தாய்ப்பால் கொடுக்கும்போதே கர்ப்பம் தரித்தால் என்ன செய்ய வேண்டும்? – மருத்துவ வழிகாட்டல்!

அடுத்தடுத்து பிறக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பது சரியா?

‘குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்’ என்பதில் இப்போதைய இளம் தாய்களுக்கு குழப்பமுண்டு. ‘அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள்வரை தாய்ப்பால் கொடுக்கலாம்’ என்கிறது, மருத்துவ அறிவியல். ‘தாய்ப்பால் கொடுக்கும்போதே அந்தத் தாய் மீண்டும் கருவுற்றால்

தாய்ப்பால் தருவதைத் தொடரலாமா?’ என்ற சந்தேகமும் பலருக்குண்டு. கருவுற்றாலும் தாய்ப்பால் சுரக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால், அடுத்த குழந்தை பிறந்த பிறகும் தாய் விரும்பினால் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கலாம். தாயின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன் கர்ப்பகாலம் நல்லபடியாக இருந்தால், தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்வதில் தவறில்லை.
 

இரண்டாவது கர்ப்பம்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், அவர்கள் கருவுறவே முடியாது என்றும் கூற முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உதவும் `புரோலாக்டின்’ (Prolactin) என்னும் ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும். அந்த ஹார்மோன் `ஓவுலேஷன்’ (ovulation) என்ற நிலையான சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியாவதைத் தடைசெய்யும். இதனால் கருவுற முடியாத சூழல் ஏற்படும். புரோலாக்டின் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் கருமுட்டை வெளியாவது தடைபடாமல், கருவுறுவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரவு முழுவதும் குழந்தை பால் குடிக்காமல் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படலாம்.

பிரசவத்துக்குப் பிறகு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய்ச் சுழற்சியில் சீரற்ற நிலை ஏற்படும். அதனால் கருவுற்றிருப்பதை அறியாமலேயே சில காலம் தாய்ப்பால் கொடுக்கும் நிலை ஏற்படும். கர்ப்பகாலத்தின் தொடக்கத்தில் ஹார்மோன் மாற்றத்தால் மார்பகக் காம்புகளில் அதிக கூச்சம் ஏற்படும். மேலும், மார்பகத்தில் புண்கள் (Breast Sore), காம்பில் வலி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. இந்த வலி, தாய்ப்பால் கொடுக்கும்போது அதிகரிக்கலாம். இதில், சரியான கவனம் செலுத்தினால் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர இது ஒரு பிரச்னையாக இருக்காது.

சில தாய்மார்கள், தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களுக்குக் கர்ப்பகால மசக்கை (Morning Sickness) என்னும் வாந்தி அதிகமாகலாம். திட்டமிட்டு உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம். கர்ப்பகாலத்தில் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரும்போது ஆரோக்கியமான சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மிகத்தீவிரமான வாந்தி ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
 

அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன்பு தாய்ப்பால் கொடுப்பதைக் கீழ்க்காணும் நிலைகளில் நிறுத்த வேண்டும்.

– இதற்கு முன் குறைமாதப் பிரசவம் நிகழ்ந்திருந்தால்…

– முந்தைய கர்ப்பம் கருச்சிதைவாகியிருந்தால்…

– கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால்…

தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது மீண்டும் கருவுற்ற நான்கு அல்லது ஐந்தாவது மாதத்தில் தாய்ப்பால் சீம்பாலாக மாற வாய்ப்புண்டு. அதைக் குடிக்கும் குழந்தை தாய்ப்பாலின் சுவையில் மாற்றத்தை உணரும். இதனால் குழந்தை பால்குடியை வெறுக்கலாம். சிலநேரம் அதிக ஆர்வத்துடன் பால் குடிக்கலாம். ஒருவேளை, பிறந்த குழந்தைக்கு ஒரு வயதுக்கும் குறைவாக இருந்து, அடுத்த கர்ப்பகாலத்திலும் தாய்ப்பாலைத் தொடரும்போது குழந்தையின் எடை சராசரியாக அதிகரிக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். கர்ப்பகாலம் அதிகரிக்க அதிகரிக்க, தாய்ப்பால் சுரப்பு சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கலாம். இந்நிலையில் குழந்தைக்குப் போதுமான பால் கிடைக்கிறதா என்பதைக் கீழ்க்காணும் முறையில் உறுதி செய்யலாம்.

– குழந்தை சுறுசுறுப்பாக இருக்கும்.

– உடல் எடை வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் சராசரியாக அதிகரிக்கும்.

– சராசரியாக நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 முறை மலம், சிறுநீர் கழிக்கும்

– குழந்தை நன்றாகத் தூங்கும்.

கர்ப்பகாலத்தில் தாயின் வயிறு பெரிதாகும்போது குழந்தைக்குத் தாய்ப்பால் தருவதில் சிரமம் ஏற்படலாம். அதனால் குழந்தையைப் பக்கவாட்டில் படுக்க வைத்தோ உட்காரவைத்தோ முட்டிபோட வைத்தோ தாய்ப்பால் தர முயற்சி செய்யலாம். இதில் எந்த நிலை வசதியாக உள்ளதோ, அந்த நிலையில் பால் கொடுக்கலாம்.

அடுத்த குழந்தை பிறந்தவுடன் இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்வதா, புதிதாக பிறந்திருக்கும் பிள்ளைக்கு மட்டும் தாய்ப்பால் கொடுப்பதா என்பதைத் தாய்தான் தீர்மானிக்க வேண்டும். `ஒரு குழந்தைக்கு மட்டும் தாய்ப்பால் கொடுக்கும் தாயை ஒப்பிடும்போது, இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக அழற்சி (Mastitis) வரும் வாய்ப்பு குறைவு’ என்கிறது ஓர் ஆய்வு.

 

அடுத்த குழந்தை பிறந்ததும், ‘இரண்டு குழந்தைக்கும் பால் கொடுக்கப்போவதில்லை’ என்று தீர்மானித்தால், கர்ப்பகாலத்திலேயே முதல் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது நல்லது. அடுத்த குழந்தை பிறந்தவுடன் முதல் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் அந்தக் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டதாக உணரும். அடுத்த குழந்தை பிறந்தவுடன் முதலில் சுரக்கும் சீம்பால் பிறந்த புதிய குழந்தைக்கு மிகமுக்கியம். அதனால், முதலில் பிறந்த குழந்தைக்குச் சீம்பால் கொடுக்கும்போது, முதல் குழந்தையின் கவனத்தை சில விளையாட்டுகளில் சிதறச் செய்ய வேண்டும். சீம்பால் சுரப்பது நிறைவுற்று தாய்ப்பால் நன்றாகச் சுரக்க ஆரம்பித்தவுடன் இரண்டு குழந்தைக்கும் சேர்த்து பால் கொடுக்கலாம்.

இரண்டு குழந்தைக்கும் பால் கொடுக்கும்போது சிரமம் ஏற்பட்டால் தாய்க்கு முதல் குழந்தை உதவும். அதாவது, முதல் குழந்தை அதிக வலுவுடன் ஒரு மார்பில் பால் அருந்தும்போதே அடுத்த மார்பில் அனிச்சையாகப் பால் சுரக்கும். அதன்பிறகு இரண்டாவது குழந்தைக்கும் எளிதாகக் கொடுக்கலாம்.

%d bloggers like this: