எம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்! – கொதிக்கும் சீனியர்கள்

களைப்புடன் வந்த கழுகாரிடம் ஒரு கிவி ஜூஸ் கொடுத்துவிட்டு, ‘‘ராஜ்யசபா தேர்தலில், போட்டி இல்லையென்றாலும் ஏகத்துக்கும் போட்டாபோட்டி நடக்கும் போலிருக்கிறதே?’’ என்று கேள்வியைப் போட்டோம்.

‘‘அ.தி.மு.க-வை முந்திக்கொண்டு தி.மு.க முதலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டது. வைகோவும் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டார். ஆனால், அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு என்று தகவல்கள் கசிந்ததால், மாற்று வேட்பாளராக என்.ஆர்.இளங்கோவையும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்துவிட்டார்கள்.’’

 

‘‘ஓராண்டு தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடையில்லையே?’’

‘‘சரிதான். ஆனால், ‘இந்திய இறையாண்மைக்கு எதிரானவர் என்று தண்டனை பெற்ற ஒருவர், நாடாளுமன்ற வேட்பாளருக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி எப்படி உறுதிமொழி எடுத்துக்கொள்ள முடியும்?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.’’மிஸ்டர் கழுகு

‘‘அப்படியே இருந்தாலும் ம.தி.மு.க சீட்டை எதற்காக தி.மு.க-வுக்குத் திருப்பி வழங்க வேண்டும்?’’

‘‘அதற்குத்தான் வைகோவே பதில் சொல்லி விட்டாரே… ‘அது ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட சீட் இல்லை, தனக்காகக் கொடுக்கப்பட்ட சீட்’ என்று. வைகோ போட்டியிடவில்லை என்றால், அதை தி.மு.க எடுத்துக்கொள்ளும் என்பதுதான் ஏற்கெனவே பேசிக்கொண்டது. ஆனால், ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தனக்கு மட்டும் ஒரு சீட் வாங்கியதை அவரது தொண்டர் களே ரசிக்கவில்லை. 2007-ம் ஆண்டு கால கட்டத்தில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோது இதேபோன்று ஒரு ராஜ்யசபா சீட்டை திருப்பிக் கொடுத்தார் வைகோ. இப்போதும் அதே போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், ஏற்கெனவே தி.மு.க வேட்பாளர் ரேஸில் இருந்த என்.ஆர்.இளங்கோவை ஸ்டாலின் தரப்பு வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்திருக்கிறது. கால் நூற்றாண்டுக்குப் பின், தன் தலைவனின் கம்பீரக்குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் ம.தி.மு.க தொண்டர்களுக்கு, இந்தச் சட்டச்சிக்கல் பெரும் வருத்தத்தைக் கொடுத்துள்ளது.’’

‘‘அ.தி.மு.க-வில் ஜெயலலிதா பாணியில், யாரும் எதிர்பார்க்காதவர் களை வேட்பாளர்களாக அறிவித்திருக் கிறார்களே?’’

‘‘அறிவிப்பு வேண்டுமென்றால் ஜெயலலிதா பாணியில் இருக்கலாம். ஆனால், அதற்குப் பின்னால் கட்சிக்குள் நடந்த களேபரங்களையும் கவனிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு கண்டிப்பாக வாய்ப்பு என்பதில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருமே உறுதியாக இருந்துள்ளார்கள். ஆனால், யார் வேட்பாளர் என்பதிலே குழப்பம் நீடித்திருக்கிறது. ‘எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து கட்சியில் இருக்கிறேன். இதுவரை பெரிதாக எந்த பதவியையும் நான் பெறவில்லை. எனக்கு இந்த முறை வாய்ப்புத் தாருங்கள்’ என்று தமிழ்மகன் உசேன் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக் கிறார். எடப்பாடியோ, ‘நீங்கள் பன்னீர் செல்வத்தைப் பாருங்கள்’ என்று கைகாட்டியுள்ளார். பன்னீர் தரப்போ, ‘எடப்பாடி கையில்தான் எல்லாம்’ என்று பந்தை உருட்டிவிட்டுள்ளார். கடைசியாக வேலுமணி தரப்பு வரை சென்று போராடியுள்ளார். வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் காலை வரை எல்லோருமாக உசேனை அலைக்கழித்திருக் கிறார்கள். பட்டியலில் தன் பெயர் இல்லை என்றதும் நொந்துபோய்விட்டாராம் உசேன்.’’

 

‘‘அன்வர் ராஜா முயற்சி செய்யவில்லையா?’’

‘‘அவரும் ஆரம்பத்திலிருந்தே முயற்சி செய்துவந்தார். ஆனால், கடந்த ஐந்தாண்டுகள் எம்.பி-யாக இருந்துவிட்டீர்களே என எடப்பாடி தரப்பு கட்டையைப் போட்டு விட்டதாம். முகமது ஜான் பட்டியலில் இடம்பெற்றதில் கடைசி வரை ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது. வேலூர் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிற்சாலை அதிபர்கள் சிலர் எடப்பாடியைச் சந்தித்து, ‘கட்சிக்குத் தேவையான சில உதவிகளை எங்கள் சங்கத்தின் மூலம் செய்து தருகிறோம்’ என்று வாக்குறுதி கொடுத்தார்களாம். அவர்களின் சிபாரிசுதானாம் முகமது ஜான். இந்த டீலிங், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கே கடைசி நிமிடம் வரை தெரியாது என்கிறார் கள். இதுதான் நம்பும்படியாக இல்லை.’’

‘‘பலே… பலே!’’

‘‘அ.தி.மு.க சார்பில் முனுசாமி, தம்பிதுரை, மைத்ரேயன், கோகுல இந்திரா உள்ளிட்டவர்கள் கடுமையாக முயற்சி செய்தார்கள். மைத்ரேயன் மட்டுமே கடைசி வரை தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த் திருக்கிறார். பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, முதலில் அவருக்கு ஆதரவு கொடுத்த முதல் எம்.பி மைத்ரேயன். ஆனால், அவர் பெயரை மறந்தும்கூட பன்னீர் உச்சரிக்க வில்லை என்று தெரிந்து அப்செட்டாகிவிட்டார் மைத்ரேயன். தம்பிதுரை தரப்போ, ‘கட்சியில் நான் சீனியர். எனக்கு எம்.பி வாய்ப்பு தராவிட்டால் வேறு வாய்ப்பு வேண்டும்’ என்று கண்ணைக் கசக்க, டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி தருகிறோம் என்று ‘ஆஃப்’ செய்திருக்கிறார்கள்.’’

‘‘சந்திரசேகரன் இந்தப் பட்டியலில் எப்படி இடம் பிடித்தார்?’’

‘‘பட்டியல் இன சமூகத்துக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எடப்பாடியின் முடிவு என்று சொல்லப்பட்டாலும் சேலம் மாவட்டத்தில் பல காலமாக, பலவகைகளில் எடப்பாடிக்கு மிகவும் ‘உதவி’கரமாக இருப்பவர் சந்திரசேகரன். அந்த விசுவாசத்துக்குக் கிடைத்த வாய்ப்பு இது. மேலும் கொங்கு மண்டலத்தில் கடந்த தேர்தலில், பட்டியல் இன சமூகத்தினர் தி.மு.க பக்கம் போய்விட்டனர். அதைச் சரிக்கட்ட வேண்டும் என்றால், அந்தச் சமூகத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சந்திரசேகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.’’

‘‘சீட் கிடைக்காதவர்கள் நிலை?’’

‘‘மைத்ரேயன் தன் ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். தமிழ்மகன் உசேன், தலைமை மீது உச்சகட்ட கடுப்பில் இருக்கிறார். கோகுல இந்திராவும் பயங்கர அப்செட்டில்தான் இருக்கிறாராம். எல்லாம் போகப்போகச் சரியாகிவிடும் என்று தலைமை கணக்கு போடுகிறது.’’

வேட்புமனுத் தாக்கலின்போது

வேட்புமனுத் தாக்கலின்போது

‘‘ஆனால், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை அ.தி.மு.க-வினரே முற்றுகை செய்திருக்கிறார்களே?’’

‘‘அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. தென்சென்னை வடக்கு மாவட்டச்் செயலாளர் எம்.எல்.ஏ சத்யாவுக்கு எதிராக நடந்த முற்றுகை அது. அவருடைய மாவட்டத்துக்கு உட்பட்ட 41 வட்டச் செயலாளர்களை அதிரடியாக நீக்கி யிருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோதுகூட இப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கை என்று கட்சித் தலைமையிடம் சத்யா சொன்னாலும், ஏழாயிரம் வாக்குகள் குறைவாக வாங்கிய அவர் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வட்டச்செயலாளரை மட்டும் ஏன் நீக்கவில்லை என்று கொந்தளித் திருக்கிறார்கள் நீக்கப்பட்டவர்கள். சத்யாவால் நீக்கப்பட்டவர்களில் பலர் கட்சியின் சீனியர்கள். சமீபத்தில் தி.மு.க. பக்கம் தாவிவிட்ட முன்னாள் எம்.எல்.ஏ-வான கலைராஜன் காலத்தில் பதவியில் அமர்த்தப்பட்டவர்களைப் பழிவாங்கவே சத்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்கிறார்கள்.’’

‘‘தி.மு.க-விலும் முணுமுணுப்புகள் அதிகமாகியிருக்கிறதாமே?’’

‘‘ஆமாம்… உதயநிதி பதவிக்கு வந்ததுதான் ஒரே காரணம். கட்சிக்காக சிறைக்குப் போயிருக்கிற இளைஞரணி நிர்வாகிகள் பலரும் இருக்கிறார்கள். ‘கட்சிக்காக உதயநிதி என்ன செய்திருக்கிறார்? ஏற்கெனவே அண்ணா அறிவாலயம் ஆழ்வார் பேட்டையில் செயல்படுகிறது என்ற புலம்பல் இருந்துவரும் நேரத்தில், யாரிடம் ஆலோசனை செய்து தலைவர் இந்தப் பதவியை அறிவித்தார். உதயநிதிக்குப் பதவி கொடுக்கும்போது, அழகிரி தன் குடும்பத்துக்குப் பதவி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது’ என்று புகைச்சல் எழுந்திருக்கிறது.’’

வேட்புமனுத் தாக்கலின்போது

வேட்புமனுத் தாக்கலின்போது

‘‘கமல் கட்சிக்கு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் வந்திருக்கிறாராமே?’’

‘‘கமலுக்கு நெருக்கமான கிருஷ்ண வி கிரி என்பவர் மூலம்தான் பிரசாந்த் கிஷோர் அழைத்துவரப்பட்டிருக்கிறார். கமலுக்கு அகில இந்தியத் தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தித் தருபவர்தான் இந்த கிருஷ்ண வி கிரி. அவரே கமலிடம் கிஷோரை அறிமுகம் செய்திருக்கிறார். இரண்டு நாள் ஆலோசனையில் கட்சியின் கட்டமைப்பில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று கிஷோர் சொல்லியிருக் கிறார். ஒரு லட்சம் நபர்களைக் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலில் கொண்டுவரும் திட்டமும் இருக்கிறதாம். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே கிஷோர் ஆரம்பித்திருக்கிறார்.’’

“அ.தி.மு.க கூட்டணியின் வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அப்செட்டில் இருக்கிறாராமே?”

“ஆமாம், ‘நான் தோற்றால், வேலூரில் அ.தி.மு.க-வே இருக்காது’ என்று நெருக்கமானவர்களிடம் கொந்தளித்திருக்கிறார். காரணம், துரைமுருகன் தரப்பும் எடப்பாடி தரப்பும் தற்போது அநியாயத்துக்கும் நெருக்கம் காட்டுவது, அவருக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளுக்கு கணிசமாகச் செலவு செய்திருக்கிறாராம் ஏ.சி.சண்முகம். இதனால்தான் மனிதர் கடும் அப்செட்டில் இருக்கிறார்!” என்ற கழுகார், ‘‘திகிலான முகிலன் கதை… உம் நிருபர் குழுவின் அலசல் அருமை’’ என்று நம்மைத் தட்டிக்கொடுத்துவிட்டு, “வரும் ஜூலை 23-ம் தேதி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், அத்தி வரதரைத் தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வருகிறார்களாம்” என்று சொல்லிவிட்டு சிறகுகளை விரித்தார்.

‘மறுபடியும் முதல்ல இருந்தா…!’

ஆவின் பால் ஒப்பந்ததாரராக இருந்து மோசடியில் சிக்கியவர் வைத்தியநாதன். சில ஆண்டுகளாக ஆவின் நிர்வாகத்தில் எந்தத் தலையீடும் செய்யாமல் இருந்தவர், இப்போது மீண்டும் களத்துக்கு வரத் துடிக்கிறாராம். ஆவின் நிறுவனம் சமீபகாலமாக லாபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தத் துறையின் கோட்டைப் பிரமுகரைச் சந்தித்து மீண்டும் தனக்கு ஆவினில் ஒப்பந்தம் வேண்டும் என வைத்தியநாதன் நிர்பந்தம் கொடுத்திருக்கிறாராம். கோட்டைப் பிரமுகர் ஆவின் நிர்வாகத்திடம், ‘வைத்தியநாதனுக்கு கான்ட்ராக்ட் கொடுங்கள்’ என்று தினமும் பிரஷர் கொடுக்கிறாராம். ஆனால், ‘குற்றச்சாட்டில் சிக்கியவருக்கு மீண்டும் ஒப்பந்தம் கொடுக்க முடியாது. என்னை மாற்றிவிட்டு நீங்கள் வேறு அதிகாரியை வைத்து ஆர்டர் போட்டுக்கொள்ளுங்கள்’ என்று கறாராக ஆவினில் சொல்லிவிட்டார்களாம்.

அங்கே சின்னம்மா… இங்கே சின்னவர்!

தி.மு.க இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூலை 6-ம் தேதி இளைஞரணி கூட்டம் அன்பகத்தில் நடைபெற்றது. இதில் இளைஞரணி துணைச்செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இனிமே நம்ம செயலாளரை சின்னவர்னுதான் எல்லோரும் அழைக்கணும்’ என்று அன்புக் கட்டளையிட, ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறார்கள் நிர்வாகிகள். இறுதியாகப் பேசிய உதயநிதி, “இந்த சின்னவன்தான் உங்க எல்லோரையும் பெரியவங்களா ஆக்கப்போறேன். உங்க ஒவ்வொருத்தரையும் பெரிய இடத்துல உட்கார வைக்குறதுதான் என்னோட ஆசை. விரைவிலேயே தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் போகவும் திட்டம் வெச்சிருக்கேன். நீங்களும் தயாரா இருங்க” என்று பேசியிருக்கிறார்.

%d bloggers like this: