Advertisements

அமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்!’ – பரபரப்பில் அ.தி.மு.க.

துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவை சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உட்பட பி.ஜே.பி.யின் ஐந்து வேட்பாளர்களும் தோல்வியடைந்ததற்கு, அ.தி.மு.க. அமைச்சர்கள் சரியாக தேர்தல் வேலை பார்க்காதது தான் காரணம் என்று, மாநில பி.ஜே.பி. நிர்வாகிகள் சிலர் அமித் ஷாவின் பார்வைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும், எந்த `ரெஸ்பான்ஸும்’ மேலிடத்தில் இருந்து இல்லை.

கடந்த ஜூலை 15ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க. எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கூறியதாகச் சொல்கிறார்கள். அதை அமைதியாக கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, “கலங்காமல் வேலையைப் பாருங்கள். உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்” என்று ஆறுதல் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அன்று மாலையே, உள்துறை அமைச்சரும், பி.ஜே.பி. தலைவருமான அமித் ஷாவை சந்தித்த முதல்வர், ஆட்சிக்கு எதிராக தி.மு.க.வினர் செய்யும் திட்டங்கள் குறித்து விவரித்துள்ளார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, “நடந்து முடிந்த தேர்தலில் உங்கள் அமைச்சர்கள் சிலர் திட்டமிட்டே பணியாற்றவில்லை. எந்த முகத்தை வைத்து எங்களிடம் உதவி கேட்கிறீர்கள்?” என்று அ.தி.மு.க. தலைமை மீதான தன் அதிருப்தியை வெளிப்படுத்தினாராம்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி, “நடந்து முடிஞ்சதை விடுங்க. நாங்க இல்லைனா, அடுத்து தி.மு.கதான் ஆட்சிக்கு வரும். நம்ம கூட்டணி நல்லவிதமாதான் போய்ட்டு இருக்கு. ஏதோ ஒரு தேர்தல் முடிவை வச்சு தீர்மானிச்சுடாதீங்க” என்று பதிலளித்ததாகச் சொல்கிறார்கள்.

 

எடப்பாடியின் டெல்லி பயணத்துக்கு முன்னதாக அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அமித் ஷாவை சந்தித்த வேளையில், தேர்தலில் தன் மகன் வெற்றி பெற்றபிறகு அமித் ஷாவையோ, பிரதமரையோ துணை முதல்வர் ஓ.பி.எஸ். தனிப்பட்ட ரீதியில் சந்தித்துப் பேசவில்லை. இந்நிலையில், நாளை (ஜூலை 22-ம் தேதி) மதியம் 12 மணிக்கு அமித் ஷாவை ஓ.பி.எஸ். சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இன்று மாலை 6:40 விமானத்திலேயே அவர் டெல்லி சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.

ரவீந்திரநாத்துக்கு கொடுத்தால் வைத்திலிங்கத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி காய் நகர்த்த, மத்திய அமைச்சர் கனவு கலைந்து போனது. அம்முயற்சியில் மீண்டும் ஈடுபட ஓ.பி.எஸ். தயாராகிவிட்டார்.

.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், “மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் பொறுப்பு வாங்கிவிட ஓ.பி.எஸ். கடுமையாக முயற்சித்தார். ரவீந்திரநாத்துக்கு கொடுத்தால் வைத்திலிங்கத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி காய் நகர்த்த, மத்திய அமைச்சர் கனவு கலைந்து போனது. அம்முயற்சியில் மீண்டும் ஈடுபட ஓ.பி.எஸ். தயாராகிவிட்டார்.

அதேவேளையில், அமைச்சர்கள் சிலர் தனக்கெதிராக கட்சிக்குள்ளேயே வேலை பார்ப்பதையும் அமித் ஷாவின் பார்வைக்கு கொண்டு செல்லப் போகிறார். விரைவில் அவர்கள் சார்ந்த பினாமி நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்படலாம். ஓ.பி.எஸ்.-ன் இந்த டெல்லி பயணத்தில், வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது” என்றனர்.

ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ். வட்டாரத்தில் விசாரித்த போது, “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான், விவரிப்பதற்கு ஒன்றுமில்லை” என்று ஒற்றைவரியில் முடித்துக் கொண்டனர். மரியாதை நிமித்தமானதா? காரிய சித்திக்கானதா? என்பது நாளை தெரிந்துவிடும்.

Advertisements
%d bloggers like this: