டம்மி டைம்…’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்!

பிறந்து 3-5 மாதங்கள்வரை பச்சிளம் குழந்தைகள் மல்லாந்து படுத்தநிலையிலேயே இருப்பார்கள். பிறகு இடது அல்லது வலதுபுறமாக, தாங்களே திரும்பிப் படுக்க முயன்று, குப்புறப் படுக்க ஆரம்பிப்பார்கள். முதன்முறையாக ‘குப்புத்துக்கொள்ளும்’ அந்தத் தருணத்தில் குழந்தைக்குத் தேங்காய் சுற்றி, திருஷ்டி கழிக்கும் வழக்கம் பல பகுதிகளில் உண்டு. குழந்தை குப்புறப் படுக்க சுயமுயற்சிகளை ஆரம்பிக்கும் முன்னரே, பெற்றோர்கள் அதற்கான

வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் அதற்கான பயிற்சியில் குழந்தையை ஈடுபடுத்த வேண்டும். அந்த நேரத்தை ‘டம்மி டைம்’ (Tummy Time) என அழைக்கிறோம்’’ என்கிறார் குழந்தைகள்நல மருத்துவர் கோபாலகிருஷ்ணன். டம்மி டைம் பற்றிய தகவல்களைப் பகிர்கிறார் அவர்.

டம்மி டைம்

பிறந்து ஒரு மாதமான குழந்தையிலிருந்து, குழந்தை தானே மல்லாந்து படுக்கத் தயாராகும்வரை `டம்மி டைம்’ பயிற்சியைக் கொடுக்கலாம். இந்த முறையில், குழந்தைகளை இடது அல்லது வலதுபுறமாக ஒருக்களித்துப் படுக்கவைக்க வேண்டும். சில நாள்களுக்குப் பிறகு, குழந்தைகளைக் குப்புறப் படுக்கவைக்கலாம். இதனால் கழுத்தைத் திருப்பி குழந்தை பல இடங்களைப் பார்க்கும். ஒருகட்டத்தில் கைகளைத் தரையில் ஊன்றித் தவழ முயன்று, அந்த முயற்சியில் வெற்றியும் காணும். தானே மல்லாந்து படுக்கும். தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பார்த்து மகிழும் டம்மி டைமை, குழந்தைகள் ஜாலி டைமாக உணர்வார்கள். `டம்மி டைம்’ முறையில் குழந்தையின் தலை, இடது அல்லது வலதுபுறம் திரும்பியிருக்க வேண்டும். குழந்தையின் மொத்த எடையையும் வயிற்றுப்பகுதி (Tummy) தாங்கிக்கொண்டிருக்கும் வகையில் குழந்தையைக் குப்புறப் படுக்கவைக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையால் தலையை உயர்த்தி, சுற்றிலும் பார்க்க முயலும்.

 

கவனிக்க வேண்டியவை

1. பொதுவாகக் குழந்தைகளுக்கு கல்லீரல் சற்று பெரிதாக இருக்கும் என்பதால், அவர்களின் மேல்வயிறு பெரிதாக இருக்கும். அதனால்தான் பால் குடித்ததும், குழந்தையின் வயிறு உப்பியதுபோல் தோன்றும். செரிமானமானதும், குழந்தையின் வயிறு சுருங்கிவிடும். பால் குடித்தவுடன் குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்தால் வாந்தி எடுக்க நேரிடும்; எனவே சிறிது நேரம் கழித்துத்தான் அதைச் செய்ய வேண்டும்.

2. ஒரு மாதக் குழந்தையை ஒரு நாளைக்கு இரண்டு நிமிடங்களுக்குக் குப்புறப் படுக்கவைக்கலாம். படிப்படியாக நேரத்தை அதிகரிக்கலாம். 5 – 6 மாதக் குழந்தையை ஒரு முறைக்கு 20 நிமிடங்கள் என, ஒரு நாளைக்கு 8 – 10 முறைவரை குப்புறப் படுக்கவைக்கலாம். இந்தக் காலகட்டத்தில் குழந்தை இயல்பாகவே குப்புறப் படுக்க ஆரம்பித்துவிட்டால், `டம்மி டைம்’ பயிற்சியை நிறுத்திவிடலாம்.

3. தூய்மையான துணியைத் தரையில் விரித்து, குழந்தையை அதில் படுக்கவைக்க வேண்டும். குழந்தை குப்புத்துக்கொண்ட பின்னர், அதன் தாடைக்குக் கீழே ஒரு துண்டை மடித்துவைக்க வேண்டும். இதனால், ஒருவேளை பேலன்ஸ் இல்லாமல் முகத்தைத் தரையில் கவிழ்த்துக்கொள்ள நேர்ந்தாலும் குழந்தைக்கு அடிபடாது.

4. கட்டிலில் குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்தால், பெற்றோரின் கவனம் சிறிது தவறினாலும் குழந்தை உருண்டு கீழே விழுந்துவிடும். எனவே, கட்டிலில் `டம்மி டைம்’ பயிற்சியைத் தரக் கூடாது.

5. குப்புறப் படுக்கவைப்பதோடு, குழந்தையின் கைதொடும் தொலைவில் சில பொம்மைகளை வைக்க வேண்டும். அப்போதுதான் பொம்மைகளை எடுக்க, குழந்தை தவழ முயலும்.

6. `டம்மி டைம்’ பயிற்சியின்போது குப்புறப் படுத்தேகூட சில குழந்தைகள் தூங்குவார்கள். அப்போது எழுப்பாமல் விட்டுவிடலாம்.

7. `டம்மி டைம்’ பயிற்சியின்போது குழந்தையின் அருகில் கட்டாயம் ஒருவர் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும்.

`டம்மி டைம்’ தரும் நன்மைகள்!

1. குழந்தையின் நரம்பியல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

2. குழந்தையின் கழுத்து, தோள், கை மற்றும் கால் பகுதிகளிலுள்ள தசைகள் பலமாகும்.

3. குழந்தையின் உடல் இயக்கங்கள் சீராக நடைபெறும்.

4. மல்லாந்து படுத்தநிலையிலேயே இருந்தால், குழந்தையின் தசைகள் பலம் பெறாது. மேலும், குழந்தையின் பின்பக்கத் தலைமுடியின் வளர்ச்சி குறையலாம். தலைப்பகுதியை இருபுறமும் திருப்பினால்தான், காற்றோட்டம் சீராகக் கிடைத்து, கேச வளர்ச்சி முழுமையாக இருக்கும். இதற்கு `டம்மி டைம்’ பயிற்சி உதவும்.

5. எடை குறைவு மற்றும் மற்ற சில பிரச்னைகளுடன் உள்ள குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுப்பார்கள். அப்போது புரை ஏறவும் வாய்ப்பிருக்கிறது. அத்தகைய குழந்தைகளை டம்மி டைமில் இடது அல்லது வலதுபுறமாகவோ அல்லது குப்புறவோ படுக்க வைத்தால், வாந்தி எடுத்தாலும் புரைக்கு ஏறாது.

6. பிறந்த ஆறு மாதங்களுக்குள் குழந்தை தானாகவே குப்புறப் படுக்க ஆரம்பிக்க வேண்டும். அதற்கு சுயமுயற்சி எடுக்காத குழந்தைகளுக்கு, இந்த டம்மி டைம் பயிற்சிகள் உதவும். அப்படியும் குழந்தை குப்புறப் படுக்கவில்லையெனில், அதன் வளர்ச்சியில் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, அத்தகைய நிலை ஏற்பட்டால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசிக்க வேண்டியது அவசியம்

%d bloggers like this: