிஸ் நோயின் நிலைமை பற்றி மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். ஏனெனில் பல எதிர் உயிர் மருந்துகள் தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி, அடங்கியிருக்கும் சொரியாசிஸ் நோயை தீவிரமடையச் செய்கின்றன.
* உள்ளே சாப்பிடும் மருந்துகள் மற்றும் வெளியே தடவும் மருந்துகள் என இரண்டு வகை மருந்துகளும் அவசியமா?
சொரியாசிஸ் குணமாக உள் மற்றும் வெளிமருந்துகள் தேவை. இரண்டையும் ஒருங்கே பயன்படுத்தும்போது முழுமையான பலன் கிடைக்கும். இல்லையென்றால் நோய் குணமாகும் காலம் அதிகரிக்கும்.
அக்குபஞ்சர், மூலிகை பற்று, மூலிகை நீராவிக்குளியல், வாழை இலை குளியல், புறஊதா கதிர்வீச்சு போன்ற முறைகளிலும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.
* சிலருக்கு சிகிச்சையின்போது மூட்டுவலி, வீக்கம் உண்டாகிறதே?

நாட்பட்ட மற்றும் தீவிர சொரியாசிஸ் நோய் உள்ளவர்களின் தோலில் செதில்கள் உதிர்ந்து தோல் ஊனமடையத் துவங்கியதும், திடீரென மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படலாம். இதுபோன்ற நிலைகளில் முழு ஓய்வும், தோல்நோய் மற்றும் மூட்டுவலி இரண்டிற்கும் சேர்த்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
சொரியாசிஸ் நோயிற்கு எந்த மருத்துவமுறையை வேண்டுமானாலும் நோயாளி தேர்வு செய்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த மருத்துவர் குறிப்பிட்ட மருந்துகளை குறிப்பிட்ட காலம் வரை சீரான முறையில் உட்கொண்டு நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது. சித்த மருத்துவம் மேற்கொள்ள விரும்புபவர்கள் நோயின் வன்மைக்கு ஏற்றவாறு வெட்பாலைத் தைலம், அருகன் தைலம், புங்க தைலம் போன்ற ஏதேனும் ஒரு தைலத்தை பூசி நோய் முற்றாமல் கட்டுப் படுத்தலாம். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் பரங்கிபட்டை சூரணம் ஒரு கிராம் காலை மற்றும் இரவு உணவுக்கு பின்பு 20 முதல் 40 நாட்கள் சாப்பிட்டு வரலாம். தோலில் அதிகமாக வெடிப்பு இருந்தால் குங்கிலிய வெண்ணைய் அல்லது அமிர்த வெண்ணையை பூசி வெடிப்புகளை கட்டுப்படுத்தலாம்.
டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ்
சித்த மருத்துவர், மதுரை
98421 67567

%d bloggers like this: