களத்தில் இறங்கிய அ.தி.மு.க ஐ.டி விங் – துரைமுருகனுக்கு சிக்கலை ஏற்படுத்துமா வாட்ஸ்அப் பதிவு?

வேலூர் தொகுதிப் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சி வாட்ஸ்அப் மூலம் புதிய பிரசாரத்தை முன்வைத்துவருகிறது. `துரைமுருகனின் துரோகம் மறக்க முடியுமா?’ என்ற தலைப்பில் வாட்ஸ்அப் மூலம் ஒரு பட்டியலைப் பகிர்ந்துவருகிறார்கள் அ.தி.மு.க தரப்பினர்.

வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. பிரசாரம் 3-ம் தேதி மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அ.தி.மு.க மற்றும் தி.மு.க இரண்டு தரப்புமே இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில், தி.மு.க வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்கும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இஸ்லாமியர்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் அந்தச் சமூக வாக்குகளைக் குறிவைத்து அ.தி.மு.க ஆரம்பத்தில் களப்பணி செய்தது.

குறிப்பாக, ராஜ்ய சபாவுக்கு இந்தத் தொகுதியைச் சேர்ந்த இஸ்லாமியரான முகமது ஜானை அனுப்பிவைத்து வாக்குகளைக் கவர்ந்தது. ஆனால், முத்தலாக் சட்டத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் பேசியது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவர, இங்கு அ.தி.மு.க களப்பணியாற்றியபோது நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் இப்படி பேசிவிட்டது பெரும் கொந்தளிப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது. ஆனால், இதைவைத்தே தி.மு.க தரப்பு பிரசாரம் செய்து இஸ்லாமியர்களைத் தன்வயப்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க, இறுதிக்கட்டத்தில் ஆளும் கட்சி வாட்ஸ்அப் மூலம் புதிய பிரசாரத்தை முன்வைத்துவருகிறது. `துரைமுருகனின் துரோகம் மறக்க முடியுமா?’ என்ற தலைப்பில் வாட்ஸ்அப் மூலம் ஒரு பட்டியலை பகிர்ந்துவருகிறார்கள், அ.தி.மு.க தரப்பினர்

அதில், “கடந்த 2014 வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானை உள்ளடி வேலைசெய்து தோற்கடித்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். தன் மகனின் அரசியல் எதிர்காலத்துக்காகக் கூட்டணி தர்மத்தைக் காலில்போட்டு மிதித்து அப்துல் ரஹ்மானைத் தோற்கடித்து, அவரை மூன்றாமிடத்துக்குத் தள்ளியவர்தான் சாட்சாத் துரைமுருகன். இன்று மகனுக்காகச் சிறுபான்மையினரிடம் மன்றாடுகிறார். சண்முகம் வந்தால் எங்கள் பிள்ளைகளுக்குப் படிக்க வாய்ப்பு கிடைக்கும். மலிவான மருத்துவ சேவை கிடைக்கும் எனக் கேட்டுவிட்டு, நீங்கள் வந்தால் என்ன கிடைக்கும் எனக் கேட்டால், பதில் இல்லை.

தோல் முதலாளிகளை மிரட்டி பணம் சம்பாதித்ததெல்லாம் போதாதாம். இப்ப பி.ஜே.பி-யைக் காட்டி மிரட்டி, சிறுபான்மையினரை வழிக்குக் கொண்டுவரலாம் என நினைத்தால், களத்தில் அ.தி.மு.க. பி.ஜே.பி-யை ஒரங்கட்டிவிட்டது. முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறது என்று திசைதிருப்புகிறார்கள். அப்படியெனில், சிறுபான்மையினருக்கு எதிரான என்.ஐ.ஏ விவகாரத்தில் தி.மு.க ஏன் பி.ஜே.பி-க்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஓட்டு போட்டது என திருப்பிக் கேட்டால் பதில் இல்லை. சிறுபான்மையினருக்குக் காவலன் வேடம் போடும் துரைமுருகன் குடும்பத்தினர், வேலூரில் மூடிக் கிடக்கும் கோட்டைப் பள்ளிவாசலைத் திறக்க வாக்குறுதி தருவார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். அ.தி.மு.க-வின் ஐ.டி விங் கடைசிநேரத்தில் இந்த யுக்தியைக் கையில் எடுத்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்க தி.மு.க தரப்பும் தயாராகிவருகிறது.

“பி.ஜே.பி-யைத் தொகுதிக்குள் அழைக்காவிட்டாலும் பி.ஜே.பி-யின் பி.டீம்தான் அ.தி.மு.க என்பது தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு நன்றாகத் தெரியும். வேலூரில் உள்ள தோல் தொழில் அதிபர்கள் மற்றும் ஜமாத் பெருமக்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்த பிறகே, இந்த வாட்ஸ்அப் பதிவைத் தொகுதி முழுவதும் பரப்பி வருகிறார்கள். வாக்களிக்கப் போகும் மக்களுக்குத் தெரியும் யார் சிறுபான்மைக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று. பிரசாரம் முடியும் நாளன்று பாருங்கள், எங்கள் தரப்பிலிருந்தும் ஒரு வாட்ஸ்அப் பதிவு வெளியாகப்போகிறது” என்று சஸ்பென்ஸ் வைத்துச் சொல்கிறார்கள் தி.மு.க-வினர்.

%d bloggers like this: