ஓ.பி.எஸ். – அமித் ஷா… பரபர 15 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன?! பின்னணி தகவல்கள்!

எடப்பாடி தரப்பும், பன்னீர் பயணத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், பி.ஜே.பி-யிடம் அவர் மறைமுகமாக வைத்துவரும் கோரிக்கை, ஒருநாள் அம்பலத்திற்கு வரும்; அப்போது பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி கண்சிமிட்டுகிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

பன்னீர்செல்வம் - அமித் ஷாபன்னீர்செல்வம் – அமித் ஷா

“டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உள்துறை அமைச்சக அறையில்தான் அந்தச் சந்திப்பு நடந்தேறியது. 15 நிமிடங்கள் மூவரிடையே நடந்த அந்த உரையாடலுக்கும் எதிர்காலத்தில் தமிழக அரசியலில் நடக்க இருக்கும் மாற்றத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது”. ஆம்! டெல்லியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பி.ஜே.பி செயல் தலைவராக இருக்கும் ஜெ.பி.நட்டா ஆகிய மூவரின் சந்திப்பைப் பற்றி பி.ஜே.பி தரப்பில் இப்படித்தான் சொல்கிறார்கள்.

அ.தி.மு.க எம்.பி-க்கள்

அ.தி.மு.க எம்.பி-க்கள்

பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த அ.தி.மு.க தரப்புக்கு தமிழகத்தில் ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. அதுவும் பி.ஜே.பி-க்கு நெருக்கமான நபராக அறியப்படும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் தேனி தொகுதியில் வெற்றிபெற்றார். தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த பன்னீர்செல்வத்திற்கு, எதிர்பாராத திருப்பமாக முன்னாள் எம்.பி. வைத்தியலிங்கம் போர்க்கொடி தூக்க, மகனின் மந்திரி கனவு தகர்ந்துபோனது. அதேநேரம், கட்சிக்குள்ளும் இரட்டைத் தலைமை குறித்த விமர்சனங்கள் அதிகரித்தன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை நம்பர் 2-வாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் நம்பர் 2-வாகத் தொடர்கிறார். ஆனால், ஜெயலலிதா இருந்தபோது பன்னீருக்கு இருந்த பவர்கூட இப்போது எடப்பாடி அரசிடம் அவருக்கு இல்லை. நம்பர் 2 என்று சொன்னாலும்கூட, முடிவுகள் எல்லாம் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணியின் கையிலேயே இருக்கிறது. இதனால், பல மாதங்களாகக் கடும் மனநெருக்கடியில் இருந்துவருகிறார், பன்னீர்செல்வம். கட்சியின் கூட்டங்களிலும் ஆரம்பத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற அந்தஸ்தில் பன்னீருக்கு தரப்பட்ட முக்கியத்துவமும் குறைந்துவிட்டது.

பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

தேர்தலுக்கு முன்பாக வாரணாசிக்கு குடும்பத்தோடு சென்ற பன்னீர்செல்வம், அங்கு பிரதமர் மோடி மற்றும் பி.ஜே.பி தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது, பன்னீர்செல்வம் பி.ஜே.பி-யில் இணையப்போவதாகப் பரபரப்பு கிளம்பியது. அதற்கு, “அ.தி.மு.க-வின் கொடியே என் உடலில் போர்த்தப்படும்” என்று உருக்கமான அறிக்கைமூலம் பதில் அளித்தார், ஓ.பி.எஸ். தேர்தல் முடிந்து, சட்டமன்ற கூட்டத்தொடரும் நிறைவடைந்துவிட்டது. இந்த நிலையில், பன்னீர்செல்வம் நேற்று காலை டெல்லி சென்று பி.ஜே.பி தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷாவைச் சந்தித்தது தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பன்னீரின் சந்திப்புகுறித்து பல்வேறு தகவல்கள் உலவி வருகின்றன. ஆனால், பன்னீர்செல்வத்தை டெல்லியில் வரவேற்ற அ.தி.மு.க-வின் எம்.பி-க்களுக்குக்கூட, பன்னீர் சந்திப்பு குறித்த தகவல் முதல்நாள் இரவுதான் தெரிந்துள்ளது. அமித் ஷாவின் அறைக்குள் அ.தி.மு.க-வினர் யாரையும் பன்னீர்செல்வம் அழைத்துச் செல்லவில்லை. இவர் மட்டுமே உள்ளே சென்றுள்ளார். இந்தச் சந்திப்புக்கு முக்கியப் புள்ளி ஒருவர்மூலம் பன்னீர்செல்வம் அப்பாய்ன்மென்ட் கேட்டபோதே, “தனியாகச் சந்திக்க வேண்டும்” என்றே கோரிக்கை வைத்துள்ளார். “நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடப்பதால், நாடாளுமன்ற வளாகத்திலேயே இந்தச் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம்” என்று அமித் ஷா தரப்பில் சொல்லியுள்ளார்கள்.

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம்

அமித் ஷா-வுடனான சந்திப்பை கடைசிவரை ரகசியமாகவே வைத்திருக்கலாம் என்று நினைத்த பன்னீருக்கு, பி.ஜே.பி தரப்பு அதை விரும்பவில்லை என்று தெரிந்தது, அப்போதுதான். சந்திப்பு நடந்தால் ஓ.கே. என்று நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தனது மனக்குமுறலைச் சொல்லி புலம்பியுள்ளார், பன்னீர்.

“கட்சியில் எனக்கான முக்கியத்துவம் தொடர்ந்து குறைந்துகொண்டேவருகிறது. இதேநிலை தொடர்ந்தால், என்னால் எப்படி அரசியல் செய்ய முடியும் என்கிற நிலை உள்ளது. உங்களை நம்பித்தான் தர்மயுத்தம் ஆரம்பித்தேன். ஆனால், எனது மகனுக்குக்கூட மந்திரி பதவி கிடைக்கவில்லை.” என்று நேரடியாகச் சொல்லியுள்ளார். மேலும், இந்தச் சந்திப்பில் சசிகலா விடுதலைக்கு எதிராக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சசிகலா

சசிகலா

அமித் ஷா மற்றும் ஜெ.பி.நட்டா ஆகிய இருவரும் பன்னீரின் புலம்பலைக் கேட்டுக்கொண்டார்களே தவிர, எந்த உறுதிமொழியையும் அவரிடம் அளிக்கவில்லை. “கொஞ்சம் பொறுமையாக இருங்கள்… பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லியுள்ளார்கள்.

ரவீந்திரநாத் குமாருக்கு மந்திரி பதவிகுறித்து மோடியிடம் ஆலோசனை செய்தபிறகே முடிவெடுக்க முடியும் என்று சொல்லி அனுப்பிவைத்துவிட்டனர். இந்தச் சந்திப்பில், பன்னீருக்கு சாதகமாக எந்த உறுதிமொழியும் கொடுக்காவிட்டாலும், தனது மனக்குமுறலை வெளிப்படுத்திவிட்டோம் என்கிற திருப்தியோடு பன்னீர் செல்வம் அறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

எடப்பாடி - பன்னீர்

எடப்பாடி – பன்னீர்

வெளியே இருந்த அ.தி.மு.க எம்.பி-க்களிடமும், உள்ளே பேசிய விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளவில்லை பன்னீர்செல்வம். அவரின் சந்திப்பை பி.ஜே.பி தரப்பும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். அமித் ஷாவின் ட்விட்டர் பக்கத்தில்கூட இந்தச் சந்திப்புகுறித்த எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அதற்குக் காரணம், இந்தச் சந்திப்பை அமித் ஷா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” என்கிறார்கள்.

 

எடப்பாடி தரப்பும், பன்னீர் பயணத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், பி.ஜே.பி-யிடம் அவர் மறைமுகமாக வைத்துவரும் கோரிக்கை, ஒருநாள் அம்பலத்திற்கு வரும்; அப்போது பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி கண்சிமிட்டுகிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

%d bloggers like this: