ஆகஸ்ட் ஆபரேஷன்: விஜயபாஸ்கரிடம் தொடக்கம்… விரைவில் சொத்துகள் முடக்கம்?

வந்ததுமே சுடச்சுட, மணமணக்க காபியைப் பரிமாறினோம் கழுகாருக்கு. அதை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவர், ‘காபி டே’ நிறுவன அதிபர் சித்தார்த்தா மரணம் பற்றி ஜூ.வி-க்குத் தயாராகிக் கொண்டிருந்த செய்தியை வாங்கிப் பார்த்தார்.

‘‘இவருடைய மரணத்தில் ஏகப்பட்ட மர்மங்கள். அதேசமயம், இதை வைத்து நாடாளுமன்றத்தை காங்கிரஸார் அதிரவைத்துக்கொண்டிருப்பதிலும் ஏகப்பட்ட பின்னணிகள். குறிப்பாக, ‘காங்கிரஸ் புள்ளிகள் பலருக்கும் சித்தார்த்தாவுடன் தொடர்பு உண்டு. அதையெல்லாம் கிளறுவார்கள் என்கிற பயத்தில்தான் இந்த விஷயத்தில் முந்திக்கொண்டு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறது காங்கிரஸ்’ என்கிறார்கள்’’ என்றார்.
மிஸ்டர் கழுகு: ஆகஸ்ட் ஆபரேஷன்: விஜயபாஸ்கரிடம் தொடக்கம்… விரைவில் சொத்துகள் முடக்கம்?

‘‘அ.தி.மு.க-வில் அடுத்த போராட்டத்துக்கு பன்னீர் தயாராகிவிட்டார்போல.’’

‘‘பெரும்போராட்டமாகத்தான் இருக்கும். மோடிக்கு தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர், அ.தி.மு.க-வுக்கு வேலைபார்க்க கமிட் ஆகியிருக்கிறார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன் அல்லவா… இப்போது அவர் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். அது பன்னீருக்குத்தான் அம்பாக வந்து நிற்கும் என்று தெரிகிறது.’’

‘‘கடந்த ஜூலை 26 அன்றுதானே கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் கலந்துகொண்டார்?’’

‘‘அன்று இரவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, ‘ஆட்சியைத் தக்கவைக்க, முதலில் உங்கள் கட்சியைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். ஒற்றைத் தலைமை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்.’’

‘‘ஓஹோ!’’

‘‘இதற்குத்தானே காத்திருந்தார் எடப்பாடி. இப்போது கிஷோரே சொல்லிவிட்டதால், காய் நகர்த்த தொடங்கிவிட்டார். அதற்கான வேலைகளை ‘மணி அண்ட் கோ’வினர் செய்துவருகிறார்கள்.’’

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

‘‘பன்னீரின் மூவ் என்ன?’’

‘‘கட்சியில் பதவிகள் மாற்றம் தொடர்பாக எடப்பாடி தரப்பிலிருந்து அனுப்பிய பல கோப்புகளை கிடப்பில் போட்டிருக்கிறது பன்னீர் தரப்பு. இது, எடப்பாடியைக் கடுப்பாக்கியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. அதில் கட்சியின் ஒற்றைத் தலைமை யார் என்பதை முடிவுசெய்யும் வாக்கெடுப்பை நடத்த எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருக்கிறது. இதை அறிந்து பன்னீர் தரப்பும் தனக்கு ஆதரவான ஆள்களைத் திரட்டிவருகிறது.’’

‘‘ஓ… முத்தலாக் விவகாரத்தில் முட்டல் எழுந்தது இப்படித்தானா?’’

‘‘முத்தலாக் விஷயத்தில் ரவீந்திரநாத்தை அப்படிப் பேசச் சொன்னதே பன்னீர் ஆதரவாளர்கள்தான் என்ற பேச்சும் ஓடுகிறது. அப்படிப் பேசியதற்கு ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் ஒருவர் எடப்பாடியிடம் எகிறியுள்ளார். இதுபற்றிய விவாதம் தொடர்ந்தபோது, ‘நான் பொதுச்செயலாளர் ஆகிவிடுகிறேன். பன்னீருக்கு கௌரவத் தலைவர் பதவியைக் கொடுக்கலாம். ஆனால், ஒருபோதும் வழிகாட்டுதல் குழு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று எடப்பாடி தரப்பு உறுதியாகச் சொன்னதாம். ‘மூன்று வாரங்களில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும்’ என்று பன்னீர் சொல்லி, ஆறு வாரங்களாகியும் அது நடக்காமல்போனதன் பின்னணி இதுதானாம்.”

“சசிகலா தரப்பு என்ன நினைக்கிறது?”

“சசிகலாவுடன் எடப்பாடி தரப்பு தொடர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அவர் சிறையிலிருந்து விரைவில் வெளியே வருவதற்கான காய் நகர்த்தல்கள் தமிழக அரசு தரப்பிலிருந்தே தொடங்கப்படும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன. பன்னீரை ஓரம்கட்டவே சசிகலாவை எடப்பாடி தரப்பு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் சொல்கிறார்கள்.’’

‘‘பி.ஜே.பி ஏதேனும் திட்டம் வைத்திருக்குமே!’’

‘‘என்னதான் எடப்பாடி தரப்பு பி.ஜே.பி-யிடம் இணக்கமாக இருந்தாலும் பன்னீர் தரப்புமீது பி.ஜே.பி தலைமைக்குத் தனிப்பாசம் இருக்கத்தான் செய்கிறது. அ.தி.மு.க-வில் அவரின் கை இறங்கினால், பி.ஜே.பி தலைவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார் களாம். ஒருவேளை அ.தி.மு.க-வில் அவர் நிலைமை மோசமானால் ராஜ்ய சபா எம்.பி-க்கள் சிலருடன் சேர்த்து, அவரை தங்கள் பக்கம் இழுக்கவும் பி.ஜே.பி கட்சித் தலைமை நினைக்கிறதாம். அப்படி ஒரு நிலைமை வந்தால் அவருடைய மகனுக்கு மந்திரிப் பதவி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பன்னீர் இதற்கு இணங்குவாரா என்றுதான் தெரியவில்லை.”
மிஸ்டர் கழுகு: ஆகஸ்ட் ஆபரேஷன்: விஜயபாஸ்கரிடம் தொடக்கம்… விரைவில் சொத்துகள் முடக்கம்?

‘‘இப்படி ஒரு காட்சியை நினைத்தே பார்க்க முடியவில்லை!’’

‘‘அதற்கெல்லாம் முன்னோட்டமாக அ.தி.மு.க-வின் இமேஜை அடித்து நொறுக்கும் வகையில் பி.ஜே.பி சில திட்டங்களை வைத்திருக் கிறது. அ.தி.மு.க ஊழல்களையும், அமைச்சர்களின் சொத்துக்குவிப்புகளையும் பி.ஜே.பி அரசு கண்டு கொள்ளவில்லை என்ற பரப்புரையை எதிர்க்கட்சியினர் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றனர். இது மக்களிடமும் எடுபடுகிறது. இதைப்பற்றி அமித் ஷாவுக்கு ஐ.பி ரிப்போர்ட் போயிருக்கிறது. அதை சரிசெய்யத்தான்

அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர்மீது கை வைக்க பி.ஜே.பி திட்டமிட்டிருக்கிறது. அதில் முதல் குறி விஜயபாஸ்கர் என்கின்றன டெல்லியிலிருந்து வரும் தகவல்கள்.’’

‘‘விளக்கமாகச் சொல்லும்!’’

‘‘2016 ஜூலை 8-ம் தேதி அன்று மாதவராவ் வீட்டில் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்க 2015-லிருந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்சம் தந்த விவரம் அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. 2017-ல் ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களும் அவருடைய உதவியாளர் வீட்டில் கைப்பற்றப்பட்டன. அதன் பிறகு விஜயபாஸ்கர் மீது பணி நியமன ஊழல் புகாரும் கிளம்பியது. `இதோ… அதோ…’ என்றார்கள். ஆனால், எதிலுமே அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை!’’

‘‘தெரிந்த கதைதானே!’’

‘‘இதில் நடந்த உள்விவகாரங்கள் எல்லாம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இப்போதுதான் தெரியவந்திருக்கிறதாம். இதையே சரியான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள தயாராகிவிட்டதாம் டெல்லி தரப்பு. மற்ற அமைச்சர்களைவிட விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் அதிகம் உள்ளதாக நினைக்கும் டெல்லி தரப்பு, விஜயபாஸ்கரிடம் இருந்து நடவடிக்கையைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறது. நிர்மலா சீதாராமன் தரப்பும் இதை ஆமோதித்ததாம். அதனால் ஆகஸ்ட்டிலேயே இந்த ஆபரேஷன் தொடங்கிவிடும் என்கிறார்கள்.”

“அடேங்கப்பா!”

“சி.பி.ஐ-க்கு முன்பே வருமானவரித் துறையும் அமலாக்கத் துறையும் அதிரடியைத் தொடங்கிவிடும் என்று டெல்லி சோர்ஸ்கள் சொல்கின்றன. சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை சிவில் பாதுகாப்புத் துறைக்கு மாற்றியதும் இதன் பின்னணியில்தான் என்கிறார்கள். இதுவரை குட்கா விவகாரம் தொடர்பான விசாரணை வேகமெடுக்கவில்லை என்பதும் இந்த மாறுதலுக்கு ஒரு காரணமாம்.’’

‘‘பன்னீரின் சந்திப்புக்கும் இதற்கும் தொடர்புண்டா?’’

‘‘அது தெரியாது. ஆனால், பன்னீர் – அமித் ஷா சந்திப்புக்குப் பிறகுதான் இந்த வேலைகள் வேகமெடுத்திருக்கின்றன. அதைச் சுட்டிக்காட்டியே பன்னீரின் ஆதரவாளர்கள் எடப்பாடி தரப்பைப் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறார்களாம்.”

“விஜயபாஸ்கர் மீது எது மாதிரியான நடவடிக்கைகள் பாயும்?”

“கைது நடவடிக்கைக்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள். ஆனால், விரைவில் சொத்துகள் முடக்கம் செய்யப்படலாம். ஏற்கெனவே விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 92 ஏக்கர் நிலத்தை வருமானவரித் துறை முடக்கிவைத்திருக் கிறது. அடுத்ததாக அவரை முழுமையாக வழக்குக்குள் கொண்டுவந்தால், மற்ற சொத்துகளும் முடக்கப்படலாம். ஆனால், அதற்கு முன்பாக அவராகவே ராஜினாமா செய்தால் நல்லது என்று பி.ஜே.பி தலைமை நினைக்கிறதாம்!’’

‘‘அது சரி… விஜயபாஸ்கரைவிடவும் பன்னீருக்கு வேறு இரு அமைச்சர்கள் மீதுதானே கோபம் அதிகம்?’’

‘‘உண்மைதான்… ஆனால், அவர்களை இப்போதைக்குத் தொட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். அண்டை மாநில கவர்னர், கோவை சாமியார் எனப் பலருடைய ஆதரவு அவர்களுக்கு இருப்பதுடன், அவ்வப்போது பி.ஜே.பி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் சிலரைப் பார்த்து ‘உரிய மரியாதை’யைச் செய்துவிடுகிறார்களாம். ஆனால், இவர்களைத் தவிர்த்து ‘வீரமான’ தமிழக அமைச்சர் ஒருவரையும் பி.ஜே.பி தரப்பு குறிவைத்திருக்கிறதாம். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் தமிழகத்தின் முக்கியமான அமைச்சர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் 230 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறாராம். அதுவும் விரைவில் வெடிக்கும் என்கிறார்கள்.’’

‘‘தி.மு.க செய்தி ஏதுமில்லையா?’’

‘‘தி.மு.க-வில் வாரிசு விவகாரம் குறித்த புகைச்சல் அதிகரித்திருப்பதால், அதைச் சரிக்கட்ட முடிவுசெய்திருக்கிறார் கட்சித் தலைவர் ஸ்டாலின். ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் உதயநிதி பேசுவதாக முடிவு செய்யப்பட்டது. இப்போது அந்தத் திட்டத்தை கைவிடலாமா என்று ஆலோசித்துவருகிறார்கள். கனிமொழியின் வேலூர் தேர்தல் பிரசாரம் ரத்தான விவகாரமும் புகைந்துகொண்டிருக் கிறது.’’

‘‘மாலத்தீவு முன்னாள் துணை அதிபரான அகமது அதீப் கஃபூரை, தூத்துக்குடி அருகே இந்தியக் கடல் எல்லைக்குள் வைத்து கைதுசெய்திருக்கிறதே கடலோரக் காவல் படை?”

“ஆமாம்… சரக்குக் கப்பலில் பதுங்கி இருந்த அவரை, சுற்றிவளைத்திருக்கிறார்கள். 2015-ம் ஆண்டு மாலத்தீவின் துணை அதிபராக அவர் இருந்தபோது, அதிபரைக் கொல்ல சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாலத்தீவில் புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகு, அவர் சிறையில் இல்லையாம். எப்படி அவர் வெளியே வந்தார் என்று புரியாமல் மாலத்தீவு அரசு குழம்பிய நிலையில்தான், இந்தியக் கடல் எல்லையில் அவரைச் சுற்றிவளைத்து விசாரித்துவருகிறது கடலோரக் காவல் படை மற்றும் சுங்கத் துறை!” என்ற கழுகார், சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: