அறிகுறிகள்… அலட்சியம் வேண்டாம்!

றிகுறி என்பது நோய்களை அடையாளம் காட்டும் கண்ணாடி. சில அறிகுறிகள் நோய் தாக்கவிருப்பதை முன்னறிவிப்பவை. அவற்றை உணர்ந்து செயலில் இறங்கினால், தொடக்கநிலையிலேயே குணமாக்கிவிட முடியும். நோய் பாதிப்புகளை முன்கூட்டியே அறிவிக்கும் ஏழு அறிகுறிகள் பற்றிப் பேசுகிறார் பொது மருத்துவர் விஷால்.

பசியின்மை: சாதாரண சளித் தொந்தரவில் தொடங்கி புற்றுநோய்வரை பல்வேறு நோய்களுக்கான அறிகுறி பசியின்மை. எனவே, எந்த நிலையிலும் இதை அலட்சியப்படுத்தக் கூடாது. பொதுவாக, இரைப்பையின் உட்சுவர்களில் அழற்சி (Gastritis) உண்டாவதற்கான அறிகுறியாக பசியின்மை இருக்கும். தைராய்டு, காசநோய் போன்ற பாதிப்புகளுக்கும் இது ஓர் அறிகுறி.

தாடைப் பகுதியில் வீக்கம்: காது, சருமம் ஆகியவற்றில் நோய்த்தொற்று ஏற்பட்டாலோ, சளி அதிகமானாலோ தாடை வீங்கத் தொடங்கும். தாடை எலும்புகளுக்குக் கீழும், தொண்டையின் மேற்புறத்திலும் காணப்படும் நிணநீர்க் கணுக்களின் (Lymph Nodes) வீக்கமே அந்த அறிகுறி. ஏதேனும் நோய்த்தொற்று உடலைத் தாக்க முயன்றால், அதைத் தடுக்கும் வேலைகளை இந்தக் கணுக்கள் செய்யும். இறந்த செல்களும் நோய்த்தொற்றுக்குக் காரணமான பாக்டீரியாவும் அந்தப் பகுதியில் சென்று தேங்குவதால், தாடையின் கீழ்ப்பகுதியில் வீக்கம் ஏற்படும்.

சோர்வு: கடுமையான வேலைகள் செய்தால் சோர்வு ஏற்படுவது இயல்பு. ஆனால் நாள் முழுவதும் சோர்வாக இருப்பது, சிறிய செயல்களைச் செய்தால்கூட சோர்வு ஏற்படுவது போன்றவை உடல்நிலை பாதிக்கப்படப்போவதை முன்கூட்டி உணர்த்தும் அறிகுறிகள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது, காசநோய், சர்க்கரைநோய், மன அழுத்தம் ஆகியவற்றுக்கான அறிகுறியாகவும் சோர்வு இருக்கலாம். ஓரிரு நாள்களுக்கு மேல் சோர்வு நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

தலைவலி: உயர் ரத்த அழுத்தம், மூளையில் கட்டி, மூளை ரத்தக்குழாய்களில் கசிவு போன்ற பிரச்னைகளின் தொடக்கநிலையில் தீராத தலைவலி இருக்கும். சாதாரண தலைவலி சில மணி நேரத்தில் குணமாகிவிடும். தொடர்ந்து நீடித்தால், அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

இருமல்: தொடர் இருமல் இருந்தால், நுரையீரலில் அழற்சி ஏற்படுத்தும் நிமோனியா, காசநோய் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கக்கூடும். சாதாரண இருமல் சில நாள்களில் சரியாகிவிடும். மாதக்கணக்கில் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தசைகளில் வலி அல்லது உடல்வலி: இன்ஃப்ளூயென்ஸா (Influenza) எனப்படும் சளிக் காய்ச்சல் அல்லது ஃப்ளூ காய்ச்சல் ஏற்படுவதன் பொதுவான அறிகுறி உடல்வலி. அப்போது உடல், ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும். இதனால், ‘ஹிஸ்டமைன்ஸ்’ (Histamines) என்ற கரிம நைட்ரஜன் சேர்மமும், செல் சமிக்ஞைக்கான ‘சைட்டோகைன்ஸ்’ (Cytokines) எனப்படும் புரதமும் தசைகளில் வலியை ஏற்படுத்தும். நாம் எந்தத் தசைகளை அதிகம் பயன்படுத்துகிறோமோ அந்தத் தசைகளில் காய்ச்சலின்போது வலி உணரப்படும். உதாரணமாக, கணினியில் வேலை செய்பவர்களுக்குக் கழுத்துவலி ஏற்படும். உட்கார்ந்தநிலையில் இருப்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படலாம்.

காய்ச்சல்: காய்ச்சல் என்பதும் ஓர் அறிகுறிதான். நோய்த்தொற்றை உடல் எதிர்த்துப் போராடும்போது காய்ச்சல் ஏற்படும். உடலில் நுழைந்திருக்கும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளைக் கொல்ல உடல் தொடுக்கும் யுத்தமே காய்ச்சல். சூட்டைத் தணிக்க மருந்துகள் எடுத்துக்கொள்வதைவிட, காய்ச்சலுக்கான காரணமறிந்து சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

%d bloggers like this: