மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்… பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிகள்!

தங்களின் பயனாளர் வங்கித் தகவல்களை வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் சேமிக்காமல், இந்தியாவில் இருக்கும் சர்வர்களில் சேமிக்கும்படி கூகுள் பே மற்றும் அமேசான் பே ஆகிய

நிறுவனங்களுக்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அண்மையில் உத்தரவிட்டது. தகவல்களைக் காப்பதுடன், பணப் பரிவர்த்தனை சார்ந்த விஷயங்கள் திருடு போகாமல் தடுப்பதற்காகவே இந்த உத்தரவு போடப்பட்டது. காரணம், நம் நாட்டில் டிஜிட்டல்மூலம் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவரும் அதேவேளையில், சைபர் க்ரைம் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகின்றன.
மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்… பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிகள்!

வங்கிப் பரிவர்த்தனை செயலிகளைப்போல, பல்வேறு தனியார் பரிவர்த்தனை செயலிகளும் பயன்பாட்டுக்குக் குவிந்து கிடக்கின்றன. பே டிஎம் (PAYTM), கூகுள் பே (Google pay), போன் பே (Phone pay) மற்றும் அமேசான் பே (Amazon Pay) போன்ற எண்ணற்ற செயலிகள் பரிவர்த்தனைக்கு எளிதாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் தேநீர் கடை முதல் விமான டிக்கெட் புக்கிங் வரை இதுபோன்ற செயலிகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.

திருடப்படலாம்… ஜாக்கிரதை

இதற்கிடையில் இந்த இணையதளத்தில் வாங்கினால் இவ்வளவு சலுகை, அந்த இணையதளத்தில் அவ்வளவு ஆஃபர் என கவர்ச்சி வலைகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘லாபம்’ எனும் விஷயம் இல்லாமல் எந்த நிறுவனமும் அதன் சுண்டு விரலைக் கூட பயனர்களை நோக்கி நீட்டுவதில்லை. பெரும்பாலான டிஜிட்டல் வாலெட் நிறுவனங்களும், மொபைல் அப்ளிகேஷன் களும் அப்படித்தான்.

இந்த நிறுவனங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் ஆபத்து உண்டா என்றால் சில ஆபத்துகள் உண்டு என்பதே பதில். உதாரணமாக, இவை உங்களுக்கும் உங்களுடைய வங்கிக்கும் இடையேயான பாலமாக இருக்கின்றன. உங்களுடைய முக்கியமான தகவல்கள் இந்த இடை நிறுவனத்திற்குக் கிடைக்கிறது. அவற்றை அந்த நிறுவனம் தவறாகப் பயன்படுத்துவதில்லை. காரணம் நீங்கள் அவர்களுடைய கஸ்டமர். ஆனால், அவர்களிடமிருந்து அவை திருடப்படலாம், ஹேக்கர்களால் கடத்திச் செல்லப்படலாம் எனும் ஆபத்து உண்டு.
மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்… பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிகள்!

எனினும், இன்றைய நவீனத் தொழில்நுட்பங்கள் இத்தகைய நிறுவனங்களின் பாதுகாப்பையும் ‘என்கிரிப்ஷன் டெக்னாலஜி’ மூலமாக உறுதி செய்கின்றன. இதன்மூலம் தகவல்கள் திருடப்படுவது குறையும். ஆயிரம்தான் இருந்தாலும், டிஜிட்டல் பயன்பாட்டுக்கே உரிய ஆபத்துகள் இவற்றிலும் உண்டு. டிஜிட்டலை முழுமையாக ஒதுக்கிவிடவே முடியாது என்னும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். விரும்பியோ, விரும்பாமலோ அந்தச் சூழல் உருவாகியிருக்கிறது. இத்தகையச் சூழலில் பாதுகாப்பாக இருக்கக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை விஷயங்களை மனதில்கொள்ளுங்கள்.

பாதுகாப்பாக இருக்க…

1. டிஜிட்டல் வாலெட் அப்ளிகேஷன்களில் சிரமம் பார்க்காமல் மிகவும் கடினமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துங்கள். அதை அடிக்கடி மாற்றுங்கள்.

2. உங்கள் ஸ்மார்ட் போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3. பொது இடங்களில் இலவசமாகக் கிடைக்கும் வை-ஃபையைப் பயன்படுத்தி, பணப் பரிவர்த்தனை செய்யாதீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால், வை-ஃபையை அணைத்தே வையுங்கள்.

4. புதிதாக வருகிற பாதுகாப்பு அப்டேட்களை உதாசீனம் செய்யாதீர்கள்.

5. எந்த ஆப்பினை நீங்கள் பயன்படுத்தினாலும் அதைப் பயன்படுத்தியபின் அதை விட்டு முழுமையாக வெளியே வாருங்கள்.

6. அடிக்கடி உங்களுடைய கணக்குவழக்குகளைச் சரிபார்த்து, ஏதேனும் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.

7. பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள் ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்யாதீர்கள்.

8. சிறப்பு வைரஸ் பாதுகாப்பு மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள்.

9. சந்தேகத்திற்கிடமான தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.

10. உங்கள் பாஸ்வேர்டு, பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்டு போன்றவற்றை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

எந்த ஆப்கள் சிறந்தது?

எல்லா வங்கிகளும் தங்களுக்கென தனியே மொபைல் ஆப்களை வைத்திருக் கின்றன. முடிந்தவரை அவற்றையே பயன் படுத்துங்கள். ‘தேர்டு பார்ட்டி’ எனப்படும் வெளி ஆப்கள்மூலமாக உங்களுடைய வங்கியைத் தொடர்புகொள்ளும் ஆப்களை முடிந்தவரைத் தவிர்க்கலாம்.

பாஸ்வேர்டு பலமாக இருக்கட்டும்

மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் குறித்து அப்ளிகேஷன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்மார்தர் டெக்னாலஜீஸ் (Smarther technologies) நிறுவனத்தின் சி.இ.ஓ பி.குமாரிடம் பேசினோம்.
மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்… பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிகள்!

“வங்கிகள் வழங்கக்கூடிய அப்ளிகேஷன் சேவைகளில் பாதுகாப்பு வசதிகள் அதிகமாக இருக்கும். ஆனால், தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்களில் இருக்கும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது. அதனால் அந்த வகை அப்ளிகேஷன்களைப் பயன் படுத்தும்போது, அதன் பாஸ்வேர்டு ஹேக் செய்ய முடியாதபடி, ஸ்ட்ராங்காக வைத்துக் கொள்ளுங்கள். பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பது நல்லது.

வங்கிகளின் அப்ளிகேஷன் சேவைகளில் பாதுகாப்பு வசதிகள் அதிகம். தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்களில் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. இவற்றைப் பயன்படுத்தும்போது, கூடுதல் கவனம் அவசியம்!

பொதுவாகவே, ஒரு அப்ளி கேஷனை தரவிறக்கம் செய்யும் போது, அதன் அளவு குறைந்தபட்சம் 15 எம்.பி முதல் 20 எம்.பி வரை இருப்பது அவசியம். பேங்கிங் அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்யும்போது, மொபைல் எண் களைப் பார்ப்பதற்கான அனுமதியை மட்டும் தரவும். கேலரி, ஆடியோ மற்றும் வீடியோ பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்க வேண்டாம். பொது இடங்களில் உள்ள வை-ஃபை வசதியைக் கொண்டு பேங்கிங் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த வேண்டாம். முக்கியமாக, ஓ.டி.பி வசதியைப் பயன்படுத்துங்கள். பேங்கிங் அப்ளிகேஷன் களைப் பயன்படுத்தியபிறகு அதிலிருந்து முழுவதுமாக வெளியேறவும். சில அப்ளி கேஷன்கள் பயனாளர்கள் வெளியேறினாலும் மறைமுக இயக்கத்தில் இருந்துகொண்டே இருக்கும். அதையும் கவனிக்கவும்” என்றார்.

பாதுகாப்பான அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுங்கள்

இது டிஜிட்டல் யுகம். இன்னும் சிறிது காலத்தில் ஏ.டி.எம் எனும் ஒரு விஷயமே அபூர்வமாகிவிடும். எல்லாமே மொபைல் மூலமாக அல்லது அணியும் தொழில்நுட்பம் மூலமாக நடக்கிற பரிவர்த்தனைகளாகவே மாறிவிடும். விரும்பியோ, விரும்பாமலோ இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் அனைவரும் இணையும் நிலை உருவாகிவருகிறது. எனவே பாதுகாப்பான, நல்ல ஆப்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தத் தொடங்குவது நல்லது’’ என்றார்.

இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், கணிசமான பணத்தை இழக்கவேண்டியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்!

ஆன்லைன் மோசடி தமிழகம் முதலிடம்!

ஆன்லைன் மோசடி வாயிலாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் ரூ.56 கோடி பறிகொடுத்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக் கிறது. அண்மையில் வெளியான மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தமிழ்நாடு, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் அதிகமான ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றிருப்பதாகவும் அதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டு மக்கள் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தின் மதிப்பு ரூ.4 கோடியாக இருந்திருக்கிறது. இது 2017-18-ம் நிதி ஆண்டில் ரூ.41 கோடியாக அதிகரித்து, 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.11 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த மூன்று நிதி ஆண்டுகளில் மொத்தம் 56 கோடி ரூபாயை ஆன்லைன் மோசடிமூலம் தமிழக மக்கள் இழந்திருக்கிறார்கள். இதேபோல, ஹரியானா மக்கள் ரூ.31 கோடியையும் மகாராஷ்ட்ரா மக்கள் ரூ.46 கோடியையும் டெல்லி மற்றும் கர்நாடகா மக்கள் தலா ரூ.18 கோடியையும் இழந்திருக்கிறார்கள்.

%d bloggers like this: