தண்ணீர் சிக்கனத்துக்கு வழிவகுக்கும் வாட்டர் மீட்டர்

நீர் நம் உயிர்!

வாட்டர் மீட்டர்
வாட்டர் மீட்டர்

மிழகத்தின் பல பகுதிகளில் விவாதத்துக்குரிய தலைப்பாக மாறிப் போயிருக்கிறது, தண்ணீர்த் தட்டுப்பாடு. தேவையான அளவு தண்ணீரைச் சேமிக்காதது, இருக்கிற தண்ணீரைத் தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்தாதது ஆகியவை இதற்கான முக்கியக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. சென்ற ஆண்டு போதிய அளவு மழை பெய்யாத காரணத்தால், இந்த ஆண்டு தண்ணீர்ப் பஞ்சத்தின் தாக்கம் வழக்கத்தைவிட மிக அதிகமாகவே இருக்கிறது. தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்குத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அரசின் கடமையே. இருப்பினும்,

தனிமனிதர்கள் தண்ணீரைத் தங்கள் தேவைக்கு அதிகமான அளவில் செலவழிப்பது கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறது. அப்படிச் செலவழிக்கும் தண்ணீரைக் குறைப்பதற்கு மின்சாரத்தை அளவிடும் மீட்டரைப்போல தண்ணீருக்கும் ஒரு மீட்டர் இருந்தால் நாம் எவ்வளவு தண்ணீரை ஒரு நாளில் செலவழிக்கிறோம் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். அதிகமாகத் தண்ணீரைச் செலவழிக்கும் விஷயத்தைக் கண்டறிந்து, அந்தச் செலவை நம்மால் குறைத்துக்கொள்ளவும் இயலும்.

தண்ணீர் சிக்கனத்துக்கு வழிவகுக்கும் வாட்டர் மீட்டர்

தண்ணீர் மீட்டர்

மின்சாரத்தை அளவிடும் மீட்டரைப் போலவே நம் வீட்டில் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பது உள்ளிட்ட விவரங்களைத் தருவதுதான் தண்ணீர் மீட்டர். இதை நிறுவுவதற்கு உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் தனித்தனியே சென்சார்களை அமைக்க வேண்டும். குழாய்களில் தண்ணீர் நுழையும், வெளியேறும் அனைத்துப் பகுதி களிலும் சென்சார்களை வைத்து தண்ணீரின் அளவைக் கண்காணிக்க வேண்டும். வீட்டின் தண்ணீர்த்தொட்டியிலும் சென்சாரைப் பொருத்திக் கண்காணிக்க வேண்டும். தண்ணீரைப் பயன்படுத்தும் இடங்களான குளியலறை, கழிவறை, பாத்திரம் கழுவும் இடம் மற்றும் இதர குழாய்கள் என அனைத்து இடங்களிலும் இந்த சென்சார்களைப் பதிப்பது, தண்ணீர் மீட்டர் அமைப்பதற்கான முதல் வேலை. இவ்வாறு பதிக்கப்பட்ட சென்சார்கள் வழியாக எவ்வளவு தண்ணீர் வெளியேறுகிறது, எவ்வளவு தண்ணீர் வீட்டுக்குள் வருகிறது என்பது உள்ளிட்ட விவரங்கள், உங்கள் மொபைலில் உள்ள வாட்டர் மீட்டர் அப்ளிகேஷனில் தானாகவே பதிவாகிவிடும். அதிலிருந்து எவ்வளவு தண்ணீரை நாம் என்னென்ன விஷயங்களுக்கு செலவழித்திருக்கிறோம் என்பதுகுறித்த துல்லியமான விவரத்தை அறிந்துகொள்ள முடியும்.

தண்ணீர் சிக்கனத்துக்கு வழிவகுக்கும் வாட்டர் மீட்டர்

வாட்டர் மீட்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் தரவிறக்கக் கிடைக்கின்றன. தண்ணீர் மீட்டர் ஒன்றை வீட்டில் நிறுவுவதற்கு மிக அதிகமான செலவாகுமா என்பது நம்மில் பலரிடம் இருக்கும் கேள்வி. ஒரு மின்சார மீட்டர் நிறுவுவதற்காகும் அதே அளவு செலவுதான் ஆகும். தண்ணீருக்குப் படும் துயரத்தை ஒப்பிட்டால் இந்தச் செலவெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்காது!

தண்ணீர் மீட்டர் எப்படி இருக்க வேண்டும்?

  • நம் வீட்டில் பொருத்தவிருக்கும் தண்ணீர் மீட்டர், மணிக்கணக்கில் நாம் செலவழிக்கும் தண்ணீரின் அளவு பற்றிய தகவல்களை அளிக்க வல்லதாக இருக்க வேண்டும்.

  • தண்ணீர் வெளியேறும் மற்றும் நுழையும் குழாய்களில் எவ்வளவு தண்ணீர் நுழைகிறது என்பது உட்பட அனைத்து தகவல்களையும் துல்லியமாக அளிக்கும் சென்சார்கள் இருக்க வேண்டும்.

  • மொபைல் ஆப் வழியாகவே அனைத்துத் தகவல்களையும் பார்க்கும் வசதிகொண்ட தண்ணீர் மீட்டரையே பொருத்த வேண்டும்.

  • எந்த நாளில், எந்த நேரத்தில் மிக அதிக /சராசரியான / மிகக் குறைந்த அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பது உட்பட அனைத்து விவரங்களையும் துல்லியமாக அளிக்கக்கூடிய தண்ணீர் மீட்டராக அது இருக்க வேண்டும்.

  • நாம் பயன்படுத்தும் தண்ணீரின் சுத்தத்தையும் அளவிடக்கூடியதாக அந்தத் தண்ணீர் மீட்டர் இருக்க வேண்டும்.

  • எந்தப் பிழையும் இல்லாமல், மிகச் சரியான தகவல்களை நம் மொபைலுக்கு வைஃபை வழியாக அனுப்பக்கூடியதாக இருக்க வேண்டும்.

  • தண்ணீர் மீட்டரின் பேட்டரி அளவு தீரப்போவதை முன்கூட்டியே மொபைலுக்கு அனுப்பும் வசதியும் இருக்க வேண்டும்.

  • தண்ணீர் மீட்டர் பொருத்தியவுடனே, நம்முடைய வேலை முடிந்துவிடாது. எப்போது மிக அதிக அளவு தண்ணீர் வீணாகச் செலவழிக்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்கவேண்டியதுதான் முக்கியமான பொறுப்பு. அவ்வாறு அதிகமாக வீணாகும் நீரைச் சேமிப்பதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். தனிமனித அளவில் நாம் முன்னெடுக்கும் இந்த விஷயம், நிச்சயம் நமக்கு மட்டுமல்ல; நம் சந்ததிக்கும் பெரும் நன்மையாக இருக்கும்!

%d bloggers like this: