தொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா?!

தொலைநிலைக்கல்வியில் இரண்டு வகை உண்டு. ப்ளஸ் டூ முடித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்லமுடியாமல் பல்கலைக்கழகங்களின் தொலைநிலைக் கல்விமுறையில் சேர்ந்து படிப்பது; ப்ளஸ் டூ தேர்ச்சிபெறாமல் திறந்தநிலை கல்விமுறையில் நேரடியாகப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிப்பது.

குடும்பச்சூழல் காரணமாக தினமும் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயில முடியாத மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்டது, தொலைநிலைக் கல்வி. ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லவியலாத மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் பட்டதாரிகளாகமுடியும். வேறு பணிகளைச்

செய்துகொண்டே, சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் மட்டும் பங்கேற்று பட்டம் பெற்றுவிடமுடியும். இந்தத் தொலைநிலைக்கல்வித் திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உண்டு. இதற்கென ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தொலைநிலைக் கல்வி இயக்ககங்களும் செயல்படுகின்றன.

பல ஆயிரம் பேர் தொலைநிலைக் கல்விமுறையில் படித்து பட்டம் பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளார்கள். பணி உயர்வும் பெற்றுள்ளார்கள். இதற்கிடையில், பட்டதாரியாக வேண்டும் என்ற கனவு இருந்தும் குடும்பச்சூழலால் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாதவர்களுக்காக திறந்தநிலைக் கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ‘ஓபன் யுனிவர்சிட்டி சிஸ்டம்’ எனப்படும் இந்தக் கல்விமுறை, கல்வி வாய்ப்பு கிடைக்காத பல்லாயிரம் இளைஞர்களின் பட்டதாரி கனவை நிறைவேற்றியது. இந்தக் கல்விமுறையும் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கொண்டுவரப்பட்டது. இதற்கெனத் தனியாக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் உருவாக்கப்பட்டது. கிராமப்புறங்களைச் சேர்ந்த பல ஆயிரம்பேர் இந்தக் கல்விமுறையில் படித்துப் பட்டம் பெற்றார்கள்.

இச்சூழலில், ‘கல்லூரிக்குச் சென்று பட்டம் பெறுபவர்களின் உரிமையையும் வேலை வாய்ப்புகளையும் பகுதிநேரமாக தொலைநிலைக் கல்வியில் படிப்பவர்களும், அடிப்படைக் கல்வித்தகுதி இல்லாமல் திறந்தநிலைக் கல்விமுறையில் படிப்பவர்களும் பெற்றுவிடுகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. இது தொடர்பாக வழக்குகளும் தொடுக்கப்பட்டன. தொலைநிலைக் கல்வியில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும், பெயருக்குத் தேர்வு எழுதி பட்டத்தைப் பெற்றுவிடுவதாகவும்கூட குற்றம்சாட்டப்பட்டது. ஆறு அல்லது ஏழாம் வகுப்புப் படித்தவர்கள்கூட திறந்தநிலைக் கல்விமுறையில் பட்டம்பெற்று அரசு வேலைவாய்ப்புகளையும் பணி உயர்வையும் பெறுவதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து தொலைநிலைக்கல்வி மற்றும் திறந்தநிலைக் கல்வியில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இந்தக் கேள்வியை கல்வியாளர் ஆர்.ராஜராஜன் முன் வைத்தோம்.

“தொலைநிலைக்கல்வியில் இரண்டுவகை உண்டு. ப்ளஸ் டூ முடித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்லமுடியாமல் பல்கலைக்கழகங்களின் தொலைநிலைக் கல்விமுறையில் சேர்ந்து படிப்பது; ப்ளஸ் டூ தேர்ச்சிபெறாமல் திறந்தநிலை கல்விமுறையில் நேரடியாகப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிப்பது. இந்த இரண்டு முறைகளுமே இப்போது நடைமுறையில் இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ப்ளஸ் டூ முடிக்காமல் நேரடியாகப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படித்து பட்டம் பெறலாம்.

சில வருடங்களுக்கு முன்புவரை, திறந்தநிலை கல்விமுறையில் படிப்பதும், தொலைநிலைக் கல்விமுறையில் படிப்பதும் ஒன்றாகத்தான் கருதப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை அரசுப்பணிக்கு எடுக்கக்கூடாது’ எனத் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் இதை உறுதிசெய்தது.

இதையடுத்து, ப்ளஸ்டூ முடித்துவிட்டு தொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் மட்டுமே செல்லுபடியாகும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. ப்ளஸ் டூ முடிக்காமல், திறந்தநிலைக் கல்விமுறையில் பெறும் பட்டங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே பயன்படும். இது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கும் பொருந்தும்.

பிளஸ் டூ தேர்ச்சி பெற்று தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கலைப் பட்டம் பெற்றால், பணிகளுக்குச் செல்லவும், உயர்படிப்புகளுக்குச் செல்லவும் அது பயன்படும். ப்ளஸ் டூ தேர்ச்சிபெறாத பட்சத்தில் அந்தப் பட்டத்தின் அடிப்படையில் உயர்கல்விக்குச் செல்லமுடியாது. பணியும் கோரமுடியாது” என்கிறார் ராஜராஜன்.

%d bloggers like this: