மொபைலா, மூளை வளர்ச்சியா… எது முக்கியம்?

ப்போதெல்லாம் பெரியவர்களுக்குச் சமமாகக் குழந்தைகளிடமும் மொபைல்போனைப் பார்க்க முடிகிறது. `அம்மா கடைக்குப் போயிட்டு வர்ற வரைக்கும் செல்போன்ல கேம் விளையாடு’, `ஹோம்வொர்க் முடிச்சிட்டு வா… மொபைலைக் கொடுக்கிறேன்’ என்றெல்லாம் தாங்களாகவே குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனைக் கொடுக்கும் பெற்றோர் அதிகரித்துவருகிறார்கள்.

அதனால் ஏற்படும் மோசமான விளைவு அவர்களுக்குத் தெரிவதில்லை. செல்போன் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. இதுகுறித்து விளக்குகிறார் மருத்துவர் காமராஜ்.

“நம் மூளையின் எடை, 1.3 கிலோ முதல் 1.4 கிலோவரை இருக்கும். சிம்பன்ஸி, கொரில்லா போன்ற குரங்குகளின் மூளை எடை 300-லிருந்து 600 கிராம்தான் இருக்கும். இவற்றின் மூளை வளர்ச்சியும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், மனித மூளை மிக விரைவாக வளர்ந்து, முழு வளர்ச்சியையும் அடைந்து விடும். அதனால்தான் ஓரளவு வளர்ந்த குழந்தைகளும் பெரியவர்களும் அளவில் அதிக வித்தியாசமில்லாத தொப்பியைத் தலையில் அணிய முடிகிறது.

கொரில்லா, யானை போன்ற மிருகங்கள் பெரிதாக இருந்தாலும், அவற்றின் மூளை சிறியதாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் மூளை, நம் உடலின் 25 சதவிகித ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்கிறது.

காட்டில் வசிக்கும் விலங்குகள் உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெற இலை, தழைகளைச் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். மனிதன் காட்டிலிருந்து வெளியே வந்து, வேறொரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்த பிறகுதான் அவன் மூளை வேகமாக வளர ஆரம்பித்தது. இரு இனிப்பு வடையைச் சாப்பிட்டாலே போதும்… ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான கலோரிகள் கிடைத்து விடும். இப்போது நாம் தேவைக்கு அதிகமாகவே சாப்பிடுகிறோம். அவற்றை யும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளாக (ரிச் ஃபுட்ஸ்) உட்கொள்கிறோம். காட்டிலுள்ள விலங்கு களுக்கு இதுபோல ரிச் ஃபுட்ஸ் கிடைப்பதில்லை. அதனால், அவற்றின் மூளை பெரிதாக வளர்ச்சி யடைவதில்லை.

உலகிலுள்ள எல்லா விலங்குகளையும்விட குழந்தை யின் மூளை வளர்ச்சி மிக அபரிமிதமானதாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு வெளியுலகத் தொடர்பு மிக முக்கியம். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க விடுகிறோம் அல்லது அவர்கள் கையில் செல்போனைக் கொடுத்து அதில் விளையாட விடுகிறோம். குழந்தைகளுக்கு செல்போனைப் பயன்படுத்தக் கொடுப்பதால், அது அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்று எச்சரிக்கின்றன சில ஆய்வுகள். `மின்காந்த அலைகளால் மூளை பாதிக்கப்படலாம்; செல்போனில் இருக்கும் விளையாட்டுகளிலேயே கவனத்தை குவித்துவைப்பதால், மூளை வளர்ச்சியும் ஆளுமையும் பாதிக்கப்படலாம்’ என்றெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆளுமை, நுண்ணறிவு ஆகிய திறன்களில் மூளைக்கும் அதைப் பயன்படுத்தும்விதத்துக்கும் (Inter Connection) முக்கியப் பங்குண்டு. எனவே, செல்போனைக் குழந்தைகளிடம் கொடுக்காமல் இருப்பதுதான் நல்லது.

செல்போன் மட்டுமல்ல… நவீன கருவிகளை குழந்தைகளிடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தை ஒவ்வொரு விஷயத்தையும் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்கு பதிலாக உணர்ந்து புரிந்து கொள்ள வழிசெய்ய வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்களின் ஆளுமைத்திறன் வளரும். எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்.’’

%d bloggers like this: