ஆபரேஷன் லோட்டஸ்!

சட்டசபையில் சிறப்பு செய்தி ஏதும் உண்டா?’’ – கழுகார் நுழைந்ததுமே இப்படியொரு கேள்வியை வீசினோம். இதற்காகவே காத்திருந்ததுபோல தகவல்களைக்கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.

‘‘சட்டசபையில் அ.தி.மு.க – தி.மு.க இடையே நல்ல கெமிஸ்ட்ரி உருவாகியுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. அ.தி.மு.க உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு முக்கியத்துவம் தி.மு.க உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அ.தி.மு.க அமைச்சர்களுடன் தி.மு.க உறுப்பினர்கள் சகஜமாக உரையாடுகிறார்கள். ஆனால், ஸ்டாலின் வரும்போதும் போகும்போதும் மட்டும் இந்தக் காட்சிகள் மிஸ்ஸிங்!’’

‘‘இந்த மாற்றங்களுக்கு என்ன காரணமாம்?’’

‘‘கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தி.மு.க-வினரை ஆட்சியாளர்கள் மாதந்தோறும் ‘கனிவாக’ கவனிக்கிறார்கள். தி.மு.க

எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் நடைபெறும் அனைத்துவிதமான நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. எடப்பாடி மற்றும் பன்னீர் இருவருமே தாங்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில், ‘எங்கே அந்த தி.மு.க எம்.எல்.ஏ’ என்று தேடுகிறார்கள். அவர்கள் வரும்வரை காத்திருந்து நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். நம் கண்ணை நம்மாலேயே நம்ப முடியவில்லை..’’

‘‘நீர் சொல்வது புரியவில்லையே?’’

மிஸ்டர் கழுகு: ஆபரேஷன்  லோட்டஸ்!

‘‘கடந்த சில நாள்களாகவே பி.ஜே.பி தரப்பிலிருந்து ஒரு செய்தி கசியவிடப்படுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மூவர் பி.ஜே.பி பக்கம் சாய வாய்ப்புண்டு. விரைவில் இந்த வைபவம் நடைபெறப்போகிறது என்கிற செய்தியைக் கசியவிட்டனர். குறிப்பாக, அந்த மூன்று எம்.எல்.ஏ-க்களைத் தனி அணியாக, அ.தி.மு.க தரப்புடன் இணக்கமாகச் செயல்பட வைக்கப்போகிறோம் என்றெல்லாம் செய்திகள் உலவி வந்தது. இந்த நிலையில் விஜயதாரணியை இலக்காக வைத்து இந்த செய்திக்கு உயிர் கொடுத்துவருகிறார்கள்.’’

‘‘ஆச்சர்யமாக இருக்கிறதே?’’

‘‘ ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் களம் இறங்கியுள்ளதாம். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தி.மு.க-வில் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்து, இப்போது கட்சியால் ஓரம்கட்டப்பட்ட சிலருக்கு பி.ஜே.பி தரப்பிலிருந்து தூது சென்றது. அந்தப் பணியையும் இப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘தி.மு.க-வினருக்கும் குறியா?’’

‘‘ஆமாம். தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் எம்.பி, முன்னாள் டெல்லி பிரதிநிதி, மூத்த வழக்கறிஞர் ஆகியோரிடம் போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளது

பி.ஜே.பி-யின் ஒரு டீம். ‘தலைவர்தான் உங்களை ஓரம்கட்டிவிட்டார்… இங்கு வந்தாலாவது மத்தியில் உள்ள ஏதாவது ஒரு கமிட்டியில் பொறுப்பு வாங்கிக்கொள்ளலாம் அல்லவா? அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் சீட் கிடைக்கும்’ என்றெல்லாம் கொக்கிப்போட்டுள்ளார்கள். தென் மாவட்டங்களில் கணிசமாக உள்ள கிறிஸ்துவர்களை பி.ஜே.பி பக்கம் கொண்டுவர அந்தச் சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளுக்கும் வலைவிரித்துள்ளது அந்த டீம்.’’

மிஸ்டர் கழுகு: ஆபரேஷன்  லோட்டஸ்!

‘‘ஓஹோ…’’

‘‘ஆனால், பி.ஜே.பி வலைவிரித்தாலும், அந்த தி.மு.க. புள்ளிகளிடம் இருந்து பாசிட்டிவான பதில் ஏதும் இல்லையாம். ‘மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர்களைச் சேர்க்கவே பி.ஜே.பி திண்டாடும்போது, திராவிட சித்தாந்தத்தில் ஊறிய தி.மு.க தலைவர்களை எவ்வாறு இவர்கள் இழுக்க முடியும்?’ என்று கிண்டலடிக்கிறார்கள் உடன்பிறப்புகள்!’’

‘‘அத்திவரதரைத் தரிசிக்க வந்தவர்களில், கூட்டநெரிசலில் சிக்கி நான்கு பேர் பலியாகியுள்ளனரே?’’

‘‘இந்த விஷயத்தில் அசட்டையின் உச்சத்தில் அரசுத்தரப்பு இருந்ததுதான் இதற்கு முக்கிய காரணம். தினமும் கிட்டத்தட்ட லட்சம் பேர் வருவார்கள் என்று ஆரம்பத்தில் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த நாள்களிலேயே அது தெரிந்த பிறகும் விழித்துக் கொண்டு உரிய ஏற்பாடுகளை அரசுத் தரப்பு செய்யவில்லை. எளியவர்களான பக்தர்களைக் கண்டுகொள்ளாமல் இப்படி படாதபாடுபடுத்தி உயிர்ப்பலியை ஏற்படுத்தியுள்ளனர் அரசுத் தரப்பில்.’’

‘‘ஆனால், ரவுடிகள் எல்லாம் எளிதில் தரிசிக்க முடிகிறதே?’’

‘‘மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வத்தைத்தானே சொல்கிறீர். இவரை அத்திவரதர் முன்பாக உட்கார வைத்து அத்தனை மரியாதைகளையும் செய்துள்ளனர். இது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிக்கு மரியாதை கொடுப்பவர்கள், சாமானியர்களின் உயிர் எடுக்கிறார்கள் என்று பொங்குகிறார்கள்.’’

‘‘செல்வத்துக்கு வி.வி.ஐ.பி பாஸ் வாங்கிக் கொடுத்ததே பி.ஜே.பி என்கிறார்களே?’’

‘‘ஆரம்பத்தில் அப்படித்தான் தகவல் பரவியது. இதைக் கேள்விப்பட்டு பி.ஜே.பி தரப்பில் கொந்தளித்துப் போய்விட்டார்களாம். உண்மையில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு புள்ளி, போலீஸ் அதிகாரி என இருவரும் சேர்ந்துதான் வி.வி.ஐ.பி பாஸ் வாங்கிக் கொடுத்துள்ளனர் என்கிற விவரத்தை தலைமைச் செயலகம் வரை பி.ஜே.பி தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து, தீவிர விசாரணை நடத்தச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு பறந்துள்ளது. அது உண்மைதான் என்பதும் உறுதியாகியுள்ளது. அந்த அ.தி.மு.க புள்ளி, போலீஸ் அதிகாரி இருவரும் இப்போது சிக்கலில் இருக்கிறார்கள்’’ என்ற கழுகார் சிறகடித்தார்.

%d bloggers like this: