இரண்டே நாளில் 1,500 புதிய கணக்குகள்!” – ரூ. 15 லட்சம் வதந்தியால் திணறிய மூணாறு தபால் நிலையம்

வாட்ஸ்அப் செய்தி வதந்தி எனக் கூறியும் தபால் நிலையத்தில் மக்கள் புதிய கணக்கு தொடங்கிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்திவருகின்றனர். அதன்மூலம் பல நல்ல விசயங்கள் பகிரப்படுகின்றன. அதைவிட அதிகமாக வதந்திகள் மிக வேகமாகப் பரவுகின்றன. நமக்கு வந்துள்ள செய்தியின் உண்மைத் தன்மை தெரியாமல், அதைப் பலருக்கும் ஃபார்வர்டு செய்யும் பழக்கம் பலருக்கு உள்ளது. இப்படி ஒரு சம்பவத்தால் திணறியுள்ளனர், கேரள அதிகாரிகள்.

 

கேரள மாநிலம் மூணாறில், கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப் மற்றும் இணையம் மூலம் ஒரு செய்தி பரவிவந்துள்ளது. ”நாளை உங்களுக்குப் பொன்னான நாள். காலை 8 மணி முதல் மறுநாளுக்குள், தபால் நிலையத்தில் பணப் பரிவர்த்தனை கணக்கு தொடங்கினால், அதில் மத்திய அரசு 15 லட்சம் ரூபாய் செலுத்தும். இந்தக் கணக்கு தொடங்க ஆதார் கார்டு மற்றும் இரண்டு புகைப்படங்கள் போதுமானவை. நாளை முதல், மூணாறு தபால் நிலையத்தில் இந்த கணக்கைத் தொடங்கிக்கொள்ளலாம்” என்பதுதான் அந்தச் செய்தி.

இதை உண்மை என்று நம்பிய அப்பகுதி மக்கள், கடந்த திங்கள் கிழமை காலை 8 மணிக்கெல்லாம் தபால் நிலையத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். நடந்த சம்பவங்களை அறிந்த தபால் நிலைய அதிகாரிகள், ’வாட்ஸ்அப் செய்தி போலியானது, வதந்திகளை நம்ப வேண்டாம்’ என மக்களுக்குப் புரியவைக்க எவ்வளவோ முயன்றுள்ளனர். ஆனால் அங்கு வந்த பொதுமக்கள், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தபால் நிலைய கணக்கு தொடங்குவதிலேயே கவனம் செலுத்தியுள்ளனர். வேறு வழி இல்லாமல், அதிகாரிகளும் மக்களுக்கு புதிய கணக்கைத் தொடங்கித் தந்துள்ளனர்.

மாலை ஆறு மணிக்கு மூடப்படவேண்டிய தபால் நிலையம், கடந்த இரண்டு நாள்களும் இரவு எட்டு மணிக்கு மேலாகவும் திறந்திருந்துள்ளது. தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தங்கள் வேலைகளை முடித்துவிட்டு இரவு வரை தபால் நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.

ஒருகட்டத்துக்கு மேல் தபால் நிலைய அதிகாரிகளால் பொது மக்களைச் சமாளிக்க முடியாமல்போகவே, காவலர்களின் உதவியைக் கேட்டுள்ளனர். அவர்கள் வந்தும் வதந்தியான செய்தி பற்றி மக்களுக்குப் புரியவைக்க முயன்று தோற்றனர். கடந்த இரண்டு நாள்களில் மட்டும் மூணார் தபால் நிலையத்தில் 1,500-க்கும் மேற்பட்ட புதிய கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றிப் பேசியுள்ள தபால் நிலைய அதிகாரிகள், “ ஆதார் கார்டு, இரண்டு புகைப்படங்கள் மற்றும் 100 ரூபாய் செலுத்தி புதிய கணக்கைத் தொடங்கினால், அதில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலாக வைப்புத் தொகையாக (Deposite) செலுத்திக்கொள்ளலாம். கணக்கு தொடங்கியதற்கு ஆதாரமாக கியூ.ஆர் கோர்டு கொண்ட அட்டையை வழங்குவோம். அதன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். மேலும், இந்தக் கணக்கில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதியும் உள்ளது. இவற்றை தவறாகப் புரிந்துகொண்ட மக்கள், அலுவலகம் முன்பு குவியத்தொடங்கிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: